TNPSC Thervupettagam

ஏரியா சபை... ஏமாற்றத்தில் முடிந்தது!

March 5 , 2025 2 days 12 0

ஏரியா சபை... ஏமாற்றத்தில் முடிந்தது!

  • அரசமைப்புச் சாசனம் மக்களைக் காக்கும் மகத்தான கருவி என்று முழங்காத கட்சிகளே இல்லை, தலைவர் இல்லை. ஆனால், அந்த மக்கள் சாசனம் இன்றுவரை மக்களிடம் போய்ச் சேரவில்லை. சேர்க்கவும் முயலவில்லை. அதேபோல் அரசமைப்புச் சாசனத்தால் உருவாக்கப்பட்ட கிராமசபை, இந்த நாட்டின் பிரதிநிதித்துவ மக்களாட்சியை பங்கேற்பு மக்களாட்சியாக மாற்றும் வல்லமை கொண்டது என்று எழுதாத ஆராய்ச்சி அறிஞர்களே இல்லை. அதேபோன்றுதான் நகர்ப்புறங்களில் உருவாக்கப்பட்ட ஏரியா சபை (பகுதி சபை) என்பதும்.
  • குறைந்தபட்சம் மக்கள் இந்த மன்றங்களில் கூடும்போது தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். அங்கு மக்கள் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்த முடியும். இந்தச் செயல்பாடுகள் மூலம்தான் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று கூறாத நிர்வாகவியல் நிபுணர்கள் இல்லை. ஆனால், இன்று இவையெல்லாம் சடங்குகளாக மாற்றப்பட்டதுதான் நாம் சந்திக்கும் எதார்த்த சூழல்.
  • இதை நிரூபிக்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் தமிழகத்தில் நடந்தேறியது. சட்டபூர்வமாக நடக்க வேண்டிய ஏரியா சபை என்ற ஒரு நிகழ்வை எவரும் கண்டுகொள்ளாமல் அப்படியே தமிழகத்தில் அனைவரும் கடந்து சென்றதுதான் நமக்குள் ஒரு மையக் கேள்வியைக் கேட்க வைக்கிறது. அரசமைப்புச் சாசனம் என்ற மக்கள் சாசனமும், மக்களைப் பங்கேற்க வைக்க உருவாக்கப்பட்ட சட்டங்களும் யாருக்கானவை, மக்களுக்கா அல்லது உலகுக்குக் காண்பிக்கவா என்பதுதான் அந்தக் கேள்வி.
  • டிசம்பர் 10-ஆம் தேதி ஓர் ஏரியா சபை ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சியிலும் நடத்தி மக்களைப் பங்கேற்க வைத்து, மக்கள் கருத்துகளையும், தேவைகளையும் குறைகளையும் அறிந்து, அவற்றை வார்டு சபைக்கு எடுத்துச் சென்று தீர்மானமாக இயற்றி உள்ளாட்சி மன்றங்களுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும். இதைத்தான் 1998 -ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் கூறுகிறது. 1998 -ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது செயல்பாட்டுக்கு வந்தது 13.04.2023-ஆம் தேதிதான். சட்டப்பேரவையில் 1998- இல் உருவான சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இத்தனை ஆண்டுகள் ஏன் பிடித்தது என்ற புதிரைப் புரிந்து கொள்ள ஓர் ஆய்வை நாம் நடத்த வேண்டும். இந்தச் சட்டத்தில் 49-எஃப் என்ற பகுதியில் ஏரியா சபையை எப்படி உருவாக்குவது என்பதையும், 49-ஜி என்ற பகுதியில் ஏரியா சபையின் கடமைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன.
  • இதன்படி மாநகராட்சிகளில் 5 லட்சம் மக்கள் தொகை வரை 4 -இலிருந்து 5 வரை ஏரியா சபைகளை உருவாக்கிக் கொள்ளலாம். 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் மக்கள் தொகை வரை 6 -இலிருந்து 9 வரை ஏரியா சபைகளை உருவாக்கிச் செயல்பட வேண்டும். அதேபோல் 10 லட்சத்துக்குமேல் மக்கள் தொகை கொண்ட இடங்களில் 10 ஏரியா சபைகளை உருவாக்கிச் செயல்பட வைக்க வேண்டும்.
