TNPSC Thervupettagam

ஒரு சங்கக் காதல் கதை

September 29 , 2024 60 days 115 0

ஒரு சங்கக் காதல் கதை

  • சங்க காலப் பெண் கவிஞர்களில் காவியத்தன்மையுள்ள ஒருவர் ஆதிமந்தியார். இவர் இயற்றியது ஒரே ஒரு பாடல்தான். அது குறுந்தொகைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இவர் பற்றி அகநானூற்றுப் பாடல்கள் ஐந்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் மதுரை காண்டமும் இவரைப் போற்றுகிறது. நவீனக் காலத்தில் பாரதிதாசனும் கண்ணதாசனும் இவரைப் பற்றி இயற்றியுள்ளனர். எம்.ஜி.ஆர். நடிப்பில் ஒரு படமும் வெளியாகியுள்ளது.
  • ஆதிமந்தியார் போற்றப்படுவது சோழ மன்னன் கரிகால் வளவன் மகள் என்கிற காரணத்தால் அன்று; சேர இளவரசன் ஆட்டனத்தி மீது அவர் கொண்ட உண்மையான காதலால்தான்.
  • காதல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் போற்றப்பட்டு வருவதை நாம் இலக்கியங்களில் பார்க்கிறோம். பெருந்துன்பத்தையும் வேதனையையும் தரும் இந்தக் காதல், இகழப்பட வேண்டியதுதான். மாறாக விதந்தோதப்படுவது விநோதமானது. இயல்பாகவே மனம் வேதனைக்கு ஏங்கும் அமைப்பு கொண்டதுபோல. அதனால்தான் வாதை தரும் காதல் தொடர்ந்து போற்றப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சிதான் ஆட்டனத்தி-ஆதிமந்தியார் காதல் கதை. ஆதிமந்தியாரின் தந்தை கரிகால் வளவனுக்கு இந்தக் காதல் அவ்வளவு பிடிக்கவில்லைபோல. ஆதிமந்தியார் தோழிக்கு உரைப்பதுபோல் தன் காதலை, தன் மனம் கொண்ட தலைவனைப் பற்றி இந்தக் குறுந்தொகைப் பாடலில் உரைக்கிறார்.

ஆடும் களத்தின் ஒருவன்

  • ‘மள்ளர் குழீஇய விழவி னானும்/மகளிர் தழீஇய துணங்கை யானும்/யாண்டுங் காணேன் மாண்தக் கோனை/யானுமோர் ஆடுகள மகளே என்கைக்/கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த/பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே’ என்கிற இந்தக் கவிதையில் மள்ளர் ஆடும் இடங்களில் தேடினாலும் மகளிர் துணங்கைக் கூத்து ஆடும் இடங்களில் தேடினாலும் அவனைக் காண முடியவில்லை என்கிறார் கவிஞர். நானும் ஆடும் களத்துக்கு உரியவள்தான். சங்கில் செய்த என் வளையல்களை நெகிழச் செய்தவனும் ஆடும் களத்தின் ஒருவனே என முடிக்கிறார். இந்தக் கவிதையில் தன் தலைவன் யார் எனக் குறிப்புணர்த்துகிறார். வளையல் சிறுத்து அது நெகிழ்ந்துவிட்டது என்கிற இடம் சங்கக் கவிதைகளில் நாம் காணக்கூடிய விவரிப்புதான். ஆனால், இந்தக் கவிதையில் இதன் கவித்துவ அழகியலையும் காதலின் ஆழத்தையும் இந்த வரிகள் கொண்டுள்ளன. சங்கில் செய்த வளையல்களை நெகிழச் செய்தவன் என்கிற பிரயோகம் தலைவி கொண்ட காதலின் ஆழத்தை உணர்த்துகின்றது.
  • இந்தக் காதல் மலர்ந்து எத்தனை காலம் ஆகிவிட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். மள்ளர் ஆடும் இடங்களில் அவனைத் தேடினேன் என்கிற வரி இருவிதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது. ‘மள்ளன்’ என்றால் வீரன் எனப் பொருள் கொள்ளலாம். வேளாண் சார்ந்த தொழில்செய்யும் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. துணங்கைக் கூத்திலும் தலைவி தேடுகிறாள். இது உழைக்கும் பெண்கள் களைப்பு போக ஆடும் ஆட்டம். இதில் ஏன் தலைவனைத் தேடுகிறாள். அவன் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவனா என்கிற கேள்வி எழுகிறது. தன் தலைவன் யார் என்பதை உரைப்பதாக உள்ளதால் இந்தக் கேள்விகளுக்கு அர்த்தமும் இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இந்தக் காதல் உணர்த்தப்பட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டதோ எனவும் தோன்றுகிறது. இது கரிகால் வளவனுக்கான பாடலாக இருக்க வேண்டும்.

காதல் என்னும் பெரும் பொருள்

  • சங்கக் கவிஞர் வெள்ளிவீதியார் தன் அகநானூற்றுப் பாடலில் (45) ஆதிமந்தியாரின் காதலைக் குறிப்பிடுகிறார். ‘ஆதிமந்தி போலப் பேது உற்று/அலந்தனென் உழல்வென்’ என்கிற வரியில் ஆதிமந்தியாரின் காதல் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் அவர். சங்கக் கவிஞர் பரணரின் பாடல்கள் நான்கில் ஆட்டனத்தியும் ஆதிமந்தியாரும் அவர்கள்தம் காதலும் பதிவாகியுள்ளது. கடல் நீரில் உடல் மறைத்தும் வெளிப்படுத்தியும் நீந்திச் செல்லும் ஒரு பெரிய மீனைப் போல அகநானூற்றுப் பாடல்களில் ஆட்டனத்தி-ஆந்திமந்தியாரின் காதல் கதை உருக்கொள்கிறது.
  • காவிரியில் ஒரு நீச்சல் நடனத்தை ஆட்டனத்தி ஆடியிருக்கிறான். அந்த ஆட்டத்தினூடே காவிரி அவனை இழுத்துச் சென்றுவிடுகிறது. ஆதிமந்தியார், தன் தலைவனைத் தேடி காவிரி ஆற்றங்கரை வழியே ஓடுகிறார். அவனைக் கடல் ஒப்படைத்துவிடுகிறது. மருதி என்கிற மீனவப் பெண் அவனைக் காப்பாற்றிவிட்டு அவள் காவிரியோடு சென்றுவிட்டாள் என பரணர் 222ஆம் அகநானூற்றுப் பாடலில் சொல்கிறார்.
  • ‘மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன்/தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று/கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து/முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு’ என்று சிலப்பதிகாரமும் இதே சம்பவத்தைச் சொல்கிறது. கடல் வந்து அவனைத் திரும்ப ஒப்படைப்பதன் காரணம் சொல்லப்படவில்லை. அது ஆதிமந்தியார் கொண்ட காதலால்தான் என நாம் கூட்டி வாசிக்க வேண்டும். இதையெல்லாம் சேர்த்து வாசிக்கும்போது ஆதிமந்தியாரின் சிறு கவிதை, பெரும் பொருள் காதலுடன் நம் முன்னே விரிகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories