- நம் தனிப்பட்ட வாழ்க்கையில் சமூக அழுத்தங்கள் காரணமாக ஏற்படுத்தப்பட்ட சிக்கல்கல்களில் உறவுகள் சிக்கித் தவிக்கின்றன. இங்கே ஒட்டுமொத்தமாக ஆண் இனத்தையோ பெண் இனத்தையோ குறை கூறிவிட இயலாது. தனி மனிதர் ஒவ்வொருவரும் தன் அறிவை உபயோகித்துத் தன் வாழ்வைத் தான் நிர்ணயித்து வாழும் வழியை அடைப்பதற்காகவே பலவிதங் களில் மனிதர்கள் பிறந்தது முதல் மூளைச் சலவை செய்யப்படு கிறார்கள்.
- உடைகள், சிகை அலங்காரம், விளையாட்டுப் பொருள்கள் என அனைத்தி லும் ஆண் குழந்தைகளுக்கு வேறு, பெண் குழந்தைகளுக்கு வேறு என்றுதான் பிரித்து வைத்திருக்கிறோம். சிறிது வளர்ந்ததும் பாடப்புத்தகத்தைத் தாண்டி வாங்கிக்கொடுக்கும் புத்தகங்களிலும் அதே நிலைதான். பெண் பிள்ளைகளுக்கு Fairy Tales எனச் சொல்லப்படும் தேவதைக் கதைகளும், ஆண் பிள்ளைகளுக்கு Adventure Stories எனப்படும் சாகசக் கதைகளும்தாம் பெரும்பாலும் வாங்கித்தரப்படுகின்றன. இப்படி ஆண்கள் வேறு பெண்கள் வேறு என்று பிரித்து, பிரித்து இருவர் உலகையும் தனித்தனியாக உருவகித்துவிட்டோம். ஒருவருடன் ஒருவர் இணைந்து விளையாடிப் பலகதைகள் பேசி வாழும் சூழலை நாம் உருவாக்கவில்லை.
- தற்போது நிலைமை வெகுவாக மாறிக் கொண்டு வருகிறது என்றாலும் இன்னும் முற்றிலுமாக இந்தப் பேதங்கள் களைய பல காலம் ஆகலாம். நாம் முன்னேறிவிட்டதாகக் கூறிக்கொண்டாலும் இன்றைக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிப்பள்ளி களும், கல்லூரி களும் இருப்பதே நாம் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பதை உணர்த்துகிறது. ஆணும் பெண்ணும் இணைந்து வளரும்போது பாகுபாடுகள் இருக்காது. ஆண் - பெண் நட்பு என்பது இயல்பாக மலரும். எதிர்பாலினத்தவரைப் பார்த்தாலோ பழக வேண்டியிருந்தாலோ அவசியமில்லாத படபடப்புகள் இருக்காது. பெண்களிடம் பேசியே பழகாத ஆண்பிள்ளைகளுக்கு ஒரு பெண் சிரித்துப் பேசினாலேயே காதல் என்கிற கற்பனை பெருகாது. இருவரும் ஒருவரை இன்னொருவர் மதித்து, புரிந்து, கலந்து வாழும் வாய்ப்பு என்பது இங்கு பெருவாரியான பிள்ளைகளுக்கு அமைவதில்லை.
வளர்ப்பில் இருக்கும் இடைவெளி
- இப்படி ஒரே உலகில் பிறந்து ஒருவருக்கு இன்னொருவர் இன்றியமையாது வாழ வேண்டிய வாழ்க்கையில், பிறந்ததில் இருந்து எதற்கு இவ்வளவு பிரிவினைகள்? ஏன் ஒரே உலகில் இருந்துகொண்டு இரு வேறு உலகை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்? பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பார்கள். ஏன் பெண்ணுக்குப் பாதுகாப்பு? ஆண்கள் வளர்க்கப்படும் விதத்தால் வரும் விளைவுதான் இது. அத்தனை ஆண்களும் அப்படியா என்றால் கண்டிப்பாக இல்லை. தன் குடும்பத்தில் இருக்கும் பெண்களை மதித்து வளரும் எந்த ஆணும் எந்தப் பெண்ணுக்கும் தீங்கு விளைவிக்க மாட்டான். அந்த மதிப்பு எங்கிருந்து வரும்? நம் வளர்ப்பிலிருந்து தான். தன் தாயையும் மனைவியையும் சகோதரிகளையும் மகளையும் தனக்குச் சமமாக மதித்து நடக்கும் தந்தை இருக்கும் வீட்டில் மகனும் பெண்களைத் தனக்குக் கீழாக நினைக்க மாட்டான். உதாரணமாக, பெண்களின் பிரத்யேக உடல் உபாதைகளை அவனுக்குப் புரியவைத்து, மாதவிடாய் நாள்களிலோ மற்ற உடல் உபாதைகளின் போதோ வீட்டு வேலைகளைச் செய்ய சிறுவயதிலிருந்து பணித்திருந்தால், நாளை தன் மனைவியின் பிரச்சினைகளையும் அவன் புரிந்து செயல்படுவான்.
கற்பிக்கப்படும் இலக்கணம்
- மனம் என்பது இருவருக்கும் ஒன்றுதான். உணர்வுகளும் ஒன்றுதான். அதனால், உடல் பிரச்சினைகள் தவிர்த்து இருபாலருக்கும் மற்ற எல்லாப் பிரச்சினைகளும் பொறுப்புகளும் சுகங்களும் விருப்பங்களும் மற்ற எல்லாமும் ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இருவரையும் வேற்று கிரக மனிதர்களாக்கி, ஆணுக்கு இந்த இலக்கணம், பெண்ணுக்கு இந்த இலக்கணம் என்று புகுத்தி, அவன் இதைக் கற்க வேண்டும், அவள் இதைக் கற்க வேண்டும் என்று பிரித்துக்கொடுத்து, அவன் இப்படித்தான் இருக்க வேண்டும், இவள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனிமனித உணர்வுகள் வரை இந்தச் சமுதாயமே அனைத்தையும் நிர்ணயித்துவிடுகிறது. இறுதியில் இவர்களாக நிர்ணயித்திருக்கும் வயது வந்ததும், திருமணம் என்கிற பந்தத்தில் தள்ளி இனி இருவரும் சேர்ந்து வாழ்ந்துகொள்ளுங்கள் என்றால் என்ன புரிதல் இருக்கும் இருவருக்கும்?
- இதில், ‘பெண்கள் மனசு ரொம்ப ஆழம். என்ன நினைக்கிறாங்கனு யாருமே கண்டுபிடிக்கவே முடியாது’ என்று வசனம் வேறு பேசுவார்கள். மனம்விட்டுப் பேச இடம் அளித்து வளர்த்திருந்தால்தானே அவள் பேசுவாள். அவளுக்கென்று ஒரு மனமே இல்லாததுபோல் அவளை நடத்தும் இடத்தில் அவள் உள்ளுக்குள்தானே அனைத்தையும் சுமக்க முடியும்? பிறகு ஆழம், அழுத்தம் என்று வசனம் பேசி என்ன பலன்? தன் குடும்பப் பெண்களின் மனத்தையே புரிந்துகொள்ளால் வளரும் ஆண்கள், தன் வீட்டு ஆண்களின் மனம் புரியாத பெண்கள் திடீரென ஏற்படுத்திக்கொள்ளும் உறவில் மட்டும் எங்கிருந்து புரிதலைக் கொண்டுவருவார்கள்?
மாற்றமே முன்னேற்றும்
- சிந்தனையாற்றலை வைத்துத்தான் மனிதருக்கு ஆறறிவு என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், பெருமைக்குரிய இந்த ஆறாம் அறிவை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்? மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்ப்பதற்கு அறிவை உபயோகப்படுத்தி அழகாக வாழ்வதைவிட, மற்றவர் மேல் எப்படி ஆதிக்கம் செலுத்தி நாம் பயனடையலாம் என்பதற்குப் பயன்படுத்துகிறோம். இல்லையென்றால், நமக்கு ஏன் தேவையில்லாத வேலை, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, அதனால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவைத் துருவேற விட்டுவிட்டு மாற்றங்கள் எதைவும் ஏற்க மனமில்லாத வாழ்க்கையை, அது நம் வாழ்க்கையையே சீரழித்தாலும் பரவாயில்லை என்று வாழ்வதற்குப் பயன்படுத்துகிறோம்.
- மாற்றங்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஒரே இரவில் வருபவை அல்ல. தனி மனிதர்களிடம் மாற்றங்களை உருவாக்கியும், மாற்றங்களை ஏற்றும் வாழத்தொடங்கினால்தான் காலப்போக்கி லாவது சமத்துவம் சாத்தியமாகும். சிலர் மாற்றத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (16 – 07 – 2023)