  • இந்த ஏரியா சபைக்கு உள்ள பகுதிகளைச் சென்னையைப் பொருத்தவரை மாநகராட்சி ஆணையர் பகுதிகளை வரையறை செய்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் அறிவிப்பார். மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர், நகர உள்ளாட்சி மன்ற ஆணையர்களின் உதவியுடன் பகுதிகளை வரையறை செய்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பார்.
  • வரையறை செய்த ஏரியா சபைகளுக்கு எண்கள் கொடுக்கப்பட வேண்டும். இந்தப் பகுதிகள் என்பது மறுவரையறை செய்யும் வரை அந்த எண்கள் செயல்பாட்டில் இருக்கும். ஏரியா சபைத் தலைவராக அந்தப் பகுதியின் வார்டு கவுன்சிலர் தலைமை ஏற்று நடத்துவார். மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஏரியா சபை கூட வேண்டும். இதற்கும் குறைவெண் வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. 500 மக்கள்தொகை வரை 50 பேர், 501- இலிருந்து 3000 மக்கள் தொகை வரை 100 பேர், 3001- இலிருந்து 10,000 ஆயிரம் வரை 200 பேர், 10,000-க்கு மேல் 300 பேர் கூட வேண்டும். இந்தக் குறைவெண் வரம்பு இருந்தால்தான் ஏரியா சபைக் கூட்டம் நடத்த வேண்டும்.
  • ஏரியா சபையில் தாங்கள் வசிக்கின்ற உள்ளாட்சிப் பகுதிகளை மேம்படுத்த ஆலோசனைகளை மக்கள் வழங்கலாம். பொதுமக்களின் தேவைகளைக் கேட்டுத் தொகுத்து உள்ளாட்சி மன்றத்தில் முடிவெடுக்க உதவலாம். அடுத்து உள்ளாட்சி மன்றம் தருகின்ற பணிகளையும் செய்யலாம்.
  • இந்த ஏரியா சபையைக் கட்டாயமாக ஆண்டுக்கு நான்கு முறை கூட்ட வேண்டும். தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 -ஆம் தேதி, அண்ணா பிறந்த தினமான செப்டம்பர்- 15, சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10 -ஆம் தேதி கூட்ட வேண்டும்.
  • இந்த ஏரியா சபை கூட்டத்தை, கிராமசபை நடப்பதுபோல் நடத்த வேண்டும். மக்கள் திரளாக கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் வளர்ச்சித்திட்டம் தயாரிப்பதில் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்பதன் மூலம் அடித்தட்டு மக்களாட்சியை வலுப்படுத்த வேண்டும். இதைத்தான் சட்டம் கூறுகிறது.
  • நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்போர் இந்த ஏரியா சபைகள் முறையாக கூட்டப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து அறிக்கைகள் பெறவேண்டும் என்பது கட்டளை. இதைத்தான் 2023 -ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின் விதி 180 கூறுகிறது. இந்தப் புதிய சட்டம் அதாவது 1998 -ஆம் ஆண்டு சட்டபேரவையால் நிறைவேற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் 2023 -ஆம் ஆண்டு திருத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம்தான் 1992- இல் இந்திய நாடாளுமன்றத்தால் நகர்ப்புற உள்ளாட்சியை அரசாங்கமாக உருவாக்க வழிவகை செய்த 74- ஆவது அரசமைப்புச் சாசன திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாநிலச் சட்டம். இதைப் புரிந்து கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.
  • இப்படி அரசமைப்புச் சாசனத்தால் அரசாங்கமாக உருவாக்கி மக்களை இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய ஏரியா சபையை நாம் எப்படி நடத்துகின்றோம் என்பதை அறிந்துகொள்ள இதற்காகவே பிரத்யேகமாக கூட்டப்பட்ட இணையவழிக் கூடல் ஒன்றில் இணைந்து இருந்தேன். அந்த இணைய வழிக் கூடலில் சமூக ஆர்வலர்கள் தங்கள் ஏரியாசபை பங்கேற்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த இணையவழிக் கூடலில் ஏரியா சபையில் பங்கு பெற்றவர்களின் அனுபவங்களைக் கேட்க இணைந்திருந்தேன்.
  • ஒவ்வொருவரின் அனுபவப் பகிர்வும் ஒரு கருத்தை வலுப்படுத்திக் கொண்டே இருந்தது. சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய அரசு இயந்திரம், ஒரு சுற்றறிக்கையை விட்டுவிட்டு கண்டு கொள்ளாமல் இருப்பது, அதை நடத்த வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எதுவும் தெரிந்ததுபோல் காண்பித்துக் கொள்ளாமல் ஏரியா சபையைக் கடந்து சென்றது, அதில் பலர் ஏரியா சபையில் பங்குகொள்ள வந்தவர்களை எதுவும் நடக்காது என்ற உணர்வை உருவாக்கி திருப்பி அனுப்பியது, சட்டப்படி நடக்க வேண்டிய ஒரு மக்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்வை ஒரு சடங்காகக்கூட நடத்தாமல் மக்களாட்சியை ஒரு அவமானச் சின்னமாக்கியதுதான் அன்று நாம் கண்ட சிறுமைச் செயல்பாடு என்று பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
  • இதனைத் தொடர்ந்து மாநகராட்சி உறுப்பினர்களை அதுகுறித்துக் கேட்டபோது, ஏரியா சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்படவில்லை என்றும், ஏரியா சபை நடத்துவது தொடர்பான சட்டம் பற்றிய அறிவு தரப்படவில்லை என்றும், நடத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது. சுற்றறிக்கையை மட்டும் அனுப்பியிருக்கிறார்கள்.
  • கிராமசபைக்கு அரசாங்கமே ஊரக வளர்ச்சி இயக்குநரகத்திலிருந்து கூட்டப்பொருள்வரை முடிவு செய்து அறிவிப்பு செய்வார்கள். அப்படி இருந்தும் பல இடங்களில் கிராமசபைகளும் ஒரு சடங்குதான். இருந்தபோதிலும் சுற்றறிக்கையைத் தொடர்ந்து அனுப்பி, பஞ்சாயத்துத் தலைவர்களை கிராமசபையைக் கூட்ட வைப்பார்கள். ஆனால், இந்த நகர்ப்புற பகுதிக்கான ஏரியாசபை, கிராமசபை போன்ற அதிகாரங்களைப் பெறவில்லை. இருந்தபோதும் ஏரியா சபை என்பது மக்கள் கூடுவதற்கான ஒரு வாய்ப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஏன் மக்கள் கூடுவதை தவிர்க்கின்றனர்?
  • இந்த மன்றங்களை நடத்தி மக்களை அதில் பங்கேற்க வைத்தால் மிகப்பெரிய சவால்கள் அரசியல்வாதிகளுக்குத்தான் வரும். மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் வெறுப்பும் கோபமும் கொண்டுள்ளார்கள். மக்களை நேரடியாகச் சந்திக்கும்போது தங்கள் கோபத்தைக் கொட்டுவார்கள். மக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். எனவே, பதில் கூற வேண்டும். இன்றைய நிலையில் அது இயலாத காரியமாக உள்ளது.
  • இந்த அமைப்புகளெல்லாம் ஒரு விவாத மக்களாட்சியை உருவாக்கும் சக்தி பெற்றது. அது தொடர்ந்தால் மக்கள் அதிகாரம் பெற்று அரசியல் கட்சிகளுக்கு சவால்களை ஏற்படுத்தி விடுவார்கள் என்ற புரிதலில்தான் மிகத் தெளிவாக இந்த அமைப்புகளைப் பற்றி வலுவாக எந்தக் கட்சியும் பேசுவது இல்லையோ என்னவோ?
  • அதனால், இந்த மன்றங்களைக் கூட்டுவதற்கு நடைபெறும் முயற்சியைவிட, கூட்டாமல் இருப்பதற்கு நடைபெறும் முயற்சி அதிகம். இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
  • ஏரியா சபையை அறிவித்துவிட்டு ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் உணர்ந்து அதை வலுப்படுத்த, ஆங்காங்கே குடிமைச் சமூக அமைப்புகளை உருவாக்கி மக்களை குடிமக்களாக பொறுப்புடன் ஏரியா சபையில் தாமாக முன்வந்து பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்; அதுதான் தீர்வாக இருக்க முடியும்.

நன்றி: தினமணி (05 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories