TNPSC Thervupettagam

ஒளி மாசை உருவாக்கும் செயற்கை வெளிச்சம்

August 17 , 2023 509 days 347 0
  • காற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு போன்றவையுடன் ஒளி மாசும் தற்போது பரவலாக அறியப் படுகிறது. ஒளி இல்லையேல் உயிரினங்கள் வாழ்வது கடினம். பகலில் கதிரவனும் இரவில் நிலவும் உலகிற்கு ஒளி அளித்து வருகின்றன. ஒளியால் கூட மாசு ஏற்படுமா? அது மனிதனின் உடலையும் மனதையும் பாதிக்குமா? அப்படியானால் விலங்குகளுக்கும் பாதிப்பு தானே! மொத்த சுற்றுச்சூழலும் தாக்கப்படும் அல்லவா?
  • மனித குலத்தின் பேராசை சுற்றுச்சூழலில் மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தி வருகிறது. நமது தொழில்கள், பொருளாதாரம், வாழ்வு முறை வசதிகள் ஆகியவை பெருகுவதற்காக இரவையும் பகலாக்கும் வகையில் பலவித விளக்குகள் போடப்படுகின்றன. பல பெரிய ஊர்கள் தூங்கா நகரங்கள்தானே! இரவில் உருவாக்கப்படும் செயற்கை வெளிச்சம் இப்போது பெரும் பிரச்னை.
  • இந்த செயற்கை ஒளியால் ஏற்படும் நோய்கள் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. செயற்கை ஒளியைக் குறைப்பது ஒன்றே இந்த நோய்களுக்கான தீர்வு. இப்போதைய வாழ்க்கை முறையில் இது சாத்தியமா? ஒளி மாசு உலக அளவில் உள்ள பிரச்னையாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இதனால் பாதிப்பு அதிகம்.
  • 2016-இல் கணினி மூலம் வரையறுக்கப்பட்ட இரவு நேர ஒளி பற்றிய உலக வரைபடத்தில் இது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இது வலைதளங்களில் கிடைக்கிறது. இரவில் சைபீரியா, சஹாரா, அமேசான் போன்ற இடங்கள் மட்டும் இருட்டாக இருப்பதும் வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா ஆகியவை ஒளியில் மிதப்பதையும் காண முடிகிறது. இவற்றில் கத்தார், குவைத், சிங்கப்பூர் போன்றவை மிகுந்த ஒளி மாசுக்கு உள்ளாகியுள்ளன.
  • வீடுகளில் விளக்குகளின் வெளிச்சம் தவிர, தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி போன்றவை மூலமாகவும் இரவில் அதிக வெளிச்சம் ஏற்படுகிறது. சாலை விளக்குகள், வாகனங்களின் விளக்குகள், வணிக நிறுவனங்களின் விளம்பர விளக்குகள் என்று ஒளி மாசுப் பட்டியல் நீள்கிறது.
  • இரவில் ஏற்படும் அதிக வெளிச்சம், இரவு தூக்கம், பகல் விழிப்பு என்ற இயற்கைத்தன்மையை பாதிக்கிறது. இரவின் அதிக வெளிச்சம், "மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரப்பைக் குறைத்து விடுகிறது. அதனால் தூக்கமின்மை, தலைவலி, உடல் களைப்பு, மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்படுகின்றன.
  • நீல ஒளியைத் தரும் கைப்பேசி, கணினி, எல்.ஈ.டி. பல்புகளாலும் மெலடோனின் மிகவும் குறைகிறது. எல்.ஈ.டி. விளக்குகளின் விலையும் மின்சாரச் செலவும் குறைவு. எனவே அவற்றின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இது ஒளி மாசுக்குக் காரணமாக அமைகிறது.
  • தெருக்களில் உள்ள அதிக வெளிச்சம், திருமணம், பொது நிகழ்ச்சி போன்றவற்றிற்காக போடப்படும் விளக்குகள் வெளிச்சம், நமது வீட்டு அறைக்குள் வரும் தெருவிளக்கின் வெளிச்சம் ஆகிய மூன்று வழிகளில் ஒளி மாசு ஏற்படுகிறது.
  • ஒளி மாசு ஏற்படுவதால் மனிதர்களுக்கு முக்கியமாக ஏற்படும் பாதிப்பு தூக்கமின்மை.
  • இது ஒரு நோயா என்று நினைக்க வேண்டாம். தினமும் இரவில் ஒரு மனிதன் குறைந்தபட்சம் 5 அல்லது 6 மணி நேரம் தூங்க வேண்டும். இல்லையெனில் செரிமான பாதை பாதிக்கப்பட்டு பசியின்மை, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும். பார்வை திறன் குறைவு, தலைவலி, கண்கள் உலர்ந்து போதல், கண்களில் அரிப்பு ஆகியவை ஏற்படலாம்.
  • வாழ்வியல் திறன்களான சரியான முடிவு எடுத்தல், விரைவில் பிரச்னைகளைத் தீர்த்தல், பேச்சுத் திறன், எண்ணங்களை சரியாக வெளிப்படுத்துதல், சக மனிதர்களுடன் நட்புறவு போன்றவை பாதிக்கப்பட்டு அதனால் மனித உறவுகள் சிதையக்கூடும்.
  • விலங்குகளும் ஒளி மாசினால் பாதிப்பு அடைகின்றன. விலங்குகளின் தினசரி விழிப்பு, தூக்கம் சுழற்சி பாதிக்கப்படுகிறது. அவை வாழ்விடங்களை மாற்றிக் கொள்கின்றன. பறவைகளும்கூட இந்த அதிக ஒளியால் பாதிக்கப்படுகின்றன. வாழ்விட மாற்றத்திற்காகப் பறக்கும் போது வானில் வெளிச்சத்தால் குழப்பம் அடைந்து வழி தவறி பல நேரங்களில் இறந்தும் விடுகின்றன.
  • பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக இருக்கும் பல பூச்சிகள் விளக்கு ஒளிக்கு அருகில் வரும்போது இறந்து விடுகின்றன. துறைமுகங்களின் அதீத ஒளியால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. ஒளி மாசு குறைவாக இருக்கும் கிராமங்களில் வாழும் பறவைகளைவிட நகர்ப்புறங்களில் வசிக்கும் பறவைகள் அதிகாலையில் சீக்கிரமே விழித்து பறந்து குரல் கொடுக்கின்றனவாம். தூக்கமின்மையால் அவையும் பாதிக்கப்படுகின்றன.
  • ஒளி மாசு வானவியல் ஆராய்ச்சியை பாதிக்கிறது. தொடர்வண்டி, பேருந்து, மகிழுந்து, விமானம் போன்றவற்றின் இயக்குமுறைகளும் பாதிக்கப்படுகின்றன. ஒரு சோதனையில், இரவு வெளிச்சத்தில் புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் கேன்சரும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  • இது போன்ற புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் விவரங்கள் சேகரித்தபோது அவர்கள் அதிகமாக இரவு வெளிச்சத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. புற்றுநோய்களுக்கு பல காரணிகள் இருந்தாலும் அதிக இரவு வெளிச்சம் முக்கியக் காரணமாகலாம்.
  • மனிதர்களின் வளர்சிதை மாற்றம், செரிமானம், இதய செயல்பாடு, நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு இரவு நேர உறக்கம் கட்டாயம் தேவை. இரவில் அதிக வெளிச்சத்தால் கண்ணில் உள்ள ஒளிவாங்கி நரம்பு அணுக்கள் தூண்டப்படுவதால் ஹார்மோன்கள் சுரப்பது பாதிக்கப்படுகிறது.
  • நம் தோலில் அதிக ஒளி படும்போது நாம் சூடாக உணர்கிறோம். இது எதிர்மறை உணர்வுகளை அதிகப்படுத்துகிறது. வறட்சி, அரிப்பு , ஒவ்வாமை ஆகியவை ஏற்படுகின்றன.
  • இன்று ஒளி மாசு ஒரு சர்வதேச பிரச்னையாக மாறி வருகிறது. இதனை குறைக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைத் தரலாம். வீட்டில் எல்.ஈ.டி. விளக்குகளைத் தவிர்க்கலாம். தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி போன்றவற்றை இரவு பத்து மணிக்குமேல் பயன்படுத்துவதையும் தவிர்க்க முயலலாம்.
  • நம்மால் உருவாகிவிட்ட ஒளி மாசு பிரச்னைக்கு நாம்தானே தீர்வு காண வேண்டும்?

நன்றி: தினமணி (17  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories