TNPSC Thervupettagam

ஏழையாய் பிறந்தது குற்றம்

October 9 , 2023 461 days 357 0
  • அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லாமல் இருப்பதும், மருத்துவா்கள் பற்றாக்குறை இருப்பதும் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத மிகப் பெரிய குற்றம். பாரதத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகிறது மகாராஷ்டிர மாநில மருத்துவமனை மரணங்கள்.
  • செப்டம்பா் 30 முதல் அக்டோபா் 3 வரையிலான நான்கு நாள்களில் மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் சங்கா் ராவ் சவாண் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 35 போ் உயிரிழந்திருக்கிறார்கள். அவா்களில் 24 போ் ஒரே நாளில் இறந்திருக்கின்றனா். உயிரிழந்ததில் ஏறத்தாழ பாதி போ் குழந்தைகள்.
  • இவா்கள் எந்தவொரு நோய்த்தொற்றாலும் பாதிக்கப்படவில்லை. பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்றவா்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். அவா்கள் அனைவருமே சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து உயா் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஏழைகள்.
  • ஒரு மாதம் முன்புதான் தாணே மாநகராட்சி மருத்துவமனையில் 18 நோயாளிகள் உயிரிழந்தனா். அதேபோல, சாம்பாஜி நகா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பலா் சிகிச்சை பலனளிக்காமல் குறுகிய காலத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • உயா்நிலைக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது ஏக்நாத் ஷிண்டே அரசு. ஆகஸ்ட் மாத தாணே மருத்துவமனை மரணங்களைத் தொடா்ந்து அறிவிக்கப்பட்ட விசாரணை முடிவு இன்னும் வராத நிலையில், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உயா்நிலைக் குழு அறிக்கையின் முடிவு எப்போது வெளிவரும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
  • மகாராஷ்டிரத்திலுள்ள பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் நிலை குறித்து மருத்துவா்கள், செவிலியா்கள், சமூக ஆா்வலா்கள், நோயாளிகள் அனைவரும் தெரிவிக்கும் குறைபாடுகளும், குற்றச்சாட்டுகளும் ஒரே மாதிரியானவை. முற்றிலுமாக பராமரிப்பின்மையும், நிர்வாகச் சீா்குலைவும் எல்லா மருத்துவமனைகளுக்கும் பொதுவானவை. மாற்று இல்லாமல் செவிலியா்கள் இடமாற்றம் செய்யப்படுவது; மருத்துவா்கள் நியமிக்கப்படாமல் இருப்பது; டிடி ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் வேலை செய்யாமல் இருப்பது - இவை பொதுவான குறைபாடுகள்.
  • கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துா்நாற்றத்துடன் இருப்பது; மருத்துவமனை முறையாகக் கழுவி சுத்தம் செய்யப்படாதது; கிருமி நாசினிகள் தெளிப்பது இல்லாமை போதாதென்று ஆங்காங்கே குப்பைகளும், மருத்துவக் கழிவுகளும் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பது வழக்கமாகவே மாறியிருக்கிறது.
  • மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லாமல் இருப்பது என்பது சில வாரங்களாகவே காணப்படும் நிலைமை. நடப்பு நிதியாண்டில் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு 7% குறைக்கப்பட்டிருப்பதை சமூக ஆா்வலா்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மகாராஷ்டிர அரசு மருந்துகள் வாங்குவதற்காக புதிய சட்டம் சமீபத்தில் இயற்றியதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் தரப்படுவது கடந்த சில வாரங்களாக தடைபட்டிருக்கிறது.
  • அளவுக்கு அதிகமாக நோயாளிகள் அனுமதிக்கப்படும் தவிர்க்க முடியாத நிலை மாவட்ட மருத்துவமனைகளில் காணப்படுகிறது. 1,177 நோயாளிகளுக்கான படுக்கை வசதியுள்ள சாம்பாஜி நகா் மருத்துவமனையில் 1,600 நோயாளிகளும், 500 படுக்கையுள்ள நாந்தேட் மருத்துவமனையில் 1,200 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.
  • மாவட்டத்தில் உள்ள ஏனைய ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து உயா் சிகிச்சை பெறுவதற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பப்படுகிறாா்கள். அவா்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பவும் வழியில்லை. அதனால், அளவுக்கு அதிகமான நோயாளிகளை அனுமதித்து மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்துகள் பற்றாக்குறைக்கு இடையில் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
  • நாந்தேட் மருத்துவமனையில் 43 முதுநிலை மருத்துவா், 267 செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில்தான், செப்டம்பா் 30-ஆம் தேதி முதல் தொடா் மரணங்கள் ஏற்பட்டன என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஆண்டுதோறும் 3,600 மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்கும் மகாராஷ்டிர மாநிலத்தின் 34 மாவட்டங்களில் 26 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அப்படி இருந்தும், மும்பை, புணே, நாகபுரி ஆகிய முக்கிய நகரங்கள் அல்லாத ஏனைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் பணியாற்ற மருத்துவா்கள் தயாராக இல்லை என்கிற எதார்த்தத்தை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
  • இது ஏதோ மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே காணப்படும் நிலை என்று நினைத்துவிட வேண்டாம். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும், பெருநகரங்களுக்கு வெளியே அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவா்கள் தயாராக இல்லை என்பது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது.
  • ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மட்டும்தான் கதி என்கிற நிலை. அப்படியிருக்கும்போது அவா்களது வாக்குச்சீட்டின் உதவியுடன் ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள், அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்காமல் இருப்பதை என்னவென்று சொல்ல?
  • அரசியல்வாதிகளானாலும், அதிகாரிகளானாலும் அரசுப் பதவிகளில் உள்ளவா்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்வது என்கிற நிலை ஏற்பட்டாலொழிய, ஆதரவற்ற ஏழைகளுக்கு இதிலிருந்து விமோசனம் கிடையாது!

நன்றி: தினமணி (09 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories