TNPSC Thervupettagam

ஐசக் நியூட்டன்

November 27 , 2024 8 days 64 0
  • சர் ஐசக் நியூட்டன் 1643, ஜனவரி 4 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். அறிவியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். பிறந்த மூன்று மாதங்களுக்குள் தந்தையை இழந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாயையும் பிரிந்தார். பாட்டியிடம் வளர்ந்தார். கிராமப்புற பள்ளியில் படித்தார். 14 வயதில் படிப்பு நிறுத்தப்பட்டது. நியூட்டனுக்கு படிப்பில் ஆர்வம் இருப்பதை அறிந்த அவரின் மாமா, 1661இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி கல்லூரியில் சேர்த்தார். கணிதத்தையும் அறிவியலையும் சிறப்பாகப் படித்தார்.
  • அந்தக் காலக் கல்லூரிகள் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றும். நியூட்டன் கூடுதலாக கலிலியோ, கோப்பர்நிக்கஸ், கெப்ளர் போன்ற நவீன அறிஞர்களின் கருத்துகளையும் படிக்க விரும்பினார். அப்போது பிளேக் என்கிற பெருந்தொற்று நோயால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. வீட்டிலிருந்தபடியே ஆய்வு செய்தவருக்கு கிடைத்ததுதான் ஈர்ப்பு விசைக் கோட்பாடு. பட்டம் பெற்ற பிறகே அவருக்குள் இருந்த அறிவியல் அறிஞர் வெளிப்பட்டார். தான் படித்த டிரினிடி கல்லூரியிலேயே பேராசிரியராகச் சேர்ந்தார். கணிதம், இயற்பியல் துறைகளில் முக்கியப் பங்களிப்பைச் செய்தார்.
  • கோள்களின் நகர்வு பற்றிய புத்தகங்களைத் தேடிப் படித்தார். எப்போதும் அதைப் பற்றியே சிந்தித்தா. மேலே செல்லும் பொருள்கள் ஏன் கீழே விழுகின்றன என்று யோசித்தபோதுதான் புவி ஈர்ப்பு சக்தியை அவரால் கண்டறிய முடிந்தது. நடந்து போகும்போது வேகமாகக் காற்றடித்தது. உடனே காற்றுக்கும் வேகம் இருக்கிறது. அதை அளக்க முடியும் என்பதையும் கண்டறிந்தார்.
  • சூரியனிலிருந்து வரும் ஒளி வெள்ளை என அனைவரும் நினைக்க, நியூட்டன் அதை முப்பட்டகத்தில் செலுத்தினார். சிதறிய ஒளி ஏழு வண்ணங்களாகப் பிரிந்தது. வெள்ளை ஒளி ஏழு நிறங்களையும் கொண்டது. இந்த நிறங்களை மறுபடியும் ஒன்று சேர்ந்தால் மீண்டும் வெள்ளை ஒளியாக மாறும் என்பதையும் நிரூபித்துக் காட்டினார். ஒளியின் வேகம் குறித்தும் ஆய்வுகள் செய்தார்.
  • பொறியியல் படிப்பிற்கு ஆணிவேரான கால்குலஸை உருவாக்கினார். நவீன கணிதத்தின் பல பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவை. மேலும் பல இயற்பியல் சூத்திரங்களை உருவாக்கினார். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகளை வகுத்தார்.
  • எந்த ஒரு வினைக்கும் அதற்கு எதிர்திசையிலிருந்து சமமான எதிர்வினை உண்டு என்கிற நியூட்டனின் மூன்றாம் விதியால் ராக்கெட் செலுத்தப்பட்டது. இயக்க விதிகளே மரபார்ந்த விசையியல் (classical mechanics) துறைக்கு வித்திட்டது.
  • கிராகாம்பெல், எடிசன் எனப் பலரும் மக்களின் விஞ்ஞானிகளாக இருக்க, நியூட்டன் விஞ்ஞானிகளின் விஞ்ஞானியானார். நியூட்டன் நாட்டுக்கும், விஞ்ஞானத்துக்கும் செய்த மகத்தான பணியைக் கௌரவப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள். அங்கு அவர் ஆற்றிய உரை ”ஜன்னலைத் திறங்கள் காற்று வரட்டும்” என்பது. அவருக்கு விஞ்ஞானத்தைத் தவிர மற்றதில் ஆர்வம் இல்லை.
  • தொடர்ந்து 25 ஆண்டுகள் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் ராணி கேம்ஃப்ரிட்ஜ் வந்தபோது 'சர்' பட்டம் வழங்கி கௌரவித்தார்.
  • ”கடற்கரையில் விளையாடும் சிறுவனாகிய நான், கிளிஞ்சல்களையும் சங்கையும்தான் பார்த்தேன். ஆனால் என் முன்னால்தான் பரந்து விரிந்த பெருங்கடல் இருக்கிறது. அதை இன்னும் பார்க்காமல் இருக்கிறேன்” என்று தன்னடக்கத்தை வெளிப்படுத்தினார்.
  • 1727, மார்சி 20இல் மறைந்தார். போப் நியூட்டனின் கல்லறையில் எழுதச் சொன்ன வாசகம்: ”இயற்கையின் ரகசியங்கள் இருளில் மூழ்கி இருந்தன. நியூட்டன் பிறந்தார், ரகசிய இடங்களில் வெளிச்சம் பாய்ந்தது.”

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories