TNPSC Thervupettagam

ஏ.ஐ. பந்தயத்தில் இந்தியாவுக்கு எந்த இடம்?

February 17 , 2025 6 days 24 0

ஏ.ஐ. பந்தயத்தில் இந்தியாவுக்கு எந்த இடம்?

  • செயற்கை நுண்ணறிவு (AI) உலகைக் கடந்த சில வாரங்களாகக் கலக்கிக்கொண்டு இருக்கிறது, சீனச் செயலி ஒன்று. பெயர் டீப்-சீக் (DeepSeek). ஆழ்நோக்கு என்று பொருள் சொல்லலாம். கணினிகள் வெகு காலம் கணக்கிடும் கருவியாகவே இருந்தன. இரண்டாவது கட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகுந்தது.
  • இது மூன்றாவது கட்டம். கணினிக்குள் ஓர் அறிவுத் தளத்தை நிறுவி, பெருமளவில் தரவுகளை நிரப்பி, அதை அறிவார்ந்த இயந்திர​மாகச் செயல்பட வைக்கிற செயற்கை நுண்ணறிவின் காலமிது. மனித மூளை கோடிக்​கணக்கான நியூரான்​களாலும் அதன் சிக்கலான இணைப்பு​களாலும் இயங்கு​கிறது.
  • இதைப் பிரதி​யெடுத்து உருவாக்​கப்​பட்​டதுதான் ஆழ்கற்றல் (deep learning) என்னும் தொழில்​நுட்பம். செயற்கை நியூரான்​களாலும் அதன் வலையமைப்​பாலும் உருவாக்​கப்பட்ட இந்தத் தொழில்​நுட்​பம்தான் செயற்கை நுண்ணறிவை இயக்கு​கிறது. ஆகவே, இந்தப் புதிய சீனச் செயலிக்கு ‘டீப்​-சீக்’ (ஆழ்நோக்கு) எனும் பெயர் பொருத்​த​மானது.

சிலிக்கான் நாடி:

  • ஜனவரி 27ஆம் தேதிக்கு முன்புவரை சந்தையில் முன்னணியில் இருந்தது ‘ஓபன் ஏ.ஐ.’ நிறுவனத்தின் ‘சாட் ஜிபிடி’ என்னும் செயலி. 2022இல் நிறுவப்​பட்டது. மெட்டா எனும் செயலி காலத்தால் முந்தையது (2015), ஃபேஸ்​புக்கால் நிறுவப்​பட்டது. ஜெமினியும் கோபைலட்டும் காலத்தால் பிந்தியவை (2023).
  • முறையே கூகுள், மைக்ரோ​சாஃப்ட் நிறுவனங்கள் உருவாக்​கியவை. இந்தச் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளுக்கு இடையிலான ஓர் ஒற்றுமை துலக்​க​மானது. இவை அனைத்தும் சிலிக்கான் பள்ளத்​தாக்​கி​லிருந்து இயங்குபவை. அதுதான் கணினித் தொழில்​நுட்​பத்​துக்கும் சமூக வலைதளங்​களுக்கும் தலைமையகம். இந்த அமெரிக்க மேலாதிக்​கத்​தைத்தான் ‘டீப்​-சீக்’ அசைத்​திருக்​கிறது
  • டீப்-சீக் மற்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளுக்கு இணையான ஆற்றல் கொண்டது. மற்ற செயலிகளைப் போலவே மனிதனின் அறிவுச் செயல்​பாட்டை விஞ்சக்​கூடியது. ஆனால், இரண்டு வேறுபாடுகள் டீப்-சீக்கைத் தனித்து நிறுத்து​கின்றன. முதலா​வதாக, இதை உருவாக்க 6 மில்லியன் டாலர் (ரூ.525 கோடி) செலவானதாக அந்த நிறுவனம் தெரிவிக்​கிறது. இது அமெரிக்கச் செயலிகளைவிட 20 முதல் 30 மடங்கு சகாயமானது.
  • இரண்டாவது - டீப்-சீக் தனது நிரல்​களைப் பொதுவெளியில் பகிர்ந்​து​கொண்​டிருக்​கிறது (open source). இதைப் பயனர்கள் தரவிறக்கி அவரவர் பயன்பாட்டுக்கு இணங்க மேம்படுத்​திக்​கொள்​ளலாம். மாறாக, ஓபன் ஏ.ஐ. பெயரளவில் திறந்த மூலம் எனப்பட்​டாலும், உண்மையில் மூடுண்ட புத்தக​மாகவே (closed source) இருக்​கிறது. மற்ற அமெரிக்கச் செயலிகளும் அப்படித்​தான். ஆக, விதிப்​படியே விளையாடி சிலிக்கான் விக்கெட்டுகளை வீழ்த்த முனைகிறது சீனா.

அமெரிக்​காவின் எதிர்வினை:

  • டிரம்ப் பதவியேற்ற இரண்டு நாள்களிலேயே செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுக்​காகத் தனியார் துறைக்கு 500 பில்லியன் டாலர் (ரூ.44 லட்சம் கோடி) வழங்கி​னார். வருங்​காலத் தொழில்​நுட்பம் செயற்கை நுண்ணறி​வில்தான் இருக்​கிறது என்றும் குறிப்​பிட்​டார்.
  • அப்போது அவருக்குத் தெரியாது - அடுத்த ஐந்து நாட்களுக்குள் டீப்-சீக் அரங்கேறும். அது அமெரிக்​காவின் முற்றுரிமையைக் கேள்விக்​குள்​ளாக்கும் என்று. அமெரிக்கா அதிர்ச்​சி​யடைந்தது. என்றாலும் புதிய செயலி சக்தி வாய்ந்தது என்பதை டிரம்ப் மறுக்க​வில்லை. டீப்-சீக் அமெரிக்காவை விழித்துணர வைத்திருக்​கிறது என்றார்.

ஏ.ஐ. சந்தையில் இந்தியா:

  • ஸ்டான்​போர்டு பல்கலைக்​கழகம் வெளியிட்ட ஓர் ஆய்வின்படி அமெரிக்கா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்து நான்காவது இடத்தில் நிற்கிறது இந்தியா. மத்தியத் தகவல் தொழில்​நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதைப் பெருமை​யுடன் குறிப்​பிட்​டார். இந்தியா​வுக்குச் சாதகமாக இரண்டு அம்சங்​களையும் குறிப்​பிட்​டார். ஒன்று, இங்கே கணினித் தொழில்​நுட்பம் சார்ந்த அறிவுப்புலம் செழுமை​யுடன் விளங்​கு​கிறது. இரண்டு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அடிப்படை மாதிரிகளை உருவாக்கத் தனிச்​சிறப்பான சிப்புகள் (chips) வேண்டும்.
  • இதை என்விடியா (Nvidia) என்கிற அமெரிக்க நிறுவனம் தயாரிக்​கிறது. இந்தச் சிப்புகளை இந்திய அரசு வாங்கி வைத்திருக்​கிறது; அவை ஆய்வாளர்​களின் பயன்பாட்டுக்கு வழங்கப்​படும். அடுத்த 10 மாதங்​களுக்குள் இந்தியா ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுச் செயலியை உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்​தார். அமைச்சர் குறிப்​பிடும் இரண்டு அம்சங்​களும் இந்தியா​வுக்குச் சாதகமானவை​தாம். ஆனால், அடிப்​படையில் இந்தியா​வுக்கு முன் சில தடைக்​கற்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான மூன்று அம்சங்​களைப் பரிசீலிப்​போம்.

ஆய்வுப் புலத்தில் அலட்சியம்:

  • முதலா​வதாக, ஆய்வுப் புலத்தின் மீது இந்திய அரசுக்கு இருக்கும் பாராமுகம். நமது உள்நாட்டு உற்பத்​தியில் 0.6% மட்டுமே ஆய்வுப் பணிகளுக்​காகச் (R&D) செலவிடப்​படு​கிறது. அதே வேளையில் சீனா செலவிடும் விகிதம் 2.5%, அமெரிக்கா 3.5%. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை (4.3 டிரில்​லியன் டாலர்) அமெரிக்கா (29 டிரில்​லியன் டாலர்), சீனா (18.5 டிரில்​லியன் டாலர்) ஆகிய நாடுகளின் மதிப்போடு ஒப்பிடவும் வேண்டும். அதாவது, நமது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நாம் 0.6% செலவிடும்​போது, அமெரிக்கா அவர்களது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.5% செலவிடு​கிறது. ஆகவேதான் இந்தியாவில் புதிய கண்டு​பிடிப்புகள் அரிதாகி​விட்டன.

உள்கட்​டமைப்பில் இல்லை தற்சார்பு:

  • இரண்டாவதாக, உள்கட்​டமைப்பு. இங்கே உள்கட்​டமைப்பு என்பது இணையம், செமி கண்டக்டர், திறன்​பேசி, கணினி முதலானவற்றைக் குறிக்​கும். இவற்றின் மூலப்​பொருள்கள் பலவற்றுக்கு சீனா உள்படப் பல அயல்நாடு​களைச் சார்ந்​துதான் நாம் இயங்கிவரு​கிறோம்.
  • அஸ்வினி வைஷ்ணவ் குறிப்​பிட்ட என்விடியா சிப்புகளை பைடன் அரசு சீனாவுக்கு வழங்க​வில்லை. தடை விதித்தது. டீப்-சீக், அதற்கு முந்தைய தலைமுறையைச் சார்ந்த ஆற்றல் குறைந்த சிப்பு​களால் உருவானது. சீனாவின் தற்சார்பு மிக்க உள்கட்​டமைப்பால் இந்தச் சவாலை எதிர்​கொள்ள முடிந்தது.

கற்றவர் தாண்டும் கரை:

  • மூன்றாவதாக, இந்தியாவில் உருவாகும் திறன் வாய்ந்த அறிவாளர்கள் பலர் அயல் நாடுகளுக்குப் போவதும் அங்கே கொடி நாட்டு​வதும் நடக்கிறது. வாட்ஸ்​அப்பில் அடிக்கடி ஒரு பட்டியல் வரும். அமெரிக்​காவின் தலைசிறந்த கணினி நிறுவனங்​களுக்குத் தலைமை தாங்குகிற இந்தி​யர்​களின் பட்டியல். சத்யா நாதெள்ளா (மைக்ரோசாஃப்ட்), சுந்தர் பிச்சை (கூகுள்) என்று அப்பட்​டியல் நீளும்.
  • சரி, இப்படி ஒரு பட்டியலை ஏன் சீனர்கள் வெளியிடு​வ​தில்லை? இந்தக் கேள்விக்கான பதில் சமூக வலைதளங்​களில் இருக்​கிறது. நாம் அதிகமும் பயன்படுத்தும் கூகுள், வாட்ஸ்​-அப், ஃபேஸ்​புக், டிவிட்டர் (எக்ஸ்), யூடியூப், அமேசான் முதலான தளங்களின் உயிர்நாடி சிலிக்கான் பள்ளத்​தாக்கில் இருக்​கிறது.
  • சீனர்கள் இந்த அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்து​வ​தில்லை. மாறாக, மேற்கூறிய தளங்களுக்கு ஈடாக முறையே ‘பெய்டு’, ‘வீ சாட்’, ‘பெங் யூ’, ‘வெய் போ’, ‘யூ கூ’, ‘அலிபாபா’ முதலான தளங்களைப் பயன்படுத்து​கிறார்கள். இவை அனைத்தும் சீனர்​களின் சொந்தத் தயாரிப்புகள். விளைவு, திறன் மிகுந்த சீன அறிவாளர்​களுக்குச் சீனாவிலேயே போதிய வேலையும் வாய்ப்பும் கிடைக்​கின்றன. சீனப் பயனர்​களின் மதிப்பு​மிக்க தரவுகள் கடல் தாண்டி அந்நியர்​களின் கைகளை அடைவதில்லை.

என்ன செய்ய​லாம்?

  • நாம் நமது நாட்டில் கல்வியையும் அதன் வழியாக அறிவியல் நோக்கையும் வளர்த்​தெடுக்க வேண்டும். அறிவியல் கண்ணோட்​டத்தின் அவசியத்தை மனிதநே​யத்​துக்கு நிகராக நிறுத்து​கிறது நமது அரசமைப்புச் சட்டம். அறிவியல் நோக்கு வளர்ந்தால் நமது அறிவுப்பு​லமும் ஆய்வுப்பு​லமும் வலுவாகும். அறிவியல் உள்கட்​டமைப்பு வேர்பிடிக்​கும், வளரும். நமது அறிவாளர்​களின் திறன் இந்தத் திருநாட்டை வளப்படுத்​தும். அப்போது புதிய செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் இங்கேயே உருவாகும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories