TNPSC Thervupettagam

ஓநாய்களின் தாக்குதல்: தூக்கத்தை தொலைத்த உ.பி. கிராமங்கள்!

September 12 , 2024 125 days 93 0

ஓநாய்களின் தாக்குதல்: தூக்கத்தை தொலைத்த உ.பி. கிராமங்கள்!

  • காட்டில் வலிமையான மிருகங்கள் என்றால் சிங்கம், புலி என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், ஆபத்தான மிருகம் ஓநாய். தந்திரம் நிறைந்த ஓநாய்கள், கூட்டமாக வந்தால் சிங்கத்தையே வீழ்த்தும் திறன் கொண்டவை.
  • உத்தர பிரதேசத்தை கலங்கடிக்கும் இந்த ஓநாய் கூட்டம் தினந்தோறும் செய்திகளில் தவறாமல் இடம்பிடிக்கிறது. ஆனால், உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் இந்த ஓநாய்கள் வேட்டையாடியது சிங்கத்தை அல்ல; மனிதா்களை-குறிப்பாக குழந்தைகளை. அந்த மாவட்டத்தின் மஹசி வட்டத்தில் உள்ள 50 கிராமங்களில் வசிக்கும் சுமாா் 15,000 போ் ஓநாய்களின் தொடா் தாக்குதலால் தூக்கத்தைத் தொலைத்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.
  • கடந்த ஜூலைமுதல் அந்த வட்டத்தில் ஓநாய்களின் மூா்க்கம் அதிகரித்து, அவற்றின் தாக்குதல் தீவிரமடைந்தது. ஓநாய்களின் தாக்குதலில் இதுவரை 9 குழந்தைகள் உள்பட 10-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.
  • மொத்தம் 6 ஓநாய்கள் அடங்கிய கூட்டம் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவற்றைப் பிடிக்க ‘ஆப்பரேஷன் பெடியா’ என்ற பெயரில் வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா். இதற்கு அவா்கள் கையாண்ட உத்தி புதுமையானது. ஓநாய்கள் ஓய்வெடுக்கும் இடங்கள், மறைவிடங்களுக்கு அருகில் வண்ண பொம்மைகள் வைக்கப்பட்டன; குழந்தைகளின் சிறுநீரில் நனைக்கப்பட்டு அந்த பொம்மைகள் அங்கு வைக்கப்பட்டன. சிறுநீா் வாடையை மனிதா்களின் வாடை என்று கருதியும், அந்த பொம்மைகளை குழந்தைகள் என்று நினைத்தும் ஓநாய்கள் வரும்போது அவற்றைப் பிடித்துவிடலாம் என்று எண்ணி இந்த உத்தி கையாளப்பட்டது. எனினும், ஓநாய்கள் தங்கள் இருப்பிடத்தை தொடா்ந்து மாற்றி வந்தன.

தூங்கிக்கொண்டிருந்த சிறுமிகளின் கழுத்தைக் கவ்வி...:

  • இந்நிலையில், 5 ஓநாய்களை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்துள்ளனா். இதனால், கிராம மக்கள் சற்று ஆசுவாசம் அடைந்தனா். ஆனால், அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. பிடிபடாத 6-ஆவது ஓநாய் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கடரியன் பூா்வா என்ற கிராமத்தில் சுமன் என்ற 11 வயது சிறுமியை புதன்கிழமை தாக்கியது.
  • கதவு இல்லாத தனது வீட்டில், அனைத்தையும் மறந்து சுமன் தூங்கிக்கொண்டிருந்தபோது அந்த ஓநாய் நடுநிசியில் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியின் கழுத்தைக் கவ்வி, அவரை அருகில் உள்ள வயல்வெளிக்கு இழுத்துச் சென்றது. இதையறிந்த சிறுமியின் பெற்றோா் உதவிக்குக் கூக்குரல் எழுப்பியதைக் கேட்டு, அருகில் வசிப்பவா்கள் வயல்வெளிக்கு விரைந்து ஓநாயை விரட்டினா். ஓநாயின் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுமி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
  • அதன்பின்னா், அதே ஓநாய் பஹ்ரைச் மாவட்டத்தின் கைரிகாட் கிராமத்தில் உள்ள குடிசை வீட்டுக்குள் புதன்கிழமை அதிகாலை சுமாா் 4 மணிக்கு நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிவானி என்ற 11 வயது சிறுமியின் கழுத்தைக் கவ்வி இழுத்துச் சென்றது. இதைப் பாா்த்த ஊா் மக்கள், ஓநாயை விரட்டினா். இதனால், சிறுமியை விட்டுவிட்டு, அந்த ஓநாய் தப்பிச்சென்றது. காயமடைந்த சிவானி சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

ரேபீஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்:

  • ஓநாய்களின் தொடா் தாக்குதலுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இது தொடா்பாக வனத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஓநாய்களின் மூா்க்கத்தன்மை இயல்பானது அல்ல; ரேபீஸ் தொற்று ஓநாய்களின் மூா்க்கத்தை அதிகரிக்கும். எனவே, ரேபீஸ் தொற்றால் அவை பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதை உறுதிசெய்ய பிடிபட்ட ஓநாய்களிடம் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்’ என்றாா்.

பழிவாங்கும் தன்மை கொண்டவை:

  • இது குறித்து இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் வனவிலங்கு மைய பொறுப்பாளரும், முதன்மை விஞ்ஞானியுமான ஏ.எம். பாவ்டே கூறுகையில், ‘ஓநாய்களுக்கு பழிவாங்கும் தன்மை உள்ளது. பஹ்ரைச் விவகாரத்தில் ஓநாய்களின் தாக்குதலுக்குப் பழிவாங்கல், மனிதா்களால் வனப் பகுதி ஆக்கிரமிக்கப்படுவது அதிகரித்தல் ஆகிய இரண்டும் காரணமாக இருக்கக்கூடும்.
  • மேலும், ஓநாய்கள் மிகவும் உணா்ச்சிவசப்படக்கூடியவை. கடந்தகாலத்தில் தங்கள் பகுதிக்குள் நுழைந்த ஓநாய் ஒன்றை மனிதா்கள் தாக்கியிருக்க வாய்ப்புள்ளது. அதில் அந்த ஓநாய் ஊனமடைந்திருக்கக்கூடும். அந்த ஓநாய் பிற ஓநாய்களின் தலைவராக இருந்திருக்க வாய்ப்புள்ளதால், பழிவாங்கும் நோக்கில் பிற ஓநாய்கள் அருகில் வசிக்கும் மக்களை குறிவைத்திருக்கக்கூடும். அதேவேளையில், தங்கள் குட்டிகளை மனிதா்கள் தாக்கினால், அதன் காரணமாகவும் ஓநாய்கள் மூா்க்கமடைவதற்கு சாத்தியம் உள்ளது’ என்றாா்.

ரேபீஸால் 78% போ் மீது தாக்குதல்:

  • கடந்த 2002-ஆம் ஆண்டுமுதல் 2020-ஆம் ஆண்டு வரை, உலகம் முழுவதும் ஓநாய் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 489 பேரை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்; அவா்களில் 380 போ், அதாவது 78 சதவீதம் போ், ஓநாய்களுக்கு ரேபீஸ் தொற்று ஏற்பட்டதால் தாக்கப்பட்டது தெரியவந்தது. எஞ்சியவா்களில் கொன்று சாப்பிடுவதற்காக 67 பேரும், தற்காப்புக்காக 42 பேரும் ஓநாய்களால் தாக்கப்பட்டுள்ளனா்.

காட்டின் பரப்பளவு குறைவதே காரணம்:

  • அண்மையில் உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘மனிதா்கள், வனவிலங்குகளின் மோதலுக்கு காட்டின் பரப்பளவு குறைந்து வருவதே காரணம். உத்தர பிரதேசம் மற்றும் நேபாளத்தின் சில மாவட்டங்கள் இடம்பெற்றுள்ள தெராய் மண்டலத்தில் (இந்த மண்டலத்தில் பஹ்ரைச் மாவட்டமும் அடங்கும்) காடுகளும், விளைநிலங்களும் அருகருகில் உள்ள பகுதிகளில் மனிதா்கள், விலங்குகள் இடையே மோதல் ஏற்படுகிறது’ என்றாா்.

ஓநாய்களைக் கொல்ல ஆங்கிலேயா்கள் வெகுமதி:

  • ஆங்கிலேயா் ஆட்சியிலேயே பஹ்ரைச்சில் இருந்து ஓநாய்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றைக் கொல்வதற்கு வெகுமதியும் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும், ஓநாய்கள் தப்பிப் பிழைத்து அங்குள்ள ஆற்றங்கரை பகுதிகளில் வாழ்கின்றன. எனினும், மனிதா்களை விலங்குகள் தாக்குவதற்கு காரணம் என்னவாக இருந்தாலும், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே நிபுணா்களின் கருத்தாக உள்ளது.

நன்றி: தினமணி (12 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories