TNPSC Thervupettagam

கடனாளி அமெரிக்க அரசு: உருவாகியிருக்கிறது ஒரு நிதிசார் புயல்

May 22 , 2023 553 days 370 0
  • இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார பிரச்சினை ஏற்பட்டிருப்பது நாம் அறிந்ததே. இப்போது உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடான, அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும், ‘மேலும் கடன் வாங்கமுடியா நெருக்கடி’தான் உலகின் பேசுபொருளாக உள்ளது. மட்டுமில்லாமல், அது நிதிசார் உலகில் பெரும் கலக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது. இதை ‘அமெரிக்கன் டெட் சீலிங் கிரைசிஸ்’ என்கிறார்கள்.
  • கரோனா ஊரடங்குகளால் ஏற்பட்ட பொருளாதார சுணக்கத்தை சரி செய்ய அமெரிக்க அரசு 900 பில்லியன் டாலர் செலவு செய்தது. இதனால் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் குறுகிய காலத்தில் மிக அதிக அளவில் வட்டியை உயர்த்தியது. இதனால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றான ‘சில வங்கிகள் திவால்’ என அமெரிக்கா சந்தித்துக்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்களின் வரிசையில் அடுத்ததாக வந்திருப்பதுதான் ‘டெட் சீலிங் கிரைசிஸ்’.
  • அமெரிக்க கருவூலத்தின் செயலர், ஜேனட் எல். எல்லென். அவர்தான் அரசின் வரவு செலவுக்கான நிதியை நிர்வகிப்பவர். அவர் இந்த ‘டெட் சீலிங் கிரைசிஸ்’ சூழலை பேரழிவு என்கிறார். காரணம், இதனால் வரும் ஜூன் 1 முதல் அமெரிக்க அரசு அது செய்தாக வேண்டிய செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத நிலை உருவாகியிருக்கிறது என்கிறார்.

ஊதியம் கொடுக்க முடியாது:

  • அப்படி ஒரு நிதி இல்லா நிலை வந்தால், அரசு ஊழியர்களுக்கு, ராணுவத்தினருக்கு ஊதியம், ஓய்வூதியம், கடன்களுக்கான வட்டி, மருத்துவம், நலத்திட்டங்கள் மற்றும் அரசின் பிற திட்டங்களுக்கான நிதி, டேக்ஸ் ரீபண்ட் என பலவற்றையும் கொடுக்க முடியாமல் போகும்.
  • இது சாதாரண சிக்கல் இல்லை. மாபெரும் சிக்கல். கடன் பத்திர சந்தை, பங்குச்சந்தை, வங்கிகள் என பல்வேறு பொருளாதார சந்தைகளிலும் சூறாவளி வீசும். 2008-ம் ஆண்டு நடந்தது போல கூட ஆகலாம். அதனால்தான் அமெரிக்க கருவூலத்தின் செயலர் எல்லென் இதை நிதிசார்பேரழிவு என்று குறிப்பிட்டு அஞ்சுகிறார்.
  • அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு. அதன் ஆண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு 26.85 டிரில்லியன் டாலர். இந்தியாவின் ