- ஐரிஷ் நாவலாசிரியரான ஃபால் லிஞ்சுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. நாற்பத்தாறு வயதான பால், தன்னுடைய இலக்கியப் பயணத்தைத் தாமதமாக 2013இல் அவரது முப்பத்தாறாம் வயதில்தான் தொடங்கினார். அதற்கு முன் அவர் ஒரு சினிமா விமர்சகராக இருந்துவந்துள்ளார் என்பது சுவாரசியமான செய்தி. பால் சிக்கலான கருப்பொருள்களை நாவல்களுக்கு எடுத்துக் கொள்பவர். இதுவரை ஏராளமான விருதுகளை வென்றவர். அவரது ஐந்தாவது நாவலான ‘பிராஃபெட் சாங்’ (‘Prophet Song’) புக்கர் விருதைப் பெற்றிருக்கிறது. இம்முறை விருது எப்படி இருந்தாலும் அயர்லாந்துக்குத்தான் என்பதுபோல இருந்தது புக்கர் இறுதிப் பட்டியல். இந்த நாவலுக்கு அடுத்த நிலையில் இருந்ததும் ஓர் அயர்லாந்து நாவல்தான்.
- சில நேரம் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாசித்த நாவலை மீண்டும் எடுத்து வாசிக்க ஆரம்பிக்கும் வரை, முன்னர் படித்தது நினைவில் இருப்பதில்லை. சில நாவல்கள் எல்லாம் ஐம்பது, அறுபது பக்கங்கள் வாசித்த பிறகே தெரிந்திருக்கிறது. ஆனால், ‘பிராஃபெட் சாங்’ போன்ற நாவல்களை எளிதாக மறக்க இயலாது. வாசித்து முடித்து அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அதனால், இந்த நாவல் என் நினைவில் இன்றும் உள்ளது; இன்னும் இருக்கும்.
- துப்பறிவாளர்கள் இருவர் வந்து கதவைத் தட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது நாவல். கணவனைத் தேடி வந்தவர்களுக்குப் பதில் சொன்ன மனைவி, அரசுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றைக் கணவன் செய்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறாள். ஆனால், அவர்கள் நாடு இனி அவர்களுக்கானதல்ல என்பது அவளுக்கும் கணவனுக்கும் தெரியாத ஒன்று. மண்ணின் மைந்தர்களாகவே இருந்தபோதிலும் சுதந்திரத்தைக் குறித்துப் பேசுபவர்கள் இருக்கும் சுதந்திரத்தையும் இழப்பது உறுதி.
- ‘எப்போது வெளியேறுவது என்பது தெரியாத மக்கள் குறித்துப் பதிவுசெய்வதில் வரலாற்றில் ஒரு விடுபடல் உண்டு’ நாவலில் வரும் ஒரு வரி இது. பாதுகாப்பான சூழலில் வாழும் நம்மைவிட, ஈழத்துச் சகோதரர்கள் இந்த வரியின் வலிமையை அறிந்துகொள்வார்கள். அயர்லாந்தில் பாசிஸம் தன் ஆக்டோபஸ் கைகளினால் எல்லோரையும் இறுக்கத் தொடங்குகிறது. அரசியல் தலைவனான கணவன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு எங்கு இருக்கிறான் என்பதே மாதங்கள் பல கடந்தும் தெரியவில்லை. பதினேழு வயது மகன் பாசிஸத்தை எதிர்க்க வீட்டைவிட்டு ஓடிப் போராளிகளுடன் இணைகிறான். பதினான்கு வயதுப் பெண் உட்பட, மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு உணவு, மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் வழியின்றி எந்நேரமும் கொல்லப்படலாம் என்ற பயத்தில் மனைவியின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
- மெல்விலி, தஸ்தயெவ்ஸ்கி, கான்ராட், ஃபாக்னர் போன்ற எழுத்தாளர்களால் தூண்டுதல் பெற்றவர் பால். அவருடைய பத்து வயதுக்குள், ஹார்டி பாய்ஸ் தொடரின் எண்பத்தைந்து நூல்களையும் வாசித்தவர்; தொடர் வாசிப்பில் இருப்பவர். இந்த நாவலை எழுத ஆரம்பித்தபோது மகன் பிறந்ததாகவும், முடிக்கையில் அவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
- இதற்கு முன் இந்த நாவலை எழுத ஆறு மாதங்கள் முயன்று அந்தப் பிரதி சரியாக வரவில்லை என்று கைவிட்டார். நாவல் வெளியாவதற்கு ஒரு வருடம் முன்பு புற்றுநோயால் பால் பீடிக்கப்பட்டார். அதன் பிறகு அது குணமானது. இந்த நாவல் எழுதுவதால் தன்னுடைய இலக்கிய வாழ்விற்கு முற்றுப்புள்ளி வந்து விடுமோ என்ற அச்சமும் பாலுக்கு இருந்திருக்கிறது. வெளியாக வேண்டும் என்று புத்தகம், தானே தீர்மானித்துவிட்டால் யாரும், எதுவும் அதைத் தடுப்பதற்கில்லை.
- பிறழ் உலக நாவல்கள் எல்லாமே வாசிப்பதற்குக் கடினமானவை. பால் இடைவெளி விடாது அழுத்தத்தை அதிகப்படுத்திக்கொண்டே போகிறார். பாசிஸம் ஆரம்பிப்பதில் இருந்து அதன் உச்சத்தை அடையும் வரையான தகவல்கள் நாவலில் வருகின்றன. அயர்லாந்து என்ற பெயரை எடுத்துவிட்டால் எந்த நாட்டுக்கும் பொருந்தும் நாவல். இந்த ஆண்டு வாசித்த சிறந்த பத்து நாவல்களில் இதுவும் ஒன்று. தமிழுக்கு யாரேனும் கொண்டுவர வேண்டும்.
- இந்த நாவலை எழுத சிரியப் போர் பாலைத் தூண்டியிருக்கிறது. அயர்லாந்துக் குடியரசில் பாசிஸம் என்பது இருந்ததேயில்லை. நீலச்சட்டைப் போராட்டம் எல்லாம் அயர்லாந்து குடியரசாகும் முன் நடந்தவை. ஆனாலும், ஒரு ஜனநாயக நாடு பாசிஸ்ட்டுகள் கையில் சேர்வதற்கு அதிக நேரம் தேவைப்படுவதில்லை. அட்வுட் எழுதிய ‘Handmaids Tale’ (தமிழில் ‘சேடிப்பெண் சொன்ன கதை’ என்கிற பெயரில் வெளியாகியுள்ளது) வெளிவந்தபோது அபத்தமான கற்பனை என்று அமெரிக்காவில் சிலரிடம் விமர்சனம் இருந்தது. அதே போன்ற விமர்சனத்தை இந்த நாவலும் வெகு சிலரிடமிருந்து பெற்றது. மிகவும் அச்சுறுத்தும் ஒன்று தனக்கு நேராது என்று சொல்வதே மனித சுபாவம். நாவலை வாசிக்கும் எவரும் ஜனநாயகத்தில் எவ்வளவு சுதந்திரமாக மூச்சு விடுகிறோம் என்று நினைத்து ஆசுவாசப்படாமல் இருக்க முடியாது. அது இந்த நாவலின் வெற்றி.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2023)