- 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் ஐந்து நபர்களில் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார். மறுபுறம், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாகப் பட்டியல் சாதியினரின் நிலை என்ன, அமைச்சரவையில் அவர்களுக்குப் போதிய வாய்ப்பு வழங்கப்படுகிறதா?
- இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 330 இன்படிஒட்டுமொத்த மக்கள்தொகையில் பட்டியல் சாதியினர்/ பழங்குடியினர் வகிக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
- இந்தப் பாதுகாப்பினால்மட்டுமே அவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இன்றுவரை நுழைய முடிகிறது. பொதுத்தொகுதி வேட்பாளர்களாக அவர்கள் போட்டியிடப்பெரும்பாலும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்கிற நிலையே தொடர்கிறது.
- கடந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற திருமாவளவன் (சிதம்பரம்), ரவிக்குமார் (விழுப்புரம்) ஆகியோர் இம்முறையும் அதேதனித் தொகுதிகளில் போட்டியிட்டனர்.
- அரசியல் செல்வாக்கு பெரிதும் வளர்ந்திருப்பினும் தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் இரண்டு இடங்களையே அக்கட்சியால் பெற முடிந்தது விமர்சிக்கப்பட்டது. ஆனால், அந்த இரண்டு இடங்களும் பட்டியல் சாதியினருக்கான தனித் தொகுதிகள்தான் என்பது விமர்சனமாகக்கூட எழவில்லை.
- வட்டமேசை மாநாட்டின்போது, எதிர்கால அரசமைப்புச் சட்டத்தில் பட்டியல் சாதியினரின் அரசியல் பாதுகாப்புகளை உறுதிசெய்வதற்கான பல நிபந்தனைகளை உள்ளடக்கிய திட்டத்தினை அம்பேத்கர் சமர்ப்பித்தார். அதில், பட்டியல் சாதியினர் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் பெறும் உரிமைக்கு (நிபந்தனை 4) இணையாக அவர்கள் அமைச்சரவையிலும் (Cabinet) இடம்பெறும் உரிமைக்கு (நிபந்தனை 8) அம்பேத்கர் ஆரம்பம் முதலே அழுத்தம் கொடுத்துள்ளார்.
- அதிகாரம் மிக்க உயர் பதவிகளைப் பட்டியல் சாதியினர் வகித்தால் மட்டுமே அரசு நிர்வாகத்தினால் அவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட முடியும் என்கிற அம்பேத்கரின் வாதம் வட்ட மேசை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைச் சாத்தியப்படுத்துவதற்கான வழிமுறைகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
- பட்டியல் சாதியினர் அமைச்சரவையில் இடம்பெறுவதை இரண்டு வழிகளில் உறுதிசெய்ய முடியுமென அப்போது கருதப்பட்டது. ஒன்று, இந்திய அரசுச் சட்டத்தில் (Government of India Act) இப்பிரதிநிதித்துவத்தைக் கட்டாயம் பின்பற்றக்கூடிய கடமையாகச் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்; இரண்டு, பிரிட்டிஷ் அரசமைப்புச் சட்டத்தில் பின்பற்றக்கூடிய வழக்கத்தைப் போல (convention) இங்கேயும் இப்பிரதிநிதித்துவத்தை வழக்கமாக ஏற்படுத்தலாம்.
- அப்போதிருந்த முக்கிய இந்தியத் தலைவர்கள் சிலரின் விருப்பத்துக்கேற்ப முதலாவது வழிக்கு அம்பேத்கர் அழுத்தம் தரவில்லை. பிரிட்டிஷார் முன்பாகத் தன் நாட்டினர் மீது நம்பிக்கை கொள்ளாததுபோல ஆகிவிடக் கூடாது என்பதற்காக இம்முடிவினை அவர் எடுத்தார்; இரண்டாவது வழியில் உத்தரவாதம் இல்லாததால் அதையும் அவர் விரும்பவில்லை.
- இரண்டுக்கும் இடையேயான தீர்வாக அமைச்சரவையில் பட்டியல் சாதியினர், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை ஆளுநர் உறுதிசெய்ய வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், அன்று பெரும்பான்மையாக இருந்தகாங்கிரஸ் கட்சி, பட்டியல் சாதியினர் அமைச்சரவையில் இடம்பெறும் இவ்வுரிமையைப் பறித்தது. அமைச்சரவைக்கான காங்கிரஸின் தேர்வுக்கே ஆளுநரும் முழு இடமளித்தார்.
- காலப்போக்கில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும் என்றும், பட்டியல் சாதியினர் இறுதியில் அதிகார அரசியலில் பங்கு பெறுவார்கள் என்றும்அம்பேத்கர் நம்பியிருக்கலாம். ஆனால், இதுவரையிலான தேர்தல் அரசியலின் போக்கு, அவரது நம்பிக்கையை மெய்ப்பிக்கவில்லை. அம்பேத்கர் அழுத்தம் கொடுத்த நிபந்தனை 8 தொடர்பாக, 2024 தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும்கூட எந்தவொரு தலித் கட்சியும் அக்கறை காட்டவில்லை என்பது இன்னொரு வேதனை!
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 04 – 2024)