TNPSC Thervupettagam

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட ஜோதி

June 16 , 2024 14 days 140 0
  • சிறு வயது ஆசைகளையும் லட்சியங்களையும் கைவிடுவதற்கான சூழலே பெரும்பாலானவர்களுக்கு வாய்த்துவிடுகிறது. சிலரே தங்கள் லட்சியத்தை எட்டிப் பிடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஜோதி ரத்தேர். 55 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்திருக்கிறார்!
  • மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஜோதி. மலையேற்றத்தின் மீதுள்ள ஆசை திருமணம், தொழில், குழந்தைகள், குடும்பம் போன்றவற்றால் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. ஆனாலும் சாகச விளையாட்டுகள், நடனம் போன்றவற்றில் தன் முத்திரைகளைப் பதித்து போபாலுக்குப் பெருமை தேடித் தந்துகொண்டேயிருந்தார் ஜோதி.
  • கடமைகள் எல்லாம் ஓரளவு முடிந்த பிறகு, 48 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஒருமுறை ஏறிவிட வேண்டும் என்கிற எண்ணம் வலுவாக உருவானது. ஜோதியின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட குடும்பத்தினர், அவருக்குத் தங்கள் ஆதரவை வழங்கி உற்சாகப்படுத்தினர். ஆனால், 42 வயதுக்கு மேல் யாரையும் ஏற்றுக்கொள்வதில்லை என்று மலையேற்ற நிறுவனங்கள் கூறிவிட்டன.
  • “சின்ன வயதில் ரேடியோவில் ஒரு தலைவரின் பேச்சைக் கேட்டேன். தனது அஸ்தியை இமயமலை மீது தெளிக்க வேண்டும் என்றார். இறந்த பிறகும்கூட இமயமலை மீது தங்கள் அஸ்தியையாவது தூவ வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றால், அந்த இமயமலை எவ்வளவு முக்கியமானது என்பது புரிந்தது. அதுதான் எனக்கு 48 வயதில் மலையேறும் தைரியத்தைக் கொடுத்தது” என்கிறார் ஜோதி.

ஜோதி

  • மலையேற்றம் செல்ல அனுமதி கிடைக்கும் வரை தன்னைத் தயார்படுத்திக்கொள்ள நினைத்த, அவர் அதற்கான பயிற்சியில் இறங்கினார். மெல்லோட்டம், உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், அருகில் உள்ள மலைகளில் ஏறுதல், மாரத்தானில் ஓடுதல் என்று கடுமையாக உழைத்தார்.
  • மலையேறுவதற்கான ஆர்வம் கரோனா காலக்கட்டத்தில் பல மடங்கு அதிகரித்தது. ஐரோப்பாவின் உயர்ந்த மலைச் சிகரமான எல்ப்ரஸ் சிகரத்தை அடைய நினைத்தார் ஜோதி. ஆனால், ஜோதியின் வயதையும் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு குடும்பத்தினர் யோசித்தனர். தன் உடல் நிலை மீது நம்பிக்கை வைத்த ஜோதி, குடும்பத்தினரையும் சம்மதிக்க வைத்தார்.
  • தன் வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றான எல்ப்ரஸ் சிகரத்தை அவர் அடைந்தார். அதை முடித்தவுடன் 7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை அடைய வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. சிலியிலும் ஆஸ்திரேலியாவிலும் மலையேற்றத்தை வெற்றிகரமாக முடித்தார். இந்தச் சாதனைகளுக்காக 2022ஆம் ஆண்டு ‘போபால் ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2023ஆம் ஆண்டு எவரெஸ்ட் பயணத்தை ஆரம்பித்தார். 8,160 மீ. உயரத்தில் வானிலை மிக மோசமாக இருந்ததால், திரும்ப வேண்டிய சூழல் உருவானது. வெற்றியின் அருகில் சென்று திரும்பியது ஜோதியை மிகவும் பாதித்தது. முதல் முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் ஓராண்டு காத்திருக்கும் சூழல் உருவானது. மீண்டும் பயணத்துக்கு நிதி திரட்ட, ஸ்பான்சர்களைப் பிடிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
  • 2024, மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியாக, தன் இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார் ஜோதி. 7,800 மீ. உயரத்தில் பலத்த காற்று வீசியது. அதனால், சில நாள்கள் வெவ்வேறு முகாம்களில் தங்க வேண்டியிருந்தது.
  • மே 19 காலை 6.30 மணிக்கு, 8,848.86 மீ. உயரத்தில் இருந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜோதி! இதன் மூலம் 53 வயதில் சங்கீதா பாலின் செய்த சாதனையை முறியடித்திருந்தார் ஜோதி. எவரெஸ்ட்டை அடைந்த அதிக வயதான பெண் என்கிற பெருமையைப் பெற்றார்! இவருக்கு 3 ஷெர்பாக்கள் பயணத்தில் உதவியிருக்கின்றனர். எந்த மலையேற்றப் பயிற்சி மையத்திலும் சேர்ந்து பயிற்சி பெறாமல், சுயமாகப் பயிற்சி செய்து எவரெஸ்ட்டை எட்டிப் பிடித்திருக்கும் ஜோதி, வயதைக் காரணம் காட்டி எதையும் தடுக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்.  

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories