TNPSC Thervupettagam

ஏன் குறைகிறது பொதுத் துறை வேலைவாய்ப்பு

April 13 , 2023 647 days 371 0
  • இந்தியாவின் பொதுத் துறையில் 1989ஆம் ஆண்டுவாக்கில், 22 லட்சம் நிரந்தர ஊழியர்கள் இருந்தனர். இன்றைக்கு அந்த எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டது. துறைவாரியாகச் சொன்னால் வங்கி, காப்பீடு, நிதித் துறையில் 31.12.2015 இல் 10.83 லட்சம் நிரந்தர ஊழியர்கள் இருந்தனர்; இது 31.12.2020இல் 9.68 லட்சமாகக் குறைந்தது.
  • அதேபோல, ரயில்வேயில் 1990இல் 16.51 லட்சமாக இருந்த நிரந்தர ஊழியர் எண்ணிக்கை 2021-22இல் 12.12 லட்சமாகக் குறைந்தது. இறுதியாகப் பொதுத் துறை நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை இன்றைக்கு 8.41 லட்சமாகச் சுருங்கிவிட்டது.
  • மொத்த மத்திய அரசு ஊழியர் எண்ணிக்கை 34 லட்சம்; இதில் 9.75 லட்சம் காலியிடங்கள். இவை அனைத்தும் அரசு ஆவணங்களில் உள்ளவைதான். கிட்டத்தட்ட 20 லட்சம் நிரந்தர வேலைவாய்ப்பு பறிபோயிருக்கிறது. வளர்ந்துவரும் எண்ணிக்கையிலான அந்த நிரந்தர வேலைவாய்ப்புகள் காணாமல் போய்விட்டன.
  • அதாவது வேலை உத்தரவாதம், கண்ணியமான சம்பளம், பஞ்சப்படி, முறையான வேலை நேரம், போனஸ், விடுமுறை, மருத்துவ வசதி. பள்ளி வசதி, மகப்பேறு விடுப்பு, பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள் ஆகியவை அடங்கிய கண்ணியமான வேலை என்பது காலியாகிவிட்டது.

லாபம் கொழிக்கும் துறைகள்:

  • பொதுத் துறை, அரசு நிதித் துறை, அரசுத் துறை ஆகியவற்றில் பெரும்பாலும் லாபம்தான் வருகிறது. உதாரணமாக, செயல்பாட்டில் உள்ள 254 பொதுத் துறை நிறுவனங்களில் 177 நிறுவனங்கள் 2021-22இல் ரூ.2.63 லட்சம் கோடி லாபம் ஈட்டின.
  • இதில் எண்ணெய் எரிவாயு, பெல் உள்ளிட்ட கனரக நிறுவனங்களும் அடங்கும். 77 நிறுவனங்கள் ரூ.14.58 ஆயிரம் கோடி இழப்பைச் சந்தித்தன. இதில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.9.5 ஆயிரம் கோடி இழப்பு. மீதி 75 நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு. இழப்பைச் சந்தித்ததால் ஏற்கெனவே தனியாரிடமிருந்து தேச உடைமை ஆக்கப்பட்டவை இவை.
  • பொதுத் துறை வங்கிகள் 2021-22இல் ரூ.66,543 கோடி லாபம் ஈட்டின. ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ரூ.4,043 கோடி லாபம் ஈட்டியது. ரயில்வே 2020-21இல் ரூ.2,547 கோடி லாபம் ஈட்டியது. ரூ.60,000 கோடிப் பயணிகளுக்கான மானியத்தை அரசு ஈடுகட்டினால் லாபம் மேலும் கூடும். இப்படியான சூழலில்தான் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன.

சமூக நீதிக்குப் பின்னடைவு:

  • இந்தத் துறைகளில் இடஒதுக்கீடு இருப்பதால் சமூகநீதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறைவதால் அதுவும் குறைகிறது. உதாரணமாக, பொதுத் துறையில் 1980இல் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த 3.40 லட்சம் பேர் வேலை பெற்றிருந்தனர். 2022இல் அது 1.45 லட்சமாகக் குறைந்துவிட்டது.
  • பழங்குடி ஊழியர்களின் எண்ணிக்கை இதே காலத்தில் 1.40 லட்சத்திலிருந்து 85.45 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. அதேபோல, 2022இல் பொதுத் துறை ஊழியர்களில் இதர பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 1.89 லட்சம்தான். பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 2019 இல் 87.66 ஆயிரமாக இருந்தது, 2021-22இல் 76.67 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. 20 லட்சம் பதவிகள் பறிக்கப்பட்டதால் 3 லட்சம் பட்டியல் சாதியினரின் நிரந்தர வேலையும், 1.5 லட்சம் பழங்குடியினரின் வேலையும், 5.4 லட்சம் இதர பிற்படுத்தப்பட்டோரின் வேலையும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளின் நிரந்தர வேலையும் பறிபோய்விட்டன.
  • இது தொடர்பான புள்ளிவிவரப் பட்டியல் நீளமானது. இப்படி சமூகநீதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான போக்கு நீடிக்கிறது. பொதுத் துறைகள் மீது மத்திய அரசு உரிய கவனம் செலுத்தாத சூழலில், இவை தவிர்க்க முடியாதவையாகிவிட்டன.

ஒப்பந்தத் தொழிலாளர் முறை:

  • நிரந்தர வேலைகளைக் குறைத்துவிட்டு, அந்த இடத்தில் பொதுத் துறை நிறுவனமே சில ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கிறது. பொதுத் துறையில் இப்போது நேரடியாக எடுக்கப் பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர், தற்காலிகத் தொழிலாளர்கள் 6.21 லட்சம் பேர். தவிர, ஒப்பந்ததாரர்கள் மூலம் 13.29 லட்சம் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.
  • மத்தியத் துறைகளில் 2019 நிலவரப்படி மொத்தம் 13.64 லட்சம் ஒப்பந்த ஊழியர் இருந்தனர். 2022 செப்டம்பர் நிலவரப்படி அந்த எண்ணிக்கை 28.90 லட்சமாக – அதாவது இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. ‘அமர்த்து - துரத்து!’ (hire and fire) கொள்கைதான் இப்போது ஆட்சி செலுத்துகிறது. இதில் கூலி குறைவு, சமூகப் பாதுகாப்பு இல்லை, வேலை நேரக் கட்டுப்பாடு இல்லை. தொழிலாளர் நலச் சட்டங்களும் அமலாவதில்லை.

தொழிலாளர் தொகுப்புச் சட்டம்:

  • தொழில் பாதுகாப்பு, உடல் நலம், வேலை நிலைமைகள் தொகுப்புச் சட்டம் 2020 நிறைவேற்றப்பட்டுவிட்டது. எனினும் இது இன்னும் அமலுக்கு வரவில்லை. வரும்போது, இருக்கும் சட்ட நிலைமையை அது புரட்டிப்போட்டுவிடும்.
  • இப்போதுள்ள சட்டப்படி எந்த வேலையாவது ஓராண்டில் 120 நாளுக்கு வழங்கப்பட்டால், அதை நிரந்தரத்தன்மை கொண்ட வேலை என்று வகைப்படுத்த வேண்டும்; ஒப்பந்த வேலையாகக் குறிப்பிடக் கூடாது. ஆனால், ‘கர்நாடக அரசு எதிர் உமாதேவி’ வழக்கில் நிரந்தர வேலையில் ஒப்பந்த ஊழியரை அரசாங்கமே நியமிக்கலாம் என்றும், அவர்களை நிரந்தரம் செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தீர்ப்பளித்துவிட்டது.
  • புதிய தொகுப்புச் சட்டமானது, வேலைகளை மைய வேலை, மையமற்ற வேலை என்று வகைப்படுத்தி மையமற்ற வேலைகளில் ஒப்பந்த வேலையை நுழைக்கலாம் என்று அனுமதி வழங்குகிறது. ஒப்பந்த ஊழியரைச் சேர்த்தால் அது ஊழியர் கணக்கில் வராது. எனவே, பல சட்டங்களும் பொருந்தாது. நிர்ணயிக்கப்பட்ட கால ஒப்பந்த ஊழியர் (Fixed term contract employees) தொகுப்புச் சட்டங்களில் இந்த வகை ஒப்பந்த ஊழியர்களை நியமித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு முறை அப்படிச் செய்யலாம் என்பதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க முடியாது என்று அரசு மறுத்துவிட்டது. இவை அனைத்தும் ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.

தமிழ்நாட்டின் நிலை:

  • அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வதில் தமிழ்நாடு அரசும் ஆர்வம் காட்டவில்லை. பல நிரந்தர வேலைகளில் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கச்சாப்பொருள், எரிபொருள், தேய்மானம் இவற்றுக்கு ஆகும் செலவினை உற்பத்தியான பொருளின் விலையில் கழித்தால் வருவது கூடுதல் மதிப்பாகும் (value added).
  • இந்த தேசத்தின் ஒட்டுமொத்தக் கூடுதல் மதிப்பில், ஒட்டுமொத்தக் கூலிக்கும் முதலாளிக்கும் எவ்வளவு போகிறது என்று தொழிற்சாலைகளின் வருடாந்திர ஆய்வு கூறுகிறது. 1981-82இல் ஊதியத்தின் பங்கு 30.3%. முதலாளிக்கு லாபமாக பங்கு 23.4%.
  • 2019-20இல் ஊதியத்தின் பங்கு 18.9%. லாபத்தின் பங்கு 38.6%. ஒட்டுமொத்த லாபத்தில் எழுச்சி. ஒட்டு மொத்தக் கூலியில் வீழ்ச்சி. வேலை நிலைமைகளில் வீழ்ச்சி - இதுதான் நிதர்சனம். அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தங்களையும் தாண்டி இந்த வீழ்ச்சி நடைபெறுவதுதான் எல்லாவற்றையும்விடக் கொடுமை!

நன்றி: தி இந்து (13 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories