- இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களைக் கொத்துக்கொத்தாக வேலைநீக்கும் படலம் நிகழ்ந்தேறுவது அவ்வப்போது அரங்கேறும் அவலம்தான். அறிவிப்பு வெளிவந்த அந்தக் காலகட்டத்திலெல்லாம் தங்களது வழக்கமான கொண்டாட்டங்களை மறந்து ஐடிவாசிகள் பீதியில் உறைந்திருப்பார்கள். இந்த நவம்பர் மாதமும் அவர்களுக்கு அப்படியானதொரு மோசமான காலகட்டம்தான்.
- இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான இன்ஃபோசிஸ், 12,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. காக்னிஸன்ட் நிறுவனமோ 7,000 பேரை உடனடியாகவும், அடுத்தடுத்த கட்டத்தில் 6,000 பேரையும் பணியில் இருந்து நீக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கேப்ஜெம்னி போன்ற அடுத்தகட்ட நிறுவனங்களும் கணிசமான எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்ய விருக்கின்றன. அடுத்த சில மாதங்களில் சுமார் 40,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் வேலைகளை இழக்கவிருக்கிறார்கள்.
- ஐடி நிறுவனங்களின் இந்த அதிரடியான ஆட்குறைப்பு அறிவிப்புகளை - இப்போது மட்டும் அல்ல, இதற்கு முந்தைய ஆட்குறைப்பிலும்கூட - நாம் கூர்ந்து அவதானித்தோமானால் அவை ஏதும் புதிய ஊழியர்களைக் குறிவைப்பதாக இருக்காது; குறைந்தபட்சம் 12-15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவசாலிகளையே அவை தங்கள் இலக்குகளாக்குகின்றன. காக்னிஸன்ட் நிறுவனம் இதற்கு முன்பாக நிர்வாக இயக்குநர்கள் நிலையில் இருப்பவர்களைப் பணிநீக்கம் செய்தது. இப்போது அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் மேலாளர்களைக் குறிவைத்திருக்கிறது. இனி அடுத்த கட்டத்தில், அணித் தலைவர்களின் பக்கமும் நகர்ந்துவர அதிக காலம் பிடிக்காது என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் காக்னிஸன்ட் ஊழியர்கள். இன்ஃபோசிஸ் நிறுவனத்திலும் கிட்டத்தட்ட இதே நிலைதான்.
- அனுபவம் மிக்கவர்களுக்கு உண்மையில் செல்வாக்கு அதிகம்தானே இருக்க வேண்டும்? ஏன் ஐடி நிறுவனங்களால் அனுபவஸ்தர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை? அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாம் ஐடி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் ஊழியர்களின் படிநிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
- ஐடி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் ஊழியப் படிநிலையை ‘பிரமிட் ஸ்ட்ரக்சர்’ என்பார்கள். அதன்படி, ஒரு மேலாளரின் கீழ் நான்கைந்து அணிகள் இருக்கின்றன என்றால், ஒவ்வொரு அணிக்கும் ஒரு அணித் தலைவர், அந்த அணித் தலைவரின் கீழ் மூன்று வெவ்வேறு படிநிலைகளில் அடுத்தடுத்த நிலை ஊழியர்கள் இருப்பார்கள். இந்தக் கட்டமைப்பு ஒரு பிரமிட்போல இருக்க வேண்டும் என்பது நியதி. அவ்வப்போது இந்தச் சமநிலை குலைந்துவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அணித் தலைவர் அல்லது மேலாளரின் பொறுப்பு. கீழ்மட்ட ஊழியராக இருந்தால், அவரை வேறு ஒரு அணிக்கு மாற்றல் தந்து அனுப்பிவிடுவார்கள். அனுபவசாலி என்றால் அவரது பாடு திண்டாட்டம்தான். கிட்டத்தட்ட பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இதேபோன்ற ஊழியப் படிநிலைகளைக் கடைப்பிடிப்பதால், வேலை இழந்த அனுபவஸ்தருக்கு இன்னொரு இடத்தில் வேலை கிடைப்பதென்பது மிகமிகச் சவால் நிறைந்தது.
- ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வுபெற்று அடுத்தடுத்த நிலையை அடையும்போது, உயர் மட்டத்தில் சமநிலை குலையும் நிலை உருவாகும் இல்லையா, அப்போது கொத்தாகப் பணிநீக்கம் செய்வது ஐடி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை. இது அந்நிறுவனங்கள் திட்டமிட்டே வகுத்துக்கொண்ட நடைமுறைதான்.
ஏன் இந்த நடைமுறை?
- ஏன் இப்படியான ஒரு நடைமுறையை ஐடி நிறுவனங்கள் வரித்துக்கொண்டிருக்கின்றன என்பதற்கு, இந்திய ஐடி ஊழியர்களின் சம்பளக் கட்டுமானத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இந்தியாவில் இருக்கும் ஒரு ஐடி நிறுவனம், அமெரிக்காவில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்துக்காகத் தகவல் தொழில்நுட்பச் சேவையை வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அமெரிக்க நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்திய ஊழியர்களெல்லாம் ஒப்பந்தக்காரர்கள். குறைந்தபட்சமாக, இந்திய ஐடி நிறுவனம் ஒரு மணி நேரத்துக்கு 27 டாலர் என்ற கணக்குப்படி, வாரம் 40 மணி நேரத்துக்கு அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வசூலிக்கிறது. இதன்படி பார்த்தால் ஒருவருக்கான மாதச் சம்பளம் இந்திய மதிப்பின்படி ரூ.3.3 லட்சம்.
- புதிதாகச் சேரும் ஒருவருக்கு ரூ.20-25 ஆயிரம் வழங்குவது தொடங்கி, அணித் தலைவருக்கான சம்பளமாக ரூ.80-95 ஆயிரம் வரைதான் இந்திய ஐடி ஊழியர்களுக்கு மாதச் சம்பளமாக வழங்குகிறார்கள். ஒரு அணித் தலைவருக்கும், படிநிலையில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒருவருக்கும் ஒரே சம்பளத்தைத்தான் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து வசூலிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இந்த பிரமிட் கட்டமைப்புதான் ஐடி நிறுவனங்களுக்கு லாபகரமானது என்பதால், ஒவ்வொரு வருடமும் புதிது புதிதான ஆட்களை உள்ளே இறக்குவதையும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் கொத்தாக அனுபவ சாலிகளை வெளியேற்றுவதையும் நடைமுறையாக வைத்திருக்கிறார்கள்.
- இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றி, தற்போது மணிபால் குழுமக் கல்வி நிறுவனத் தலைவராக இருக்கும் மோகன்தாஸ் பாய், “தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற தேக்க நிலை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். தாங்கள் பெறும் ஊதியத்துக்கு ஏற்பத் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ளாதவர்கள்தான் இதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணிகளை இழப்பர். நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும்போது, பதவி உயர்வு அளிப்பது என்பது வழக்கமான நிகழ்வாக இருக்கும். அதேசமயம், தேக்கநிலை நிலவும்போது அதிக ஊதியம் பெறுவோரைத்தான் முதலில் வேலையிலிருந்து எடுக்க நேரிடும்” என்கிறார்.
இது உண்மையா?
- ‘தேக்கநிலை’, ‘திறமையை வளர்த்துக் கொள்ளாதவர்கள்’, ‘ஆட்குறைப்பு’ என இவர் போன்றவர்கள் முன்வைக்கும் வாதங்கள் எல்லாம் அவர்கள் வசதிக்காக உருவாக்கிக்கொண்டவையே. ஐடி ஊழியர்கள் எல்லோரும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளை அசாத்தியமான வகையில் வளர்த்துக்கொண்டுவிடுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்; அப்போதும் அந்த நிறுவனங்களால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஐடி நிறுவனங்களின் டிசைன் அப்படி!
- ஐடி நிறுவனங்கள் தழைக்கத் தொடங்கிய காலகட்டத்தை ஒப்பிடும்போது, இன்றைய நாளில் கெடுபிடிகள் அதிகமாகியிருக்கின்றன. ஐடிவாசிகள் எல்லாம் சொர்க்கவாசிகள் என்ற எண்ணங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்க்கப்பட்டுவருகின்றன. ஆரம்பகட்ட ஊழியர்கள் உட்பட ஒவ்வொரு படிநிலைக்கும் ஏற்றவாறு வருடாந்திரத் தேர்வுகள், தினமும் ஒன்பது மணி நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம், ஓய்வு எடுக்கும் அறைகளை அப்புறப்படுத்துதல், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளைக் கடினமாக்குதல், ஊழியர்களின் கணினியைக் கண்காணித்தல், பதவி உயர்வில் நெருக்கடிகளை உருவாக்குதல் என்று இன்றைய காலகட்டத்தில் நிறைய இறுக்கங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
- ஐடி நிறுவனங்களைப் பொறுத்தவரை இது குறித்தெல்லாம் கேள்வி கேட்பதோ, ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுப்பதோ சாத்தியம் இல்லாததாகவே இருக்கிறது. ஐடி ஊழியர்களுக்கென உருவான சொற்பமான தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் அதிகாரமற்றவையாகவே இருக்கின்றன. புதிய ஐடி நிறுவனங்களையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதற்காக முயன்றுகொண்டிருக்கும் தமிழக அரசு, இனி தன் உரையாடல்களில் ஏற்கெனவே பணியில் இருப்பவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வது குறித்தும் பேசத் தொடங்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (28-11-2019)