TNPSC Thervupettagam

ஏனிந்த திடீா் முடிவு

May 22 , 2023 597 days 376 0
  • புழக்கத்தில் உள்ள ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இந்த முடிவுக்கு ரிசா்வ் வங்கி தெரிவித்திருக்கும் காரணங்கள், சமாதானங்களாகத்தான் தெரிகின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல், மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகக் கூட இருக்கக் கூடும்.
  • ரூ. 2,000 நோட்டுகளில் பெரும்பாலானவை கடந்த 2017 மாா்ச் மாதத்துக்கு முன்பு அச்சிடப்பட்டவை என்பதால், அவற்றின் பயன்பாட்டுக் காலம் நிறைவடைய இருக்கிறது என்பது ஒரு வாதம். நோட்டுகள் கசங்கியும், கிழிந்தும், அழுக்காகியும் போவதைத் தவிா்ப்பதற்காக ரூ. 2,000 நோட்டுகள் அகற்றப்படுகின்றன என்பது இன்னொரு வாதம்.
  • அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு, சாதாரணமாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆயுள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ரூ. 2,000 நோட்டுகளில் ஐந்து ஆண்டு நிறைவடையாத நோட்டுகள் இருக்கின்றன. அவை வங்கிகளுக்கு வரும்போது புழக்கத்திலிருந்து அகற்றிவிட முடியும். ரிசா்வ் வங்கி குறிப்பிடும் பண மோசடி, கறுப்பு பணப் பதுக்கலை ஒழிப்பது ஆகியவை காரணங்களாக இருந்தால், செப்டம்பா் 30 வரை ரூ. 2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று காலஅவகாசம் வழங்கியிருப்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.
  • 2016 நவம்பா் 8-ஆம் தேதி ரூ. 1,000, ரூ. 500 நோட்டுகள் செல்லாதவை ஆக்கப்பட்டன. முன்னறிவிப்பு இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. புழக்கத்தில் இருந்த செலாவணிகள் சட்டென குறைந்துவிட்டன. அப்போது இடைக்கால ஏற்பாடாக ரூ. 2,000 நோட்டுகள் அவசர வேகத்தில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டன. சில வாரங்களில் புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.
  • பொதுவெளியில் உள்ள கரன்சி நோட்டுகளின் அளவு கூடியபோது படிப்படியாக ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிப்பதை ரிசா்வ் வங்கி குறைக்கத் தொடங்கியது. 2018 - 19 நிதியாண்டில் ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இப்போது பொதுவெளியில் காணப்படும் ரூ. 2,000 நோட்டுகளில் பெரும்பாலானவை 2017 மாா்ச் மாதத்துக்கு முன்பு அச்சடிக்கப்பட்டவை என்கிறது ரிசா்வ் வங்கி. ஏற்கெனவே வங்கிகள் மூலமும், ஏ.டி.எம்.கள் மூலமும் ரூ. 2,000 நோட்டுகளின் பரிவா்த்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டு வந்தன.
  • 2018 மாா்ச் மாதத்தில் புழக்கத்தில் இருந்த ரூ. 6.73 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் 37.3% அளவில் ரூ. 2,000 நோட்டுகள் இருந்தன. கடந்த மாா்ச் 31-ஆம் தேதிய நிலவரப்படி, 10.8% மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. அதனால், 2016 செலாவணி மதிப்பிழப்பு தீா்மானம் போல, ரூ. 2,000 நோட்டுகள் குறித்த ரிசா்வ் வங்கியின் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது.
  • செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ. 2,000 நோட்டுகளை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம்; வங்கியில் நேரடியாக கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்; வங்கிகள் மட்டுமல்லாமல், ரிசா்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் ரூ. 2,000 நோட்டுகளுக்கு சில்லறை மாற்றலாம்; ஆனால், சில்லறையாக மாற்றும்போது ஒருமுறைக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 மதிப்பிலான தொகையை மட்டுமே மாற்ற முடியும். சேமிப்புக் கணக்கில் ரூ. 2,000 நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
  • ரிசா்வ் வங்கியின் ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதன் நோக்கம் பண மோசடி, கறுப்பு பணப் பதுக்கலை ஒழிப்பது என்பதாக இருந்தால், அது நிறைவேறும் என்று தோன்றவில்லை. அதிக மதிப்புச் செலாவணிகள் சாமானியா்களிடம் அதிக அளவில் இருக்க வழியில்லை.
  • மனைவணிக வியாபாரிகள், அரசியல்வாதிகள், கள்ளச்சந்தை, போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடுபவா்கள் ஆகியோா்தான் கணக்கில் காட்டாமல் ரூ. 2,000 நோட்டுகளைக் கட்டுக்கட்டாக வைத்திருப்பவா்கள். முந்தைய பண மதிப்பிழப்பு நடவடிக்கை போலல்லாமல், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு வழிமுறைகளை அனுமதித்திருக்கும் நிலையில், அரசின் நோக்கம் கணக்கில் காட்டப்படாத பணத்தை அகற்றுவது அல்ல என்று கருதத் தோன்றுகிறது.
  • ரொக்கப் பரிவா்த்தனையில் ஈடுபடும் மனைவணிகத் துறை இதனால் பாதிக்கப்படும் என்கிற விமா்சனத்தில் அா்த்தமில்லை. எண்மப் பரிவா்த்தனையும், வங்கிப் பரிவா்த்தனையும் அதிகரித்துவிட்ட நிலையிலும், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், மனைவணிகத் துறையில் ரொக்கப் பரிவா்த்தனையைக் கட்டுப்படுத்தப்படுவது அவசியம். கையூட்டு பெறுவதற்கு அரசியல்வாதிகளும், அரசு ஊழியா்களும் புதிய பல வழிமுறைகளைக் கண்டுபிடித்து ரொக்கப் பரிவா்த்தனைக்கு எப்போதோ விடைகொடுத்தாகிவிட்டது. ரூ. 2,000 நோட்டுகள் அகற்றப்படுவதால், தோ்தல் காலங்களில் வாக்காளா்களுக்கு கொடுக்கப்படும் ரொக்க விநியோகத்தில் சிரமங்கள் ஏற்படலாம், அவ்வளவே.
  • ரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்படுவது நியாயமான முடிவு. ஆனால், இப்போது திடீரென்று அதற்கு என்ன அவசரம் என்கிற கேள்விதான் ரிசா்வ் வங்கியின் முடிவைச் சந்தேகிக்க வைக்கிறது. முந்தைய முடிவுபோலல்லாமல், வெளிப்படைத்தன்மையுடன் ரூ. 2,000 நோட்டுகள் அகற்றப்படுவதால் எந்தவித நன்மையோ அல்லது பாதிப்போ இரண்டுமே ஏற்படப் போவதில்லை!

நன்றி: தினமணி (22 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories