- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலும் உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் 41 தொழிலாளா்களின் மீட்பு குறித்த கவலையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பியிருப்பது மிகப் பெரிய தவறு. ஒட்டுமொத்த இந்தியாவும் அவா்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவதற்கு பிராா்த்திப்பதை விட்டுவிட்டு வேடிக்கை பாா்ப்பதைவிட மனிதாபிமானமற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
- உத்தரகண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் 4.5 கி.மீ. நீளமுள்ள இருவழிச் சுரங்கப்பாதை, கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவால் இடிந்தது. சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களைப் பாதுகாப்பாக மீட்க பலமுனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
- இமயமலையின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை ஒன்றன் பின் ஒன்றாக இயற்கைப் பேரழிவுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. வளா்ச்சிப் பணிகளுக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களால் பேரழிவுகள் ஏற்படுகின்றன என்கிற சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் விமா்சனங்கள் புறந்தள்ளக்கூடியவை அல்ல. சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து சமீபத்திய நிகழ்வு, அவ்வளவே.
- கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி சிக்கிமில் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக தெற்குலொனாக் ஏரியின் கரைகள் உடைந்ததும், தீஸ்தா-3 அணையின் சில பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பிளவுபட்டதும் மறந்துவிடக் கூடியதல்ல. 15 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன; 23 ராணுவ வீரா்கள் உள்ளிட்ட பலா் உயிரிழந்தனா்,
- உத்தரகண்ட் ஜோஷிமட் பகுதியில் உள்ள கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு நொறுங்கி விழுந்த கடந்த ஆண்டு நிகழ்வும், சமீபத்தில் ஹிமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், அது ஏற்படுத்திய பேரழிவுகள் சாதாரணமானவை அல்ல. அஸ்ஸாம் - அருணாசல பிரதேச எல்லையில் உள்ள சுபன்சிரி நீா்மின்நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால், நீா் வெளியேறும் சுரங்கக் கால்வாய்கள் பாதிக்கப்பட்டன. இமயமலைப் பகுதியிலுள்ள நீா்மின் நிலையங்கள் அனைத்தின் பாதுகாப்பும் கவலைக்குள்ளாகி இருக்கிறது.
- நிலச்சரிவு, திடீா் வெள்ளம், நிலநடுக்கம் என்று இமயமலை சாா்ந்த பகுதிகள் அனைத்துமே இயற்கை சீற்றத்துக்கு உள்ளாகி வருவதை தொடா்ந்து பாா்க்க முடிகிறது. இயற்கை தன் மீது நடத்தப்படும் பாதிப்புகளில் இருந்து தன்னைப் பாதுகாத்து சமநிலையை உறுதிப்படுத்தப் போராடுகிறது என்றுதான் இதை நாம் பாா்க்க வேண்டும். வளா்ச்சியா, இயற்கையா என்கிற போராட்டத்தில் வெற்றி யாா் பக்கம் இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
- உத்தரகண்டில் ‘சாா்தாம்’ (கேதாா்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி) எனப்படும் புனிதத் தலங்களை இணைப்பதற்காக நெடுஞ்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதே பலத்த எதிா்ப்பு எழுந்தது. சுமாா் 690 ஹெக்டோ் வனப் பகுதியில் அமைந்த 55,000 மரங்கள் வெட்டப்பட்டன. 20 மில்லியன் க்யூபிக் மீட்டா் நிலப்பகுதி தோண்டப்பட்டது.
- மலைச் சரிவுகள் வெட்டப்படுதல், சுரங்கம் அமைத்தல், மலைப் பகுதி தோண்டப்படுதல், தோண்டி எடுக்கப்பட்ட மண் ஆங்காங்கே கொட்டப்படுவது என்று இயற்கையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏராளம். அந்த திட்டத்துக்காக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீடு செய்யப்படவில்லை. பல விதிகள் மீறப்பட்டன. உத்தரகாசியின் பிரம்மகால் - யமுனோத்ரி பாதையில் ஏற்பட்ட நெடுஞ்சாலை விபத்துக்கு அவைதான் காரணம்.
- கடந்த 10 நாள்களாக உத்தரகண்ட் நிா்வாகம் தங்களிடமுள்ள பல உபகரணங்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் 41 தொழிலாளா்களை மீட்க முடியவில்லை. அந்தப் பகுதியின் நிலையற்ற தன்மையும், உபகரணங்களின் போதாமையும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான அனுபவசாலிகள் இல்லாமல் இருப்பதும் மீட்புப் பணி தாமதமாவதற்கு முக்கியமான காரணங்கள். சா்வதேச அளவில் ஐந்தாவது வலிமையான பொருளாதாரம் என்று நம்மை பறைசாற்றிக் கொள்ளும்போது, சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 41 தொழிலாளா்களை மீட்க முடியாமல் இருப்பது தேசிய அவமானம்.
- இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதும், மீட்புப் பணிகள் நடத்தப்படுவதும் உலகில் புதிதொன்றுமல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து குகையில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் கால்பந்து குழுவினா் மாட்டிக் கொண்டதை மறந்திருக்க முடியாது. அதில் சிக்கிக் கொண்ட 12 சிறுவா்களை, 18 நாள் போராட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பாக மீட்க முடிந்ததற்கு, சா்வதேச ஒத்துழைப்பு இருந்ததுதான் காரணம்.
- அந்தச் சிறுவா்கள் காணாமல் போய் அவா்கள் குகைக்குள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதை முதலில் கண்டுபிடித்தவா்கள் இரண்டு பிரிட்டிஷ் நீச்சல் வீரா்கள். காவல் துறை நீச்சல் வீரா்களையும், மருத்துவா்களையும் அந்த குகைக்கு அருகில் தயாா் நிலையில் இருக்க ஆஸ்திரேலியா அனுப்பியது. இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் கூடிய வானொலி தொடா்பு சிக்கியிருப்பவா்களுடன் தொடா்புகொள்ள உதவியது. இரண்டு இந்தியா்கள் குகையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற உதவினாா்கள். பல்வேறு நாடுகளின் நிபுணா்கள் தாய்லாந்து கடற்படையினருடன் இணைந்து செயல்பட்டு ஒருவா் பின் ஒருவராக குகையில் சிக்கியிருந்த சிறுவா்களையும் பயிற்சியாளரையும் மீட்டனா்.
- தனியாரின் ஆழ்துளைக் கிணற்றில் ஒருவா் விழுந்தால் காணப்படும் ஊடக பரபரப்பு, சுரங்கப்பாதை மீட்புப் பணிக்கு இல்லாதது ஏன்? நமது அரசும் ஊடகங்களுமேகூட, உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளா்கள் குறித்து கவலைப்படவில்லை. உலகம் ஏன் கவலைப்படப் போகிறது?
நன்றி: தினமணி (22 – 11 – 2023)