- மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று முழுமையான பட்ஜெட்டை சமர்ப்பிக்கப் போகிறோம் என்கிற தன்னம்பிக்கை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடல்மொழியிலும், அவர் தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டிலும் பளிச்சிடுவதைப் பார்க்க முடிகிறது. இது அவர் தாக்கல் செய்திருக்கும் ஆறாவது பட்ஜெட். அவரது பட்ஜெட் உரைகளிலேயே மிகக் குறைவான நேரமே - சரியாக 56 நிமிடம் மட்டுமே - எடுத்துக்கொண்ட உரையும்கூட.
- அதிக நேரம் எடுத்துக்கொண்ட பட்ஜெட் உரைக்கான சாதனையும் நிர்மலா சீதாராமனுடையதுதான். 2020-இன் பட்ஜெட் உரை 2.40 மணித்துளி நீண்டு நின்றது. மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஹெச்.எம். படேல் 1977-இல் தாக்கல் செய்த பட்ஜெட்டின் உரை, வெறும் 800 வார்த்தைகள் மட்டுமே கொண்ட மிகவும் சுருக்கமானது என்றால், நீளமான பட்ஜெட் உரை 18,650 வார்த்தைகள் அடங்கிய 1991 டாக்டர் மன்மோகன் சிங்கின் உரை.
- 2024 இடைக்கால பட்ஜெட்டின் கவனக்குவிதல் (ஃபோக்கஸ்) 2047 -ஐ இலக்காகக் கொண்ட வளர்ச்சியடைந்த பாரதம். வரும் ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்கிற நம்பிக்கை இருப்பதால், இடைக்கால பட்ஜெட்டை சுருக்கமாக முடித்துக் கொள்வதாகத் தெரிவித்த நிதியமைச்சர், வளர்ச்சியடைந்த பாரதம் என்பது ஜாதி, மத, பிராந்திய பேதங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்கும் என்பதை குறிப்பிடத் தவறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் நிலையற்றதாக இருந்த இந்திய பொருளாதாரத்தை, உலகின் மிக வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரமாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மாற்றியிருக்கிறது என்பதைத் தனது உரையில் தெரிவித்தார்.
- தனிநபர் வருமான வரியிலோ, கார்ப்பரேட் வரியிலோ, சுங்க வரியிலோ எந்தவித மாற்றத்தையும் அவர் அறிவிக்காமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் என்பதால், வருமான வரி செலுத்தும், மாத ஊதியம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரைக் கவர முற்படுவார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்தது.
- அதேநேரத்தில், மிகவும் சாமர்த்தியமான அறிவிப்பின் மூலம் லட்சக்கணக்கான நேரடி வரி செலுத்துவோரின் பாராட்டைப் பெற்றுவிட்டார் நிதியமைச்சர். 2010 நிதியாண்டு வரையிலான ரூ.25,000 வரம்புக்குட்பட்ட நேரடி வரிவிதிப்பு தொடர்பான நிலுவையிலுள்ள எல்லா தாவாக்களும் திரும்பப் பெறப்படுகின்றன. அதேபோல, 2011 முதல் 2015 நிதியாண்டு வரையிலான ரூ.10,000 வரையுள்ள தாவாக்களும் திரும்பப் பெறப்படுகின்றன. இதன்மூலம், ஏறத்தாழ ஒரு கோடி பேர் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். நேர்முக வரி செலுத்தும் எட்டு பேரில் ஒருவர் இதனால் பயனடைவார்.
- கடந்த நிதியாண்டில் டிசம்பர் வரை 7.15 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்தனர் என்றால், நிகழ் நிதியாண்டில் 2023 டிசம்பர் வரை 8.18 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள். இடைக்கால பட்ஜெட்படி, அரசின் வருவாயில் பெரும்பகுதி கடனாகப் பெறப்பட்டது என்பதும், அடுத்தபடியாக வருமான வரி வருவாய் என்பதும் தெரிகிறது. 2025 நிதியாண்டில் வருமான வரி வருவாய் 19%, கார்ப்பரேட் வரி வருவாய் 17%, ஜிஎஸ்டி 18% என்கிற அளவிலும், கடன்கள் மூலமான வருவாய் 28% ஆகவும் இருக்கும் என்றும் தெரிகிறது.
- ஏற்கெனவே இருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கூடுதல் கவனமும், ஒதுக்கீடும் பெற்றிருக்கின்றன. ரயில்வே துறை சிறப்பு கவனம் பெற்றிருக்கிறது. கவனம் ஈர்க்கும் அறிவிப்புகளில் ஒன்று கடல்சார் பொருளாதாரம் குறித்தது.
- அக்வா கல்ச்சர் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் சில அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக ஐந்து ஒருங்கிணைந்த அக்வா பூங்காக்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அதன்மூலம் உற்பத்தியை ஹெக்டேர் ஒன்றுக்கு 3 டன்னிலிருந்து 5 டன்னாக உயர்த்த முடியும். 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், கடல்சார் பொருள்களின் ஏற்றுமதியை ரூ. ஒரு லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
- கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டையும், இப்போது இடைக்கால பட்ஜெட்டில் தரப்பட்டிருக்கும் திருத்தப்பட்ட மதிப்பீட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில தெளிவுகள் பிறக்கின்றன. அடுத்த நிதியாண்டில் (2024-25) இந்தியாவின் ஜிடிபி 10.5% அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (ரூ.3,27,71,808 கோடி).
- சந்தையில் இருந்து அரசு வாங்கும் கடன்களின் அளவை உணர்த்துவது நிதிப்பற்றாக்குறை. வருவாய்க்கும் செலவுக்குமான இடைவெளியை நிரப்புவதற்காகத்தான் கடன் வாங்கப்படுகிறது. அதனால் பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை கூர்ந்து கவனிக்கப்படும். அரசு அதிகம் கடன் வாங்கினால், தனியார் துறை முதலீடு கிடைக்காமல் பாதிக்கப்படும். அதன் விளைவாக வட்டி விகிதம் அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகள் மந்தகதி அடையும். நிதிப் பற்றாக்குறை 5.8% என்று இடைக்கால பட்ஜெட் தெரிவிக்கிறது.
- சுகாதாரம், கல்வி இரண்டுக்குமான ஒதுக்கீடு முழுமையாக செலவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க குறைபாடு. அதேபோல, முதலீட்டுச் செலவினங்களுக்கான ரூ.10 லட்சம் கோடியில் ரூ.9.5 லட்சம் கோடிதான் செலவழிக்கப்பட்டிருப்பதாகத் திருத்திய மதிப்பீடு தெரிவிக்கிறது. 0.1% நிதிப்பற்றாக்குறை குறைந்திருப்பதற்கு இதுதான் காரணம்.
- அரசியல் கண்ணோட்ட பட்ஜெட்டாக இல்லாமல் நிதி நிர்வாகியின் பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது இந்த இடைக்கால பட்ஜெட்.
நன்றி: தினமணி (02 – 02 – 2024)