TNPSC Thervupettagam

ஓவியர் சங்கர் நூற்றாண்டு: ஒரு தலைமுறை அடையாளச் சின்னமான விக்கிரமாதித்தன் - வேதாளம்

October 6 , 2024 110 days 92 0

ஓவியர் சங்கர் நூற்றாண்டு: ஒரு தலைமுறை அடையாளச் சின்னமான விக்கிரமாதித்தன் - வேதாளம்

  • எழுபதுகளில் பிரபலமாக இருந்த சிறார் இதழ் ‘அம்புலிமாமா’. ‘அம்புலிமாமா’வைச் சிறார் மட்டுமின்றிப் பெரியவர்களும் விரும்பி வாசித்தார்கள். இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஓவியர் சங்கரின் அசாத்தியமான வண்ண ஓவியங்கள். விக்கிரமாதித்தன் வேதாளம் கதைக்கு சங்கர் வரைந்த ஓவியங்கள் பெரும் புகழ்பெற்றவை; வாசகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவை.
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரிலிருந்து ஆங்கிலம், இந்தி என்று இரண்டு மொழிகளில் வெளிவரும் ‘கார்ட்டூன் வாட்ச்’ என்ற இதழ் ஓவியர் சங்கருக்கு 2015ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. சென்னையில் வாழ்ந்து வந்த கே.சி.சிவசங்கரன் என்கிற சங்கர், வயது மூப்பின் காரணமாக 2020இல் 97ஆவது வயதில் காலமானார். ஓவியர் சங்கர் ஓவியக் கலைக்கு ஆற்றிய அரும்பணிகளைக் கௌரவிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
  • ‘அம்புலிமாமா’வில் முதன்முதலில் ஜனவரி 1953இல் ‘மனக்கணக்கு’ என்கிற கதைக்குத் தனது முதல் ஓவியத்தைத் தீட்டினார் சங்கர். இதற்குப் பின்னர் மார்ச் 1964இலிருந்து விக்கிரமாதித்தன் வேதாளம் கதைக்குத் தொடர்ந்து ஓவியங்களைத் தீட்டிவந்தார். சந்தமாமா நிறுவனத்தில் 1952இல் தொடங்கிய இவருடைய ஓவியப் பணி, 2012இல் இதழ் நிறுத்தப்படும் வரை 60 ஆண்டுகள் தொடர்ந்தது. இதுவரை எந்த ஒரு ஓவியரும் ஒரே பத்திரிகையில் தொடர்ந்து 60 ஆண்டுகள் பணியாற்றியதில்லை.

