பலரையும் பிரமிக்க வைத்தவர் சகுந்தலாதேவி. அவரை ‘மனிதக் கணினி’ என்பார்கள். 1988இல் அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ‘95443993’ என்கிற எண்ணின் கன மூலம் (cube root) என்ன? என்று ஒருவர் கேட்க, ‘457’ என்று பதிலளிக்க சகுந்தலாதேவி எடுத்துக்கொண்ட நேரம், வெறும் இரண்டு நொடிகள்தாம். ‘மிக வேகமாகக் கணக்கிடுபவர்’ என்று கின்னஸ் அமைப்பு அவருக்கு அங்கீகாரம் அளித்தது.
இவரைப் போன்ற கணிதப் புலிகளின் மூளையில் ஏதாவது சிறப்பு சக்தி இருக்குமா? அவர்கள் மூளை பிறர் மூளைகளிலிருந்து வேறுபடுமா? இந்தக் கேள்விகள் சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர் களுக்கும் நெடுநாள்களாக நீடிக்கிறது. ஆனால், சகுந்தலாதேவியின் மூளை ஆராயப்படவில்லை. கணிதத் திறமையின் உச்சம் என்று பலரால் கொண்டாடப்படும் ஸ்ரீனிவாச ராமானுஜனின் மூளையும் ஆராயப்படவில்லை.
கணிதமும் ராமானுஜனும்
தனது பன்னிரண்டாவது வயதில் மூத்த மாணவர் ஒருவரிடமிருந்து எஸ்.எல். லின்னே என்பவர் எழுதிய கடினமான கணித நூலைப் பெற்று, அதை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டார் ராமானுஜன். அந்தச் சிறுவயதிலேயே பூமியின் சுற்றளவைக்கூட கணித்துவிட்டார். கணிதத் தேர்வு என்றால் வேகமாக விடைகளை எழுதிவிட்டு, தேர்வு அறையில் இருந்து வெளியேறிவிடுவாராம்.
தன் வாழ்நாளில் 3,900 சூத்திரங்களை அவர் கண்டறிந்துள்ளார். அவற்றைக் கண்டறிவதற்காக அவருக்கு நிறைய தாள்கள் தேவைப்பட்டன. ஆனால், தாள்கள் வாங்கக்கூடப் பணம் இல்லாததால் சிலேட் ஒன்றில் எழுதிவிட்டு முக்கியமான கணித முடிவுகளை மட்டுமே தாளில் எழுதியிருக்கிறார் என்கிறது வரலாற்றுச் செய்தி.
ராமானுஜன் தான் கண்டறிந்தவற்றுக்கு எல்லாம் ஆதாரம் என்று எதையும் வெளியிட வில்லை. ஆனால், காலப்போக்கில்தான் பல கணித மேதைகள் ஆராய்ந்து ராமானுஜனின் கணித முடிவுகள் உண்மை என்று கண்டறிந்தனர். அவர் இறந்த பிறகு அவரது மூன்று நோட்டுப் புத்தகங்களும் சில தாள்களும் கண்டறியப்பட்டன. அவை கணித உலகின் பொக்கிஷங்கள். அவர் வாழ்ந்த காலத்தில், கணித ஆராய்ச்சியில் பிற கணித மேதைகளைவிட நூறு வருடங்கள் முன்னதாக இருந்தார் எனலாம்.
ஆராய்ச்சி முடிவுகள்
உலகளவில் சில கணித மேதைகளின் மூளைகள் அவர்கள் இறந்த பிறகு ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டன. ஒரு முறை பியானோவை வாசிக்க உட்கார்ந்தபோதுதான் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு ‘ரிலேட்டிவிட்டி’ தொடர்பான புதிய முடிவுகள் தோன்றின என்பார்கள். அவரது மூளையின் ஒரு பகுதியை இப்போதும் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள அருங் காட்சியகத்தில் காண முடியும்.
1955இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறந்த பிறகு, (உறவினர்களின் அனுமதியைக்கூட பெறாமல்) அவரது மூளை ஆராய்ச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஐன்ஸ்டைனின் முன்பக்க மூளை சற்றுப் பெரிதாக இருந்தது (சராசரி அளவைவிட சுமார் 15% பெரிதாக இருந்துள்ளது) தெரிய வந்தது.
கணிதத்துக்கு உதவும் மூளைப் பகுதி என்று கருதப்படும் உச்சி பக்க மடலின் கீழ்ப் புறம் (inferior parietal lobe) சராசரியைவிட அதிகமாக இருந் துள்ளது. ஆனால், இதனால்தான் அவர் கணித மேதையாக இருந்தார் என்று ஆராய்ச்சியாளர்களால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.
அதாவது ‘ஐக்யூ’ எனப்படும் அறிவாற்றல் விகிதம் அதிகமாக இருக்க வேண்டுமானால், மூளை எப்படி இருக்க வேண்டும் என்பது இன்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புரியாத புதிராக உள்ளது. ஆக, மூளையின் புறவடிவமைப்பியல் (Brain Morphology) தொடர்பாகத் தீர்மானமான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகவில்லை எனலாம். சில நேரம் பெரிய மூளை என்பது குறைவான செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றுகூடச் சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
தொடரும் ஆராய்ச்சி
அல்ஜீப்ராவில் பல புதிய சிந்தனைகளை விதைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனே தெக்கார்த் 1650இல் அவர் இறந்த பிறகு, அவரது மூளை தனியே பிரிக்கப்பட்டது என்றாலும், அதைச் சரியாகப் பாதுகாக்காமல் விட்டுவிட்டார்கள். அண்மையில் அவரது மண்டை ஓடுகளை ஆராய்ந்தபோது அவை பிற சராசரி மனிதர்களுக்கு இருப்பதைப் போலத்தான் இருக்கிறது என்று ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.
எனினும் அவரது மூளையின் முன் பகுதியில் மட்டும் சிறிய வீக்கம் (மேடு) இருந்துள்ளது. ஆனால், இந்தத் தகவல்களைக் கொண்டு கணிதப் புலிகளின் மூளையைப் பற்றி முடிவுக்கு வந்துவிட முடியுமா என்றால் முடியாது. சராசரி மனிதனின் மூளையில்கூட இதுபோன்ற வீக்கம் ஏற்படுவது இயல்புதான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஜெர்மனியைச் சேர்ந்தவர் கணித மேதை ஜேம்ஸ் ருடால்ஃப் வாக்னர். அவரது மூளையை ஆராய்ந்தபோது, அது சராசரியைவிடச் சற்று அதிக எடை கொண்ட தாகவும், அதிக மடிப்புகள் கொண்டதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. சார்லஸ் பாபேஜ் என்பவர் ஒரு பிரபல கணிதவிய லாளர். ‘கணினிகளின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். தான் உயிரோடு இருந்த போதே தன் மூளையைத் தானம் செய்ய ஒப்புக்கொண்டவர்.
அவரது மூளையின் ஒரு பாதி லண்டனில் உள்ள ஹன்டேரியன் அருங்காட்சியகத்திலும் மறுபாதி லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டிருந்தாலும், திருப்புமுனையான எந்தக் கண்டுபிடிப்பும் இதனால் வெளிவரவில்லை. எனவே, கணிதப் புலிகளின் மூளைகள் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.