ஏ.ஐ. சாட்பாட் போட்டியில் களமிறங்கிய இந்தியா
- தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) தயாரிப்புகளை (Product) உருவாக்குவதில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. அதேநேரம், இத்தகைய முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் சுந்தர்பிச்சை, சத்ய நாதெள்ளா, அர்விந்த் கிருஷ்ணா, சாந்தனு நாராயண் உள்ளிட்ட இந்தியர்கள் உள்ளனர்.
- சில இந்திய ஐ.டி. நிறுவனங்கள் உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் அவை சேவைத் துறையில்தான் முத்திரை பதித்து வருகின்றன. நம் நாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தேடுபொறி, செயலி உள்ளிட்ட முக்கிய தயாரிப்புகள் உலக அளவில் பிரபலமாக இல்லை. இதில் விதிவிலக்காக, வங்கித் துறையில் பணப்பரிவர்த்தனைக்காக இந்தியா உருவாக்கிய UPI பிரபலமடைந்து வருகிறது. இன்றைக்கு உலகின் பல நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
- இந்த சூழலில், சீனாவைச் சேர்ந்த லியாங் வென்ஃபெங்க் (Liang Wenfeng) என்பவர் நிர்வகித்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனம் டீப்சீக்-ஆர்1 (DeepSeek-R1) என்ற சாட்பாட்டை (மனிதர்-கணினி இடையிலான உரையாடல்) கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி உள்ளிட்ட சாட்பாட்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான செலவில் டீப்சீக் சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இது அறிமுகமான சில வாரங்களில் உலகம் முழுவதும் பலரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
- மற்ற சாட்பாட்கள் ஆங்கில மொழியில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டவை. ஆனால் டீப்சீக் சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் பயிற்றுவிக்கப்பட்டதாகும். இது சீனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதோடு இது ஒரு ஓப்பன் சோர்ஸ் என்பதால் இதனுடைய நிரல்களைப் (codes) யார் வேண்டுமென்றாலும் பார்க்கலாம், உபயோகப்படுத்தலாம், தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம் என்பதோடு ஆவணங்களையும் வடிவமைத்துக் கொள்ளலாம்.
- இப்படி பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதால் டீப்சீக்கின் வரவு, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டை மட்டுமல்லாமல் உலகெங்கும் இத்துறையில் ஒரு சுனாமியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சாட்பாட் செயலிக்கு இதயமாக விளங்கும் ஜிபியு தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் என்விடியா நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 593 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது. இதுதவிர இத்துறை சார்ந்த பல நிறுவனங்களின் சந்தை மதிப்பும் சுமார் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தன. இதனால், டீப்சீக் போட்டியை சமாளிக்கும் வகையில் மற்ற நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை துரிதப்படுத்த களமிறங்கி உள்ளன.
- இப்படி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்து, பிரபல அமெரிக்க நிறுவனங்களின் சந்தை முதலீட்டை அதலபாதாளத்துக்குத் தள்ளிய டீப்சீக் சாட்பாட்டுக்கு போட்டியாக சொந்த சாட்பாட்டை உருவாக்க இந்தியாவும் தீவிரமாக களமிறங்கி உள்ளது.
இந்தியா AI திட்டம்:
- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் `இண்டியாAI மிஷன்’ திட்டத்தை 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இதன் நோக்கங்கள்: 1) செயற்கை நுண்ணறிவு என்கிற தொழில்நுட்பத்தை இந்தியர்கள் அனைவரும் அணுகுவதாக இருக்க வேண்டும் 2) செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுக்க வேண்டும் 3) இத்தொழில்நுட்பத்தைப் பொறுப்போடு பயன்படுத்த வேண்டும் 4) சுகாதாரம், வேளாண்மை போன்ற முக்கியமான துறைகளுக்கு தேவையான தீர்வுகளை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்க வேண்டும் என்பதாகும்.
- இந்தியாவில் இத்துறையில் Pipeshift, Yellow.AI, Soket Labs, Von Neumann போன்ற துளிர் நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இயங்கி வருகின்றன. இண்டியாAI திட்டத்துக்காக மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.10,371.9 கோடியை ஒதுக்கீடு செய்தது. இதில் சுமார் 44% நிதியானது அடுத்த ஐந்தாண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளின் (GPU) ஒருங்கிணைந்த திறனை உருவாக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தின்படி, சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டத்துக்கு இந்த ஆண்டுக்கென ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 18,693 GPU-களை வாங்க 10 நிறுவனங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இவை இயந்திர கற்றல் கருவிகளை உருவாக்கத் தேவையான உயர்நிலை சிப்கள் ஆகும். இவை ஒரு அடிப்படை மாதிரியை உருவாக்கப் பயன்படும். இது இந்தியாAI திட்டத்தின் ஆரம்ப இலக்கான 10,000-ஐ விட அதிகமாகும்.
சிறப்பு மையங்கள்:
- கடந்த 2023-ம் ஆண்டு விவசாயம், சுகாதாரம் மற்றும் நகரங்களின் நீடித்தத் தன்மைக்கென அறிவிக்கப்பட்ட மூன்று சிறப்பு செயற்கை நுண்ணறிவு மையங்களோடு இந்த ஆண்டு ரூ.500 கோடி செலவில் AI-கல்விக்கென ஒரு புதிய சிறப்பு மையத்தையும் அமைக்கவிருப்பதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
- இளைஞர்களை தொழில் துறை சார்ந்த நிபுணத்துவத்துடன் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட உள்ள ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு சிறப்பு மையங்களுக்கான திட்டங்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மையங்கள் `மேக் ஃபார் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ உற்பத்திக்கென உலக அளவில் பிரபலமான நிறுவனங்களுடன் இணைந்து அமைக்கப்படும். இந்த முன்னெடுப்பானது பாடத்திட்ட வடிவமைப்பு, பயிற்சியாளர்களுக்கான பயிற்சி, திறன் சான்றிதழ் கட்டமைப்பு மற்றும் வழக்கமான மதிப்பீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்தியாவாலும் உருவாக்க முடியும்:
- இதுகுறித்து SAP, Infosys நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும் செயற்கை நுண்ணறிவு துளிர் நிறுவனமான (ஸ்டார்ட்-அப்) Vianai Systems இணை நிறுவனருமான விஷால் சிக்கா கூறும்போது, ``டீப்சீக் மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். ஆனால் இது அந்நிறுவனத்தைச் சேர்ந்த நூறு பேர்களால் மட்டுமே உருவாக்க முடியும் வேறு யாராலும் உருவாக்க முடியாது என்பதல்ல.
- நாமும் இதற்கு மேல் தேசிய மாதிரிகளை நம் நாட்டுத் தரவுகளைக் கொண்டும் நம் நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் மொழிகளைக் கொண்டும் சிறப்பான ஒன்றை உருவாக்க முடியும். நான் இதுவரை செயற்கை நுண்ணறிவுத் துறையில் 7 அலைகளைப் பார்த்திருக்கிறேன். இன்னும் அது தொடரும். மற்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைவிட டீப்சீக் 10-45 மடங்கு திறன் மிக்கதாகும். அடுத்த 90 நாள்களில் இதுபோல பல மாதிரிகள் இதைவிட குறைவான செலவிலும், திறன் மிக்கதாகவும் அறிமுகமாகக்கூடும்.
- மற்ற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில், இஸ்ரோவால் குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்ட 'சந்திரயான்' திட்டம் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றது. அதற்குக் காரணம் நம்மிடையே இருக்கும் திறமையாளர்கள். அவர்களின் திறன், பண்பாடு, நம்மால் முடியும் என்கிற மனநிலை ஆகியவையாகும்’’ என்றார்.
- இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு என அமைக்கப்பட்டிருக்கும் இந்தியாAI திட்ட அமைப்புக் குழுவில் இவர் ஒரு ஆலோசகராக சேர்ந்து அதை வழிநடத்தக் கூடுமென தெரிகிறது.
ஆண்டு இறுதிக்குள்..
- சமீபத்தில் பிரபல ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வட்டமேசைக் கூட்டமொன்றில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், `இந்த ஆண்டு இறுதிக்குள் மிகவும்திறன் மிக்க, குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட் இந்தியாவில் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து விடும். இது தற்சமயம் செயல்பாட்டில் இருக்கும் சில AI மாதிரிகளை விடச் சிறிதாக இருந்தாலும் உலக அளவில் போட்டியிடும் அளவுக்கு சிறப்பாக இருக்கும்’ என பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.
- இதுபோல, என்விடியாவின் ஜிபியு-களுக்கு நிகரான ஜிபியு-களை உருவாக்கும் முயற்சியில் இந்தியா களமிறங்கி உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலைப்பாட்டை மாற்றிய சாம்..
- ஓப்பன் AI-யின் நிறுவனர் சாம் ஆல்ட்மென் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வருவதோடு அந்தந்த நாட்டின் பிரதமர், அதிபர்களையும், தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில், இந்தியா வந்திருந்த சாம் ஆல்ட்மேன், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்துப் பேசினார். அப்போது, “பொதுவாக ஏஐ-க்கு இந்தியா மிக முக்கியமான சந்தை. ஓபன் ஏஐ-ஐ பொருத்தவரை, 2-வது மிகப்பெரிய சந்தை. கடந்த ஓராண்டில் இந்திய பயனாளர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் ஏஐ சாட்பாட்டை சொந்தமாக உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும். ஏஐ புரட்சியில் இந்தியாவும் பங்கு வகிக்கும்” என்றார்.
- ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, “இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு நாடும் சாட்ஜிபிடி போன்ற ஒரு தயாரிப்பை உருவாக்க முடியாது. எனவே இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம்” என கூறியிருந்த நிலையில் அவர் இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். விண்வெளித் துறையில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வரும் இந்தியா, இனிவரும் நாள்களில் ஐ.டி. தயாரிப்புகளின் உருவாக்கத்திலும் முத்திரை பதிக்கும் என நம்புவோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)