TNPSC Thervupettagam

ஒலிம்பிக் மியூசியம்!

July 26 , 2024 173 days 161 0
  • ‘ஒலிம்பிக்ஸின் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது சுவிட்சர்லாந்தில் உள்ள லொஸான் மாகாணம். காரணம், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைமையகம் இங்குதான் அமைந்துள்ளது. பல விளையாட்டுகளின் தலைமையகங்களும்கூட இங்கு அமைந்துள்ளன.
  • இங்குள்ள ‘ஊஷி’ என்கிற பகுதியில் 1993இல் திறக்கப்பட்டது ஒலிம்பிக் அருங்காட்சியகம். உலகிலேயே ஒலிம்பிக்ஸ் தொடர்பான மிகப்பெரிய அருங்காட்சியகம் இது. ஆண்டுக்குச் சுமார் 2.50 லட்சம் பேர் இங்கு வருகை தருகிறார்கள். அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
  • முன்புறம் ஜெனிவா ஏரி, அதன் மற்றொரு கரையில் ஆல்ப்ஸ் மலை, சுற்றிலும் பசுமைப் போர்வை என்று இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இதை உருவாக்கியிருக்கிறார்கள். ஆயிரம் காட்சிப் பொருள்கள், 150 திரைகள் என்று ஒலிம்பிக் தொடர்பான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அப்போதைய தலைவரான யுவான் அன்டோனியோ சமரான்ச் என்பவரின் யோசனையில் டிசம்பர் 31, 2013இல் இது திறக்கப்பட்டது. இதன் பரப்பளவு 3000 சதுர மீட்டர். அருங்காட்சியகக் கட்டிடத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே வெளியில் கண்களையும் கவனத்தையும் பல கலைவடிவங்கள் கவர்கின்றன.
  • ‘அஹிம்சை’ என்கிற தலைப்பில் ஒரு சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு துப்பாக்கி முனை திருகப்பட்டு இறுக்கமாகக் கட்டி இருப்பதுபோல் இது தோற்றமளிக்கிறது. ஜான் லெனன் நினைவாக உருவாக்கப்பட்ட சிற்பம் இது (இவர் உலகப் புகழ்பெற்ற பீட்டில்ஸ் இசைக்குழுவை உருவாக்கி யவர்களில் ஒருவர்.
  • அமைதிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் என்பது போன்ற இவரது பாடல்கள் பெரும் புகழ் பெற்றவை. 1980 டிசம்பர் 8 அன்று நியூயார்க் நகரச் சாலை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.) ஸ்வீடனைச் சேர்ந்த சிற்பி ஒருவர் வடித்த இந்தச் சிலை, ஐ.நா. சபை தலைமையகத்திலும் உள்ளது.
  • ‘இந்தத் துப்பாக்கி வேஸ்ட். இதைப் பயன்படுத்தவே முடியாது’ என்று ஒரு சிறுவன் கூற, ‘நல்லதுதானே’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறிக்கொண்டிருந்தார் அங்கிருந்தவர்.
  • 1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின் போது பாலஸ்தீனக் குழு ஒன்று ஒலிம்பிக் கிராமத்தின் உள்ளே நுழைந்து, பல இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைப் பணயக் கைதிகளாக அழைத்துச் சென்று கொன்றது நம் நினைவுக்கு வந்தது.
  • அருகில் ஒரு பண்டைய ஒலிம்பிக் மல்யுத்த வீரரின் சிலை. நல்ல உடற்கட்டுடன் ஆடையின்றிக் காணப்பட்டது. பண்டைய ஒலிம்பிக்ஸில் ஆண்கள் மட்டுமே ஆடையின்றிக் கலந்துகொண்டார்கள் என்பதைச் சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • வாள்வீச்சு வீரர் ஒருவரின் வித்தியாசமான உருவமும் கண்ணைக் கவர்ந்தது. சற்றுத் தள்ளி இரண்டு கம்பிகளுக்கு இடையே உயரத்தில் கிடைமட்டத்தில் ஒரு கம்பு காணப்பட்டது. அதுதான் இதுவரை ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் பிரிவில் மிக உயரமாகத் தாண்டப்பட்ட அளவாம்.
  • புவியீர்ப்பு விசை அந்த அளவுக்கு அதிகபட்சம் மீறப்பட்டிருக்கிறது. சற்றுத் தள்ளி ‘ஸ்டார்ட்’ என்கிற இரண்டு அறிவிப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து வெகுதூரம் தள்ளி, ஓர் ஆரஞ்சு வண்ணப் பந்தும் அதைவிடச் சற்று அதிக தொலைவில் ஒரு நீல நிறப் பந்தும் காணப்படுகின்றன. அவை முறையே குண்டெறிதல் வீராங்கனை, வீரரின் உச்ச சாதனை தூரத்தைக் குறிக்கின்றன.
  • அதைத் தாண்டினால் பியர் தெ கூபர்டின் சிலை கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகளை நடைபெற பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டவர் இவர். உள்ளே நுழைந்தவுடன் இடது புறம் ஒலிம்பிக் நினைவு மலர்களை (souvenir) விற்பனை செய்யும் ஒரு பெரிய அளவு கடை. மூன்று மாடிகளில் ஒலிம்பிக் உலகம், ஒலிம்பிக் விளையாட்டுகள், ஒலிம்பிக் ஸ்பிரிட் என ஒவ்வொன்றுக்கும் ஒரு தளம்.
  • படிகள் நம்மை முதலில் மூன்றாவது மாடிக்கு அழைத்துச் செல்கின்றன. நுழைந்தவுடன் நடுவே திரையில் கிரேக்கக் கடவுள் ஜீயஸின் உருவம் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுகளின் தொடக்கம், 19ஆம் நூற்றாண்டில் நவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கியது போன்ற தகவல்கள் இருக்கின்றன.
  • பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற ஒலிம்பியா நகரில் பல்வேறு விளையாட்டுக் களங்களுக்கான கட்டுமானங்கள் எங்கெங்கு காணப்பட்டன என்பதைச் சித்தரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு தலைப்பையும் தொட்டால் அது குறித்த விவரங்கள் அழகாகத் திரையில் விரிகின்றன. தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜீயஸ் ஆலயம், கேராவின் ஆலயம் போன்ற பல தலைப்புகளில் இவை காணப்படுகின்றன. தொன்மையான ஒலிம்பியா நகரில் தடகள மைதானத்துக்கு முன்பாகப் பல ஜீயஸ் தெய்வத்தின் சிலைகள் காணப்பட்டன.
  • போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். விதிகளை ஒழுங்காகப் பின்பற்றுவோம் என்பதுதான் அது. ஒலிம்பியாவின் நுழைவாயிலில் காணப்பட்ட 12 ஜீயஸ் கடவுளின் சிலைகளையும் உருவாக்கும் செலவை ஏற்றது விளையாட்டு வீரர்கள்தான்.
  • போட்டியின் விதிகளை மீறியதற்காக இதைச் செய்திருக்கிறார்கள். இந்தச் சிலைகள் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பாடம். இது போதாதென்று விதிகளை மீறித் தவறிழைத்த வீரர்களின் பெயர்களை ஒரு கல்வெட்டில் பதித்திருந்தார்கள்.
  • இரண்டாம் தளத்தில் பலவித ஒலிம்பிக் ஜோதிகள் அணிவகுத்தன. பலவிதச் சின்னங்களாக அந்தந்த நாட்டுக்கே உரிய விலங்கினங்களின் உருவங்களும் இடம்பெற்றிருந்தன. பிரம்மாண்ட திரையில் கடந்த கால ஒலிம்பிக் போட்டிகளின் சுவையான துணுக்குகள் அணிவகுத்தன.
  • முதல் தளத்தில் சுவாரசியமான ஒலிம்பிக் நிகழ்வுகள், சாதனையாளர்களின் குறிப்புகள், ஒளிப்படங்களும் காணப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன. தியான் சந்த் பயன்படுத்திய ஹாக்கி மட்டை, அபினவ் பிந்த்ராவின் ரைஃபிள், நீரவ் சோப்ராவின் ஈட்டி ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது சிலிர்த்தது.
  • அரங்கின் வாசலில் பாரிஸ் 2024 என்கிற வார்த்தைகள் மின்னுகின்றன. ஒலிம்பிக் போட்டியின் இலக்கு என்பது ‘வேகமாக, நீளமாக, வலிமையாக’. (இதை உணர்த்தும் Citius, Altius, Fortius என்கிற வார்த்தைகளுக்கு நடுவே அருங்காட்சியகத்துக்குச் சற்று வெளியே ஒரு ஜோதி தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது.) ஒலிம்பிக் அருங்காட்சியகத்தை ‘அழகாக, பொருத்தமாக, பார்வைக்கு விருந்தாக’ என்றும் விவரிக்கலாம்!

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories