ஒடிசாவில் வரும் 8-ம் தேதி பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு தொடக்கம்: இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர் பிரச்சினை தீருமா?
- வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்றிணைக்கும் பிரவாசி பாரதிய திவஸ் அமைப்பின் 18-வது மாநாடு 8-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறுகிறது.
- மத்திய வெளியுறவுத் துறையும் ஒடிசா மாநில அரசும் இணைந்து விமரிசையாக நடத்தும் இந்த மாநாட்டின் பொருள் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு புலம்பெயர் இந்தியர்கள் செய்யும் பங்களிப்பு” (Diaspora's Contribution to Viksit Bharat) என்பதாகும்.
- மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய 1915 ஜனவரி 9-ம் தேதியை நினைவுகூரும் வகையில் பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு 2003-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் அந்த மாநாடு நடத்தப்பட்ட போது அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு பதவியில் இருந்தது.
- பிறகு அடுத்த ஆண்டு காங்கிரஸ் அரசு பதவிக்கு வந்தது. அந்த அரசில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வயலார் ரவி, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் நல அமைச்சராக நியமிக்கப்பட்டு பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது.
- கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பாஜக பதவிக்கு வந்த பிறகு பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாழ்நாள் விசா வழங்கும் திட்டம் (Overseas Indian Citizen Visa) நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 21 ஆயிரம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயனடைந்தனர்.
- ஆனால், அண்மைக்காலமாக இந்த விசாவை பெறுவதில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள். இவர்களின் மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூட்டி வரப்படுவதற்கு முன்னர் அவர்கள் வாழ்ந்த தமிழகக் கிராமங்களின் வசிப்பிட சான்றிதழ்கள் இவர்களிடம் கோரப்படுவதே இந்த சிக்கல்களுக்கு முக்கிய காரணம்.
- இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இதுவரை இலங்கை அரசு நிறைவேற்றிய சட்டங்களின்படி இலங்கை குடிமக்களாகிவிட்ட இந்திய வம்சாவளி சமூகத்தினருக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான வாழ்நாள் வசிப்பிட (OCI) விசாவை பெறுவதில் எந்த சிக்கலும் இல்லாதிருப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
- மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா ஆகியோர் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றியவர்கள் என்பதால் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள். இவர்கள் இந்த சிறப்பு வாழ்நாள் விசாவை பெறும் விஷயத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை களைவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் தொகை சுமார் 3 கோடியே 50 லட்சம் என்று கணக்கிடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் புவனேஸ்வர் மகாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் வழக்கம் போல பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு உரை நிகழ்த்துவார். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி அரசு தீவிரமாக செய்து வருகிறது.
- மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஒடிசா மாநிலத்தின் முப்பதுக்கும் அதிகமான கண்கவர் சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகள், மலர்க்கண்காட்சி, ஒடிசா நடனம், பழங்குடியினர் நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
- இந்தியா இன்று பொருளாதார வளர்ச்சியில் உலகில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் இந்த பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டின் குறிக்கோள்களில் முக்கியமானதாக இருக்கிறது.
- இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி சமூகத்தவர்கள் இன்று பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுவரும் நிலையில், பிரவாசி பாரதிய திவஸ் போன்ற சர்வதேச மாநாடுகளில் இலங்கை வாழ் இந்திய சமூகத்தின் பங்களிப்புக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த மாநாட்டில் இலங்கைவாழ் இந்திய சமூக பேராளர்கள் பங்கேற்றாலும், அவர்களை முக்கிய பேச்சாளராக அழைப்பதை காணமுடியவில்லை. முக்கிய பெருந்தோட்ட தொழிலாளர்களைக் கொண்ட சமூகம், கல்வித் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்களுக்கு இத்தகைய சர்வதேச மாநாடுகளில் முக்கியத்துவம் அளிப்பது அவர்கள் அடைந்துவரும் முன்னேற்றத்தை உலக அரங்கில் பறைசாற்றுவதாக அமையும்.
- கடந்த 17 பிரவாசி பாரதிய திவஸ் மாநாடுகளில் இலங்கைவாழ் இந்திய சமூகத்தை சேர்ந்த இருவருக்கே அதிஉயர் பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டில் தொழிலதிபர் மனோ செல்வநாதன், 2023-ம் ஆண்டில் இலங்கை தமிழ்ப் பத்திரிகை வீரகேசரியை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் நிறுவனத்தின் குமார் நடேசன் ஆகியோர் அந்த விருதை பெற்றிருக்கிறார்கள். எனவே, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து மேலும் பலருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட வேண்டும்.
- இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க சமீபத்தில் இந்திய பயணம் மேற்கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த சூழ்நிலையில், புவனேஸ்வரில் நடைபெறும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பங்கேற்பதில் இலங்கை வாழ் இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.
- இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வரலாறு காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடியில் மூழ்கிய இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா செய்த அவசர உதவியை இலங்கை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். ஜனாதிபதி அநுர திசாநாயக்கவும் இந்தியா செய்த அந்த தருணமறிந்த உதவிக்கு டெல்லியில் இந்திய தலைவர்களிடம் நன்றி தெரிவித்தார்.
- இத்தகைய உறவு வளர்ச்சிக்கு மத்தியில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இலங்கை வாழ் இந்திய சமூகப் பேராளர்கள் பெருமையுடன் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 8-ம் தேதி காலை மாநாட்டை தொடங்கி வைக்க ஜனவரி 9-ம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரவாசி சம்மான் விருதுகளை வழங்கி வெளிநாட்டு இந்தியர்களை கவுரவிக்கிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒடிசா முதல்வர் மோகன், ஆளுநர் ஹரி பாபு கம்பம்பதி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2025)