‘கலைமக’ளில் சங்கர்

  • சங்கரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள காலத்தொழுவூர் என்கிற கிராமம். 1924இல் பிறந்தார். ஆனால், சென்னையில்தான் வளர்ந்தார். பிராட்வேயில் இருந்த மாநகராட்சிப் பள்ளியிலும் முத்தியால்பேட்டை பள்ளியிலும் படித்தார். சங்கருக்கு இளம்வயதில் புத்தகங்களில் உள்ள ஓவியத்தைப் பார்த்து அதை அப்படியே வரையும் பழக்கம் இருந்திருக்கிறது. ஒரு முறை ஓவிய ஆசிரியர், “நீ பட்டப் படிப்பைப் படிக்காதே. உனக்கு இருக்கும் ஓவிய ஆற்றலுக்கு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படி. எதிர்காலத்தில் நீ பெரிய ஓவியனாக வருவாய்” என்று அறிவுறுத்தினார். தன் ஆசிரியர் சொல்லைப் பின்பற்றிய சங்கர், பள்ளிப் படிப்பை முடித்ததும் ஓவியக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்தார். அங்கு ஐந்து ஆண்டு படிப்பை, நான்கே ஆண்டில் முடித்தார்.
  • அப்போது ஓவியக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர், புகழ்பெற்ற ஓவியர் டி.பி.ராய் சௌத்ரி. ஓவியக் கல்லூரியில் படித்தபோது கிருஷ்ணர், கோபிகைகள் சூழ இருக்கும் ஓர் ஓவியத்தை சங்கர் வரைந்திருந்தார். அதை ‘கலைமகள்’ இதழுக்கு அனுப்ப, ஓவியம் பிரசுரமாகி ‘கலைமகள்’ பத்திரிகை நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. ‘கலைமகள்’ பத்திரிகையில் 85 ரூபாய் மாதச் சம்பளத்தில் ஓவியராக நியமிக்கப்பட்டார். அங்கு பணியாற்றியபோது கி.வா.ஜகந்நாதன், கு.பா.ராஜகோபாலன், அகிலன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் கதைகளுக்கு ஓவியம் வரைந்தார். அகிலன் எழுதிய ‘பெண்ணின் பெருமை’ என்கிற தொடர்கதைக்கு இவர் வண்ண ஓவியம் வரைந்தார். கலைமகள் மட்டுமின்றி, ‘மஞ்சரி டைஜஸ்ட்’, ‘கண்ணன்’ சிறார் பத்திரிகை ஆகியவற்றிலும் ஓவியம் வரையும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
  • புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களான பி.நாகி ரெட்டியும், அலூரி சக்கரபாணியும் தொடங்கியது ‘சந்தமாமா’ இதழ். இவர்களின் நிறுவனம் தமிழில் ‘அம்புலிமாமா’ எனத் தடம்பதித்தது. ‘அம்புலிமாமா’ பத்திரிகைக்கு ஓவியர் தேவை என்பதை அறிந்தார் சங்கர். அப்போது ‘கலைமக’ளில் பணியாற்றிவந்தார். சங்கரைப் பற்றி ஓவியர் கோபுலு தெரிவிக்க ‘அம்புலிமாமா’ நிறுவனம் சங்கரை அழைத்தது. கலைமகள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்லி, ‘குமுதம்’, ‘கல்கண்டு’, ‘பேசும் படம்’ முதலான பத்திரிகைகளில் ஓவியங்களைச் சுயாதீனமாக வரைந்துவருவது பற்றியும் தெரிவித்தார். அதுபோல் ‘அம்புலிமாமா’வுக்குச் சுயாதீனமாக வரைந்து தரத் தயாராக இருப்பதாகவும் ‘அம்புலிமாமா’ நிறுவனத்தாரிடம் தெரிவித்தார். ஆனால், ‘அம்புலிமாமா’ நிறுவனத்தினர் தங்களுக்கு முழுநேர ஓவியர்தான் தேவை என்று தெரிவித்தார்கள். இந்த விஷயத்தை சங்கர் ‘கலைமகள்’ பத்திரிகையின் தலைமை ஓவியரிடம் தெரிவிக்க, அவரும் ‘அம்புலிமாமா’ பெரிய நிறுவனம். அதில் பணி கிடைத்தால் ஒப்புக்கொள்” என்றார். ‘கலைமகள்’ நிறுவனத்தாரிடம் இவ்விஷயத்தைத் தெரிவிக்க, அவரும் சங்கருக்கு வாழ்த்துகளைக் கூறி ஒப்புதல் கொடுத்தனர்.
  • 1952ஆம் ஆண்டில் சந்தமாமா நிறுவனத்தில் சங்கர் பணியில் சேர்ந்தார். ‘அம்புலிமாமா’வில் விக்ரமாதித்தன்- வேதாளம் கதைக்கு சங்கர் வரைந்த ஓவியம் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இந்தத் தொடருக்கான ஓவியத்தை அம்புலிமாமாவின் ஓவியர் சித்ரா ஏற்கெனவே வரைந்துவந்தார். அம்புலிமாமாவில் இணைந்த பின்னர், இந்த வாய்ப்பு சங்கருக்குத் தரப்பட்டது. இந்த ஓவியமே அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது.

விக்கிரமாதித்தன் - வேதாளம் ஓவியம்

  • ‘வேதாளம் சொல்லும் கதை’ என்ற தலைப்பில் அம்புலிமாமாவின் ஒவ்வோர் இதழிலும் ஒரு கதை பிரசுரமாயிற்று. இத்தொடர்கதையை அக்காலச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாசித்தார்கள். மயானப் பகுதியில் இலைகள் உதிர்ந்து முறுக்கேறி நிற்கும் அந்தப் பழைமையைப் பறைசாற்றும் மரத்தைக் கடக்கும் தோரணையில் நடந்துசெல்லும் விக்கிரமாதித்த மகாராஜா பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவாறு காட்சி தருகிறார். இடது தோளில் தொங்கும் உடலோடும் வலது கையில் வளைந்து பளபளக்கும் வாள் காட்சி தருகிறது. இடது தோளில் ஒரு உடல் தொங்குகிறது. கீழே ஒரு பாம்பு வளைந்து நெளிந்து செல்கிறது. ஆங்காங்கே சில மண்டையோடுகள் வெறித்துப் பார்க்கின்றன. காய்ந்த மரக்கிளைகளில் அமர்ந்து உற்றுப்பார்க்கின்றன ஆந்தைகள். வௌவால்கள் பறந்தபடி காட்சி தருகின்றன. வாசகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இந்த ஓவியத்தை எப்போது பார்த்தாலும் நம் நினைவில் தோன்றிப் பிரமிப்பை ஏற்படுத்துபவர் ஓவியர் சங்கர்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories