TNPSC Thervupettagam

ஒரு கொடியில் இரு மலர்கள்

January 19 , 2025 18 days 40 0

ஒரு கொடியில் இரு மலர்கள்

  • பொதுவாகவே பெண்களுக்குள் பெரிதான ஒற்றுமை கிடையாது என்று ஒரு நம்பிக்கை உண்டு. ‘பிக் பாஸ்’ என்னும் நிகழ்ச்சியில் சமீபத்தில் பவித்ரா என்பவர் இரண்டு லட்சம் ரூபாய் கொண்ட பெட்டியை எடுப்பதற்காக ஓடுகிறார். அப்போது அவருக்கு ஜாக்குலின் மிகவும் உதவியாக இருக்கிறார். அவர்கள் இருவரும் உணர்வுபூர்வமாக நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகளும் மௌனங்களும் மிக அழகாக இருந்தன.
  • அந்த நிகழ்ச்சி நான் பெரிதும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியல்ல. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய மன வேற்றுமைகளை டிஆர்பி ரேட்டிங்கிற்காக மிக அதிகமான அளவில் ஊதிப் பெருக்கி மார்கெட்டிங் செய்வது வழக்கம். அங்கும் இங்குமாகச் சில நேரம் சமூக ஊடகங்களில் வந்துசேரக்கூடிய காட்சிகளும் என் கணிப்பை உறுதிப்படுத்துவதாகத்தான் இருக்கும், பவித்ரா - ஜாக்குலின் காட்சியைத் தவிர.

பிரித்து வைக்கும் அரசியல்:

  • என் வாழ்க்கையின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து என்னோடு சேர்ந்து இருந்து பணியாற்றிய பெண்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். எங்கிருந்து கிளம்பி வந்திருக்கும் ‘பெண்ணே பெண்ணுக்கு எதிரி’ என்னும் இந்தச் சொற்றொடர்? இதைக் கேட்கும்போது நகைச்சுவை பொருந்தியதாக – நக்கல் நிறைந்த ஒரு சொற்றொடராகத்தான் இந்தச் சமூகம் இதன் அர்த்தத்தைப் புரிந்துவைத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஆண் மனதின் கட்டமைப்போடு செதுக்கப்பட்டு இருக்கிற இந்த வாசகத்தை நம்பிப் பல பெண்கள் தங்களுடன் இருக்கும் பெண்களுடன் ஒரு பிணைப்பை உண்டு பண்ண மறுக்கிறார்கள். முரண் என்பது எப்போதுமே சேர்ந்து இருக்கும் இருவருக்குள் ஏற்படக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால், அதை இவ்வளவு தூரத்திற்கு ஊதிப் பெருகச் செய்வதில் எப்போதுமே அரசியல் உண்டு.
  • பல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதுவும் தங்கள் மனதில் உள்ள எந்தவொரு விஷயத்தையும் எந்தவொரு தேர்வையும் எந்தவொரு நம்பிக்கையையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முடியாத இடத்தில்தான் குடும்ப அமைப்பிலிருந்து சமூகம் வரை அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்குள் எப்போதுமே மனரீதியான ஒரு பாதுகாப்பின்மை இருக்கும். ஆனால், அந்தப் பாதுகாப்பின்மையை ஆண் மனக் கட்டமைப்பைக் கொண்ட பெண்களும் ஆண்களும் எப்படி உபயோகப்படுத்திக் கொள்கின்றனர் என்பது முக்கியமானது.

பெண்கள் விடுக்கும் சவால்:

  • எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழி இருந்தார். என்னுடைய கண்ணாடி பிம்பம் என்று அவரைச் சொல்லலாம். நாங்கள் இருவரும் தொழில்ரீதியாகச் சேர்ந்து பயணித்து வந்தோம். எங்கோ ஒரு சிறு கீறல் தொழில் ரீதியாக ஏற்பட்டபோது அவர் முற்றிலுமாக என்னை விட்டு விலகிக்கொண்டார். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு மன வருத்தங்கள் இருந்தால்கூட ஒரு தேநீர் அருந்தியபடி அதைப் பேசி இணக்கமாக முடிவெடுத்து இருக்கலாம். ஆனால், அதை விட்டுவிட்டு விலகிச் செல்வது என்பது என்னைப் பொறுத்தவரை தவறான ஒன்றாகும். இரு பெண்கள் சேர்ந்து ஜெயிப்பதை இந்த ஒட்டுமொத்த ஆண் உலகத்தின் முன் நாம் விடுக்கும் சவாலாகத்தான் நான் பார்க்கிறேன்.
  • பெண்கள் சந்தோஷமாக இருப்பதையே பலரால் - சில பெண்களால்கூடச் சகித்துக்கொள்ள இயல்வதில்லை. ஏன் இரண்டு பெண்கள் பிரிந்து இருக்க வேண்டும்? அதனால் மற்றவர்களுக்கு என்ன ஆதாயம் என்று யோசித்துப் பார்த்தால், குடும்பங்களில் இரண்டு பெண்கள் பிரிந்திருப்பது, சம்பந்தப்பட்ட ஆணுக்குப் பெயரிப்படாத அதிகாரத்தைக் கொடுக்கிறது. தன்னை நல்லவனாக வடிவமைத்துக் கொள்ள வேண்டிய சிக்கலும் அதனால் தீர்ந்துவிடுகிறது. “அவங்களுக்குள்ளாவே அடிச்சிக்கிறாங்க பிடிச்சிக்கிறாங்க” எனத் தோளைக் குலுக்கினபடி கடந்துவிடுகிறார்கள்.

புரிதல் வேண்டும்:

  • அதேபோல் தொழில் ரீதியாக வேலை செய்யும் இடத்தில் இரண்டு பெண்கள் விலகி இருப்பது அங்கு இருக்கக்கூடிய ஆண்களுக்கு அல்லது ஆணின் மனக்கட்டமைப்பைக் கொண்ட பெண்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கிறது. தாங்கள் அனுபவித்த ஒடுக்குமுறையின் காரணமாக எல்லாப் பெண்களுக்கும் அதிகாரம் சார்ந்த அல்லது அதிகாரம் நாடிய ஒரு மனநிலை குடும்பங்களிலும் சமூகத்திலும் தேவைப்படுகிறது. அதைக் கைப்பற்ற நினைக்கும்போதுதான் இரண்டு பெண்களுக்குள் மிக இயல்பாகப் பொறாமை உணர்வு எட்டிப் பார்க்கிறது. சுற்றி இருக்கிறவர்களும் அவர்களின் பிணக்கை ஊதிப் பெருக்கும்போது அங்கு மனக்கசப்பும் பிரச்சினைகளும் மட்டுமே உருவாகின்றன.
  • இதைத் தவிர்ப்பதற்கு முதலில் இணைந்து செயல்படும் பெண்களிடம் அடிப்படைப் புரிதல் வேண்டும். ஓர் ஆணின் நன்மதிப்பைப் பெறுவது யார் எனும் போட்டி மனநிலையைக் கைவிட வேண்டும். பாலின அரசியலின் மையப்புள்ளியில் சமூகக் கட்டமைப்பே பெண்கள் இணைவதைத் தடுப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உரையாடலின் மூலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எதுவுமே நமக்குள் வந்துவிடக் கூடாது. நாம் பிளவுபடுவது என்பது இங்கு நாம் பிளவுப்படக் காத்திருக்கும் நபர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு விஷயம். அந்த சந்தோஷத்தை ஒருபோதும் நாம் யாருக்கும் தந்துவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு தீர்மானம் இருக்கும்பட்சம் எந்த உறவும் சிறு சிறு பிணக்குகள் காரணமாக விலகிப்போக வேண்டிய அவசியம் நேரவே நேராது.
  • தான் கொண்டு வந்திருந்த பணப்பெட்டியின் பணத்தை அப்படியே ஜாக்குலினிடம் பவித்ரா நீட்டுவதுபோல, தாங்கள் பெறக்கூடிய வெகுமதிகளை அந்த இரண்டு பெண்களும் ஒருவருக்கு ஒருவர் நிச்சயமாகப் பரிசளித்துக் கொள்ளக்கூடும். அதுவே பெண் மனவுலகின் மிகப்பெரிய சவாலைக் கடந்ததாக இருக்கும்.
  • ஒரு புன்னகையும் ஒரு தேநீரும் அதைச் சாதிக்கும். மாறலாமா?

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories