- கரோனாவுக்கு எதிரான மானுடப் போராட்டத்தில், 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் எனும் இலக்கை இந்தியா கடந்திருப்பது முக்கியமான சாதனை.
- உலகில் சீனாவுக்கு அடுத்து, இந்த எண்ணிக்கையை இந்தியா கடந்திருக்கிறது. தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் இது நடந்திருக்கிறது.
- இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி. முழுமையாக இரு தவணைத் தடுப்பூசிகளையும் இவர்களுக்குச் செலுத்திட ஏறத்தாழ 200 கோடி டோஸ்கள் இந்தியாவுக்கு வேண்டும்.
- இதுவரை இந்தியாவில் 71.50 கோடிப் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; 29.50 கோடிப் பேருக்கு இரண்டு தவணைகளும் செலுத்தப் பட்டிருக்கின்றன.
- பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டிய கெடுவைத் தவறவிட்டிருக்கின்றனர்; இன்னமும் பெரும் ஜனத்தொகையைத் தடுப்பூசி இயக்கம் சென்றடைய வேண்டியிருக்கிறது என்றபோதிலும், இதுவரை கடந்திருக்கும் பயணம் அரும்பெரும் பணி என்பதில் சந்தேகமே இல்லை.
- அமெரிக்கா அல்லது ஐரோப்பாவுடன் ஒப்பிட்டால், இந்திய எண்ணிக்கையின் முக்கியத்துவம் புலப்படும். மொத்தமாக 33 கோடி மக்கள்தொகையைக் கொண்ட அமெரிக்கா இதுவரை 41 கோடி டோஸ்களை மட்டுமே கொடுக்க முடிந்திருக்கிறது.
- மொத்த ஐரோப்பாவின் மக்கள்தொகை 75 கோடி. அங்கும் சுமார் 83 கோடி டோஸ்களே வழங்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவுடனும், ஐரோப்பாவுடனும் இப்படி ஒப்பிடுவதானது, தடுப்பூசி உற்பத்தி - அதற்கான உள்கட்டமைப்பு - விநியோகச் சங்கிலி இவை தொடர்பிலானது மட்டும் இல்லை.
- தடுப்பூசிக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகளாவிய பிரச்சாரம் கரோனா காலகட்டத்தில் பரவியிருக்கிறது. அதைக் கடந்தே வளர்ந்த நாடுகளைவிடவும் இந்தியா இந்த இடத்தை அடைந்திருக்கிறது.
- இதற்கான பாராட்டில் பிரதமர் மோடி முதல் வரிசையில் இருக்கிறார். இந்த கரோனா காலகட்டத்தில் உலக அளவில் நவீன அறிவியலைப் புறந்தள்ளிப் பேசிய பிற்போக்கான அரசியல் கட்சியினரின் வரிசையில் அவர் சார்ந்த பாஜகவினரும் இருந்தபோதிலும், தடுப்பூசி விஷயத்தில் அவர் உறுதிபட விஞ்ஞானத்தின் பக்கம் நின்றார்.
- கரோனாவைக் கையாள்வதில் மிக மோசமான பல தவறுகளை பாஜக அரசு செய்தது என்றாலும், தன்னுடைய தவறுகளிலேயே அது வீழ்ந்திருக்கவில்லை என்பது மிகுந்த ஆறுதலான விஷயம்.
- தவறை நியாயப்படுத்துவதும், அதிலேயே ஆழ்வதுமான போக்கு எத்தகைய கேட்டை ஒரு நாட்டுக்குக் கொண்டுவரும் என்பதற்கு உதாரணமாக பிரேஸில் நம் கண் முன் நிற்கிறது.
- இந்தியாவின் எதிர்க்கட்சிகளுக்கும், பாஜக அல்லாத மாநில முதல்வர்களும் இந்த விஷயத்தில் நன்றிக்குரியவர்கள் ஆகிறார்கள். தடுப்பூசி விஷயத்தில் மக்களுடைய நியாயமான சந்தேகங்களைப் பொதுவெளியில் விவாதம் ஆக்கியதில் தொடங்கி ஒருகட்டத்தில் தடுப்பூசி இயக்கம் சோர்ந்து முடக்கி நின்றபோது தன்னுடைய தொடர் குரலால் அரசுக்குப் பெரும் அழுத்தம் கொடுத்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்.
- தேசிய அளவில் மம்தா, பினரயி, அம்ரீந்தர் வரிசையில் ஸ்டாலின் தொடர் அழுத்தம் கொடுத்தவர்களில் முக்கியமானவர். தடுப்பூசி எல்லா மக்களுக்குக்கும் கட்டணம் இல்லாமல், இந்திய அரசின் பொறுப்பில் வழங்கப்படும் சூழலை உருவாக்கியவர்கள் இவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
- நூறு கோடித் தடுப்பூசி சாதனையைப் பேசும் இந்தத் தருணத்தில், இதற்குப் பரிபூரண அர்த்தப்பாடு ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்றால், ‘ஒன்றிய - மாநில அரசுகளின் கூட்டிணைவின் சக்திக்கான வெளிப்பாடு’ என்று இதை வர்ணிப்பது சரியாக இருக்கும்.
- டெல்லியில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவானது, கடலோரக் குமரியில் தொடங்கி பனிப் படர்ந்த இமயமலை வரை வெற்றிகரமாக சாத்தியமாவதன் பின்னணி களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடு; மாநில அரசுகளின் உத்வேகமே அதைச் சாத்தியமாக்கிறது.
- கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாநிலங்களின் குரல் ஆரம்பத்திலேயே கலந்தாலோசிக்கப்பட்டிருந்தால், எவ்வளவோ உயிர்ப் பலிகளையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் அலைக்கழிப்பையும் நாம் தவிர்த்திருக்க முடியும். கரோனாவுக்கு மட்டும் இல்லை இது.
- இந்தியாவின் ஒவ்வொரு நகர்வுக்குமே இந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. தடுப்பூசி சாதனைத் தருணத்தில் இந்திய அரசு இதுபற்றியெல்லாம் யோசிக்க வேண்டும். ஒன்றிணைந்து செயலாற்றுதல் என்பது கூட்டுச்சிந்தனையில் ஆரம்பமாகிறது என்பதை அது உணர வேண்டும்.
அருஞ்சொல் (22 - 10 - 2021)