TNPSC Thervupettagam

கச்சத்தீவு பிரச்சினை

July 10 , 2023 423 days 467 0
  • இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்கள் ஆழ்கடல் சென்று மீன் பிடித்து, கச்சத்தீவைச் சொந்தம் கொண்டாடிய பாரம்பரிய உரிமை தற்போது இல்லை. இந்தியா - இலங்கை இடையே 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. கச்சத்தீவு தற்போது இலங்கைக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டபோது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு, இன்றைக்கு நம் கட்டுப்பாட்டில் இல்லை. போடப்பட்ட ஒப்பந்தம் செல்லுமா என்கிற கேள்விக்கும் இன்றுவரை விடையில்லை.

சட்டம் சொல்வது என்ன?

  • இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஏற்பட்ட, குறிப்பிட்ட நிலப்பரப்புப் பரிவர்த்தனை தொடர்பான பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் 1960இல் ‘பெருபாரி’ வழக்கில் (Berubari Union case) ஒரு தீர்ப்பை அளித்தது. ‘ஒரு நாட்டின் எந்த ஒரு பகுதியையும் இன்னொரு நாட்டுக்கு விட்டுக் கொடுக்கும்போது, அற்கான உடன்பாடு, சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளின் நாடாளுமன்றங்களில் ஒப்புதல் பெறப்பட்டு, மேற்படி இரண்டு நாடுகளும் அவற்றைப் பரிமாற்றம் செய்துகொண்டால் மட்டுமே அந்த ஒப்பந்தம் செல்லும்’ என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
  • இவ்வளவு தெளிவாகத் தீர்ப்பு இருக்கும் நிலையில், இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த விவகாரத்தில், இன்று வரை நாடாளுமன்றங்களின் ஒப்புதல், சட்டப்படியான பரிவர்த்தனை இல்லாதபோது, 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் செல்லாது என்பதுதான் நமது நிலைப்பாடு.
  • 1974இல் இரண்டு நாட்டுத் தலைமை அமைச்சர்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இரண்டு நாட்டு மீனவர்களும், இரண்டு நாட்டுக் கடல்பகுதிகளிலும் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று சொல்லப்பட்டது. கச்சத்தீவு சார்ந்த கடல் பகுதியில் நம்முடைய மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும், அந்தோணியார் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்று வழிபாடு செய்யவும் உரிமைகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், 1976இல் இரண்டு நாட்டு அரசுச் செயலாளர்கள் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் அந்த உரிமைகள் நீக்கப்பட்டதன் காரணம் என்னவென்று புரியவில்லை.
  • இரண்டு நாட்டுத் தலைமை அமைச்சர்களால் போடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், அரசுச் செயலாளர்களால் மாற்றம் செய்ய முடியுமா? அதுவும் எல்லைக் கோட்டை மாற்றம் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டா?

அதிமுக அரசின் முயற்சிகள்

  • 1991இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெ.ஜெயலலிதா, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்தார். சட்டமன்றத்தில் கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் கொண்டுவந்தார். மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்காத நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, எதிர்க்கட்சியாக இருந்தபோதே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
  • பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், வருவாய்த் துறையை வழக்கில் இணைத்தும், சட்டப் போராட்டம் நடத்திவந்தார். அவரது மறைவுக்குப் பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அந்த வழக்கில் Implead Petition தாக்கல் செய்து, வழக்கைத் தொடர்ந்து நடத்த வழிவகை செய்தார். வழக்கு தற்போதும் நிலுவையில் இருக்கிறது.

வாய்ப்பு உண்டா?

  • இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது: சட்டப்படியான நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் இந்த ஒப்பந்தங்கள் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அந்தத் தீர்ப்பு இலங்கை அரசைக் கட்டுப்படுத்துமா? இரு நாடுகளுக்குமான இந்தப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றால் என்ன முடிவு ஏற்படும்? வியன்னா ஒப்பந்தம் (Vienna Convention on the Law of Treaties 1969), கத்தார்-பஹ்ரைன் (Qatar - Bahrain) கடல் எல்லை மறுவரையறை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) வழங்கிய தீர்ப்புகளின்படி நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை.
  • எனவே, இந்திய - இலங்கை ஒப்பந்தம் செல்லாது என்று சொல்வதற்கான வாய்ப்பு குறைவுதான். சர்வதேச நீதிமன்றத்தில் கச்சத்தீவின் உரிமை யாருக்கு என்று முடிவு செய்யப்பட்டாலும்கூட, நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை என்ன என்பதிலும் தெளிவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பதும், இலங்கைக்குச் சாதகமாகவே இருக்கிறது.

புதிய உடன்பாடு அவசியம் 

  • கடல் பகுதியில், நீதிமன்ற அதிகார எல்லையை வரையறுக்கிறபோது, இந்தியாவுக்கு 24 நாட்டிக்கல் மைல் (Nautical miles) தூரத்துக்குக் கடல் பகுதியில் உரிமை கொண்டாட கடல்சார் சட்டம் (Maritime Zones Act) வழிவகுக்கிறது. அப்படி இருக்கும்போது, 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவின் மீதுள்ள நமது உரிமை உறுதியாகிறது. இருந்தாலும், இரண்டு நாடுகளின் பாதுகாப்பு, இரண்டு நாட்டு மீனவர்களின் நலன் கருதியும், இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய உடன்பாடு ஏற்படுவது அவசியம்.
  • இலங்கை ஒரு நட்பு நாடு என்றே இந்தியா நினைக்கிறது. நட்பு நாட்டோடு நல்லுறவு கொள்வதற்கு இத்தகைய முயற்சி மேலும் வலுசேர்க்கும். வழக்கு நிலுவையில் இருந்தாலும், மத்திய அரசும் சாத்தியமான மாற்று வழிமுறைகளை நன்றாக ஆராய்ந்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் தொடங்கினால் நிச்சயமாகப் பலன் கிடைக்கும்.
  • சரியான தருணம்: இலங்கையில் தற்போது நிலவிவரும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா நிதியுதவி, பொருளுதவி ஆகியவற்றைக் கடனாகவும், மானியமாகவும் வழங்கிவருகிறது. ஏற்கெனவே, சீனாவின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை, அந்த நாட்டிடம் வாங்கிய கடனுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டுள்ளதை முன்னுதாரணமாகக் கொண்டு, தாரை வார்க்கப் பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடர் நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுத்தார். 9.6.2011இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தில் கண்டுள்ளபடியும், 16.9.2004இல் பிரதமரைச் சந்தித்தபோது அவரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையான நிரந்தரக் குத்தகை (Lease in Perpetuity) அடிப்படையிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைத் தொடரவும் கச்சத்தீவின் அனுபவ உரிமையை மீட்டெடுக்கும் வகையிலும், நீண்ட காலக் குத்தகை என்ற அடிப்படையில் அத்தீவை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்.

செய்ய வேண்டியவை

  • மத்திய - மாநில அரசுகளுக்கும் மிக முக்கியமான இரண்டு கடமைகள் இருக்கின்றன. முதலாவதாக, ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றதில் தாக்கல் செய்து, தற்போது நிலுவையில் இருந்துவரும் வழக்கை விரைவுபடுத்தி, நமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற சட்டரீதியான நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும். அடுத்து, அப்படியான தீர்வு கிடைக்கக் காலதாமதம் ஆகலாம் என்கிற நிலையில், இடைக்காலத் நிர்வாக ஏற்பாடாகக் கச்சத்தீவை நீண்ட காலக் குத்தகைக்கு இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தர வெளியுறவுத் துறைரீதியான முயற்சியை விரைந்து எடுக்க வேண்டும்.
  • உடனடித் தீர்வாகக் கச்சத் தீவை நிரந்தரக்குத்தகைக்கு எடுக்க வலியுறுத்தி ஜெயலலிதா தீர்க்கதரிசனமாக அன்று சொன்ன கருத்து, இன்றைக்குவிவாதப் பொருளாக மாறியிருப்பது நல்ல சமிக்ஞை.
  • திரிகோணமலையைப் போல, கச்சத்தீவும் நம் நாட்டின் பாதுகாப்புக்குக் கவசம் போன்றது. வீட்டின் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு, பின்புற புழக்கடைக் கதவு திறந்த நிலையில், வீடு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று எண்ணாமல், வெளிநாட்டு அச்சுறுத்தலையும் நாட்டின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, வடக்கு எல்லையில் மட்டுமல்லாமல் தெற்கு எல்லையிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: தி இந்து (10 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories