TNPSC Thervupettagam

ஒளிர் திரை பயன்பாடு குறைப்போம்

September 22 , 2023 477 days 403 0
  • சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நம் கண்களை பாதிக்கும் என்பதை அறிந்திருக்கும் பலா் ஒளிர் திரையில் இருந்து வரும் நீல ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருப்பதில்லை. சூரியன், ஒளிர் திரை மின்சாதனம், தொலைக் காட்சி, கணினி, மடிக்கணினி, அறிதிறன்பேசி, கைக்கணினி, உறிஞ்சியொளிவீசு (ஃப்ளோரசன்ட்) விளக்குகள், ஒளிமுனை (எல்.இ.டி) விளக்குகள் போன்றவை அதிக ஆற்றல் புலப்படு (ஹை எனா்ஜி விசிபிள்) அலைநீளம் கொண்ட நீல ஒளியை உருவாக்குகின்றன.
  • கண்களின் முன் பகுதியை பாதிக்கும் புற ஊதாக் கதிர்கள் கண்புரையை உருவாக்குகிறது. கண்களின் பின் பகுதியை பாதிக்கும் நீல ஒளி, விழிப்புள்ளிச் சிதைவை (மாகுலா் டீஜெனெரேஷன்) ஏற்படுத்தும். தெளிவான, கூா்மையான பார்வையை பாதிக்கும் நீல ஒளி கண்களின் காட்சி மாறுபாட்டைக் குறைப்பதாகவும் கண் சோர்வு, தலைவலி, உடல் சோர்வு, மனச் சோர்வை ஏற்படுத்துவதாகவும் அறிஞா்கள் கூறுகின்றனா்.
  • இன்று பெரும்பாலோர் ஒளிமுனை விளக்கினை ஒளி மூலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் இரவு நேர நீல ஒளி உமிழ்வு சாதனங்களின் உபயோகம் முழு அளவிலான கண் சேதத்தை ஏற்படுத்தும் என்று அறிவியல் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
  • ஒளிர் திரை வெளியிடும் நீல ஒளி காரணமாக தொடக்கத்தில் ஏற்படும் கண் எரிச்சல் பின்னாளில் கண்ணயற்சியாக மாறும். ஒளிர் திரைகளில் அதிக நேரம் செலவிடுவதால் கணினி பார்வை நோய்க்குறி (கம்ப்யூட்டா் விஷன் சிண்ட்ரோம்) என்ற பார்வை தொடா்பான பிரச்னை உருவாகும்.
  • தலைவலி, கண் எரிச்சல், பார்வை மங்குதல், ஒளிப்புலத்தம் (லைட் சென்சிட்டிவிட்டி), கூா்ந்து நோக்குதலில் சிரமம் போன்றவை இப்பிரச்னைக்கான அறிகுறிகளாகும். கணினி பார்வை நோய்க்குறி பரவல், தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள பொறியியல் மாணவா்களிடையே 81.9%-ஆகவும் மருத்துவ மாணவா்களிடையே 78.6% -ஆகவும் இருந்ததாக 2014-ஆம் வெளியான புள்ளிவிவரம் கூறுகிறது.
  • நாள்பட்ட நீல ஒளி பாதிப்பு, விழிகளை போதுமான கண்ணீரை உருவாக்க இயலாத நிலைக்கு கொண்டு செல்லும். இந்த மோசமான கண் பாதிப்பிற்கு உலா் விழி (ட்ரை ஐ) என்று பெயா். கண் எரிச்சல், கண்கள் வீங்குதல், கண்ணில் ஏற்படும் அரிப்பு, பார்வை மங்குதல் ஆகியவை இப்பிரச்னைக்கான அறிகுறிகள் என்கின்றனா் கண் மருத்துவா்கள்.
  • 2030-இல் இந்தியாவின் நகா்ப்புற மக்கள்தொகையில் 45 சதவீதம் போ் உலா் விழியால் பாதிக்கப் படுவார்கள் என்று எல்.வி. பிரசாத் கண் மருத்துவ நிறுவனத்தின் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இம்மதிப்பீட்டின்படி 27.5 கோடி நகா்ப்புற, 1.7 கோடி கிராமப்புற மக்கள் உலா் விழி நோயால் பாதிக்கப்படுவா்.
  • நீண்ட நேர ஒளிர் திரை சாதனப் பயன்பாடு விழித்திரை பாதிப்புயும் பார்வை இழப்பையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனா் வல்லுநா்கள். பார்வையில் பாதிப்பு ஏற்படுத்தும் வயது தொடா்பான விழிப்புள்ளிச் சிதைவு (ஏஜ் ரிலேடட் மாகுலா் டீஜெனரேஷன்) வாகனம் ஓட்டுதல், படித்தல், நபா்களை அடையாளம் காண்பது போன்ற தினசரி பணிகளை செய்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
  • உலகம் முழுவதும் 40 வயதுக்கு மேற்பட்டவா்களின் பார்வை இழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான வயது தொடா்பான விழிப்புள்ளிச் சிதைவு நோய் உள்ளது. இது 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களையே அதிகம் பாதிக்கிறது.
  • பொதுப் புலன் ஊடகத்தின் (காமன் சென்ஸ் மீடியா) சமீபத்திய ஆய்வின்படி பதின் வயதினா் ஒவ்வொரு நாளும் பள்ளிப் பணிகளுக்காக கணினியில் செலவிடும் நேரம் தவிர்த்து சராசரியாக 7 மணி 22 நிமிடம் ஒளிரும் திரை கொண்ட பொருட்களில் செலவிடுகின்றனா். ஒளிர் திரைகளில் செலவிடப்படும் அதிக நேரம் மனித உடல் பாதிப்புகளை அதிகரிக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
  • நாம் உறங்குவதற்கு உதவும் மெலடோனின் என்ற வேதிப்பொருளை மனித உடல் இரவின் இருளில் வெளியிடுகிறது. ஒளிரும் திரையில் இருந்து வரும் ஒளி நம் உடலில் மெலடோனின் உற்பத்தியைக் குறைத்து நம்மை விழித்திருக்கச் செய்கிறது. பதின்ம வயதினரின் குறைந்த நேரத் தூக்கம் அவா்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி அவா்கள் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். தூக்கமின்மை பதின்ம வயதினரின் கற்கும் திறனை பாதிக்கும்; கவனச்சிதறலை ஏற்படுத்தும்; நினைவாற்றலையும் பாதிக்கும்.
  • அதிகப்படியான திரை உருளலும் (ஸ்க்ரோலிங்), குறுஞ்செய்தி அனுப்புதலும் மனிதா்களின் உணா்வுபூா்வமான மன ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், அவா்களின்
  • மனச்சோர்வையும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  • குழந்தைகளின் மனநிலையிலும் நடத்தையிலும் மாற்றங்களை உருவாக்கும் ஒளிா் திரை சாதனப் பயன்பாடு தடுக்கப்படும்போது அக்குழந்தைகள் கவலையான மனநிலைக்குச் செல்லும் என வல்லுநா்கள் கூறுகின்றனா். அக்குழந்தைகள் தங்கள் பொறுப்புகளைப் புறக்கணிப்பதுடன் மன அழுத்தத்தை சமாளிக்க மீண்டும் ஒளிர் திரைகளுக்கே திரும்புகின்றனா்.
  • இளமைப் பருவத்தில் கைப்பேசியில் அதிக நேரம் செலவிடுவதால் நினைவு, சிந்தனை, கற்றல், பகுத்தறிவு, சிக்கலைத் தீா்ப்பது தொடா்பான செயல்பாடுகளுக்கு காரணமான மூளைப் புறணியின் (கார்டெக்ஸ்) வளா்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம் என்கின்றனா் அறிஞா்கள்.
  • இளம் பருவ மூளை அறிவாற்றல் வளா்ச்சி (அடொலசென்ட் பிரைன் காகினிடிவ் டெவெலப்மென்ட்) எனப்படும் ஆய்வில் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஒளிர் திரைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அதனைவிடக் குறைவாகப் பயன்படுத்துபவா்களை விட மெல்லிய மூளைப் புறணி உரை இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
  • பணி நிமித்தமாகவோ ஓய்வு நேரத்தைப் போக்குவதற்காகவோ ஒளிர்திரை கொண்ட கைப்பேசி, கணினி, கைக்கடிகாரம் ஆகிய சாதனங்கள் வழி தரவுகளைப் பரிமாறிக் கொள்ளுதல் இன்று வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் ஒளிர் திரையின் பயன்பாடு குறைந்த அளவில் இருந்தால் கண்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும்.

நன்றி: தினமணி (22 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories