TNPSC Thervupettagam

ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஒருமித்த கருத்து அவசியம்

September 24 , 2024 114 days 238 0

ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஒருமித்த கருத்து அவசியம்

  • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாகக் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில், இந்த நகர்வு பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
  • இந்தியாவில் 1967ஆம் ஆண்டு வரை மக்களவைக்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டுவந்தன. மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில், மீண்டும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த பாஜக அரசு விரும்புகிறது. இதற்காக ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளுக்குத்தான் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தினால் செலவு கணிசமாகக் குறையும், அரசியல் கட்சிகள் நீண்ட நாள் பிரச்சாரத்தில் இருப்பது தவிர்க்கப்படும், ஆட்சி, சட்டமன்றப் பணிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்பது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம். ஆனால், இத்திட்டம் அதிபர் ஆட்சி முறைக்கு வித்திடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
  • இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசமைப்புச் சட்டக் கூறுகள் 83, 172 இல் முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இருந்தாலும், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இல்லை. எனவே, எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
  • ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போது, சில மாநில அரசுகளை அவற்றின் பதவிக்காலம் நிறைவடையும் முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவாகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதம் புறக்கணிக்கத்தக்கதல்ல. குழுவின் பரிந்துரைப்படி இடையில் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால், மீண்டும் இடைக்காலத் தேர்தல் நடத்தப்படும்.
  • இடைக்காலத் தேர்தலின் மூலம் தேர்வாகும் அரசு முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கும் நீடிக்காது. மீண்டும் மக்களவைக்கும் பிற மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும்போது, இடைக்காலத் தேர்தலைச் சந்தித்த மாநிலம் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். 1980, 1991, 1998, 1999ஆம் ஆண்டுகளில் மத்தியில் இருந்த ஆட்சியும் கவிழ்ந்ததை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணைப்படி மாநிலச் சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்குப் பரிந்துரைக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. இத்திட்டத்தால், இந்த உரிமையை மாநிலங்கள் இழக்க வேண்டிவரும். இது மாநிலத்தின் சுயமான முடிவுகளில் தலையிடுகிற விஷயமாகவும் அமைந்துவிடும். மேலும் மாநிலச் சட்டமன்றங்கள், பஞ்சாயத்துத் தேர்தல்களின் முக்கியத்துவம் குறையும் என்கிற கருத்தையும் மறுதலிக்க முடியாது.
  • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான மிகப் பெரிய நடவடிக்கை. எனவே, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் அவசரம் காட்டாமல், மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் மத்திய அரசு விரிவாகக் கலந்தாலோசிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களுக்குச் சட்ட ரீதியாகத் தீர்வுகளை உருவாக்க வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முன்னெடுக்கும்போதுதான் அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் முடியும். அது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கும் பொருந்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories