TNPSC Thervupettagam

ஒலிம்பிக்கை அச்சுறுத்தும் காலநிலை ஆபத்து

July 22 , 2024 175 days 200 0
  • 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்த வாரம் தொடங்குகிறது. இது தொடர்பான விவாதங்களில் காலநிலை சார்ந்த கலந்துரையாடல்கள் முக்கியமானவை.
  • ஆனால், அவை போதிய கவனம் பெறுகின்றனவா? காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது போட்டியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், இதுபோன்ற பிரம்மாண்டமான நிகழ்வுகளின்போது வெளியிடப்படக்கூடிய கரிம உமிழ்வுகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இனிவரும் காலத்தில் சரியாக நடத்துவதற்கு உள்ள சாத்தியங்கள் எனப் பல்வேறு தளங்களில் விவாதங்கள் நீள்கின்றன.

இருத்தலியல் அச்சுறுத்தல்:

  • சமீபத்தில் ‘நெருப்பு வளையங்கள்’ என்கிற தலைப்பில் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின்போது வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றிய ஒரு விரிவான அறிக்கை வெளியாகியுள்ளது. வெப்பம் சார்ந்த உடல் இயங்கியல் மருத்துவரான ஜோ கார்பெட், காலநிலைப் பேராசிரியர் மைக் டிப்டன், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
  • “உலகத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்தபடி இருக்கிறது. இந்நிலையில், காலநிலை மாற்றம் என்பது விளையாட்டுத் துறைக்கே ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலாக மாறிவிட்டது” என உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ தெரிவித்திருக்கிறார். 2003இல் ஃபிரான்ஸில் தீவிரமான ஒரு வெப்ப அலை ஏற்பட்டது.
  • 14,800க்கும் அதிகமானோர் பலியாகினர். காலநிலை மாற்றத்தால் இந்த நிகழ்வின் சாத்தியக்கூறு 70% அதிகரித்ததாக வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இப்போதைய ஒலிம்பிக் போட்டிகளும் கோடைக்காலத்தில் நடக்க இருப்பதைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, 1924 தொடங்கி இப்போது வரையிலான காலகட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வெப்பநிலை 3.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்டதையும் தெரிவிக்கிறது. ஒலிம்பிக் போட்டி நடக்கப்போகும் காலகட்டமானது பாரிஸ் நகரத்தைப் பொறுத்தவரை கோடைக்காலத்தின் உச்சம் எனவும் எச்சரிக்கிறது.
  • 2021இல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் காலநிலை சார்ந்த பல பாதிப்புகள் ஏற்பட்டன. சில வீரர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர். சிலரைச் சக்கர நாற்காலியில் வைத்து மைதானத்திலிருந்து அழைத்துச்செல்ல வேண்டியிருந்தது.
  • தடகள வீரர்கள் இறுதிக்கோட்டை எட்டியதும் மயங்கி விழுந்தனர். 2022 கோடைக்காலத்தில் கத்தாரில் நடக்க இருந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி அதீத வெப்பநிலை காரணமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உயிருக்கே ஆபத்து:

  • டோக்கியோ ஒலிம்பிக்கின்போது நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வெப்பம் அதிகமாக இருந்ததால் ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வடேவ் பலமுறை ‘டைம் அவுட்’ இடைவெளி கேட்டுள்ளார். இதை ஆட்சேபித்த நடுவரிடம், “நான் தொடர்ந்து விளையாடி ஆட்டத்தை முடிக்க முடியும், ஆனால் நான் இறந்துவிடுவேன். அதற்கு நீங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்வீர்களா?” என்று கேட்டுள்ளார்.
  • அதிக வெப்பத்தினால் வெப்ப மயக்கம் (Heat stroke) ஏற்பட்டதில் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் பௌலா படோஸா ஆட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச், “இருபது ஆண்டுகளாக விளையாடிவருகிறேன். இந்த அளவுக்கு மோசமான காலநிலைச் சூழலை இதற்கு முன் சந்தித்ததில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
  • அவரும் வேறு பல முதன்மை வீரர்களும் கோரிக்கை வைத்ததால், வெப்பம் குறைவாக இருக்கும் காலை வேளைகளில் நடக்குமாறு போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டன. டோக்கியோ ஒலிம்பிக்கின்போது ‘டைம்’ இதழுக்குப் பேட்டியளித்த மருத்துவர் பிடா மலோனி, “வெப்பநிலையும் காற்றின் ஈரப்பதமும் ஒருவரின் விளையாட்டுத் திறனை 10% வரை குறைக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது ஒரு ஹாக்கி வீரருக்கு வெப்ப மயக்கம் ஏற்பட்டதாகவும் வெப்பத்தால் மேலும் மூன்று பேர் பாதிக்கப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒலிம்பிக் காலகட்டத்தில் டோக்கியோவில் கடுமையான வெப்பம் இருக்கலாம் என்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைவர் மன்ப்ரீத் முன்பே கணித்திருந்தார்.
  • அதற்குப் பழகும் வகையில், வெயில் கொளுத்தும் நண்பகல் வேளைகளிலேயே பயிற்சி செய்யலாம் என்று பயிற்சியாளரிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி ஒலிம்பிக் போட்டிகளுக்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே வெயிலில் விளையாடும்படி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சி எடுத்துக்கொண்டது. இந்தச் செய்தி இந்தியாவின் பல செய்தி ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
  • வெப்பநிலை அதிகமாக இருப்பதால் வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். விளையாட்டு என்பதே ஒருவருடைய உடல் பலத்தின் எல்லையை மேலும் மேலும் அழுத்தத்துக்கு உட்படுத்தி, வெற்றி பெறுவதுதான் என்னும்போது, சுற்றியுள்ள சூழல் இதமாக இல்லாவிட்டால் உடல் என்னவாகும் என்பது மிக முக்கியமான கேள்வி. வெப்பமண்டல நாடுகள் அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்தவர்களால் அதீத வெப்பத்தைத் தாங்க முடியாது, சரிவர விளையாடவும் முடியாது.
  • போட்டிகளின்போது வீரர்கள் மயங்கி விழுவது, வெப்பத்தால் பாதிக்கப்படுவது எனப் பல பிரச்சினைகள் எழலாம். அளவுக்கு அதிகமான ‘டைம் அவுட்’ இடைவெளிகள் கேட்கப்படுவதற்கு இணங்க ஆட்ட விதிகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும். அதையும் மீறி விளையாட முடியாத வீரர்கள், உடல்நலனா - பதக்கமா என்கிற கடினமான கேள்வியை எதிர்கொள்வார்கள்.

கண்துடைப்பு நடவடிக்கைகள்:

  • 2023இல் 350 தடகள வீரர்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 75%க்கும் மேற்பட்டவர்கள் காலநிலை மாற்றத்தால், குறிப்பாக அதீத வெப்பநிலையால் தங்களின் உடல்நலமும் விளையாட்டுத் திறனும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
  • “அதீத வெப்பத்தில் விளையாட எங்களைத் தகவமைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டோம். ஆனால், ஏன் அதீத வெப்பத்தை உணர்கிறோம் என்கிற கேள்வி மட்டும் கேட்கப்படுவதேயில்லை. வெப்பத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமே செய்யப்படுகின்றன” என்று சுட்டிக்காட்டுகிறார், ஈட்டி எறியும் வீரர் கெல்சி லீ பார்பர். இங்குதான் ஒலிம்பிக் நிர்வாகக் குழுவினரின் நுண் அரசியல் வெளிப்படுகிறது.
  • “இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே பசுமை நிறைந்ததாகவும் உமிழ்வு குறைவானதாகவும் பாரிஸ் போட்டி இருக்கப்போகிறது” என்று நிர்வாகக் குழுவினர் தொடர்ந்து சொல்லிவருகின்றனர். வளங்குன்றா ஆற்றல் வளங்களிலிருந்து மின்சாரம் பெறுவது, ஏற்கெனவே இருக்கும் கட்டுமான வசதிகளில் போட்டிகளை நடத்துவது, போட்டி முடிந்தபின் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்கான திட்டங்கள், இயற்கையான முறையில் குளிரூட்டப்பட்ட வசிப்பிடங்கள் எனப் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் உண்மையிலேயே நடக்குமா அல்லது வெறும் கண்துடைப்பா எனத் தெரியவில்லை.
  • ஒருவேளை இவை அனைத்தும் நடந்தாலுமே பாரிஸ் ஒலிம்பிக் நிகழ்வு பசுமையானதாக இருக்காது என்பதே நிதர்சனம். பல தேசிய அணிகளுக்குப் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள்தாம் ஸ்பான்சர் செய்கின்றன. பாரிஸ் ஒலிம்பிக் நிர்வாகத்துக்கு வாகன நிறுவனங்கள், உருக்காலைகள், விமான நிறுவனங்கள் போன்ற மாசுபடுத்தும் நிறுவனங்கள் விளம்பரதாரர்களாக இருக்கின்றன.
  • இவற்றில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே வருடத்துக்கு 3.6 கோடி டன் கரிம உமிழ்வுகளை வெளியிடுகின்றன என்றும், இது எட்டு அனல்மின் நிலையங்களின் வருடாந்திர உமிழ்வுக்குச் சமம் என்றும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த காலத்தில் நேரடியாகக் காலநிலைத் தீர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, பசுமையான நிகழ்வு என்கிற திரையின் பின்னால், உமிழ்வுகளை வெளியிடும் நிறுவனங்களின் நிதி உதவியோடுதான் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

மரபுசார் இழப்புகள்:

  • குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் எதிர்காலமும் கவலையளிப்பதாக இருக்கிறது. ‘நேச்சர்’ சஞ்சிகையில் 2023இல் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரையில் அறிவியலாளர் பாஸ்கல் யூ இதைப் பற்றி விரிவாக அலசியுள்ளார். உலக வரலாற்றில் இதுவரை 19 நகரங்களில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
  • காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது, இந்த நகரங்களில் இருக்கும் பனியின் அளவு குறையும் என்று அவர் தெரிவிக்கிறார். உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், 2080இல் பத்தொன்பதில் பத்து நகரங்கள் மட்டுமே குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடத்தத் தகுதியானவையாக இருக்கும் என்கிறார்.
  • மனித எத்தனத்தின் உற்சாகத்தைக் கொண்டாடும் உலகளாவிய ஒலிம்பிக் நிகழ்வானது காலநிலை மாற்றத்தால் நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கிவிட்டது. காலநிலை மாற்றத்தால் ஏற்படவிருக்கும் மரபுசார் இழப்புகளுக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
  • ஒருபுறம் இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசிப்பதோடு, இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கக் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும். அதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருப்பதையும் மறந்துவிடக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories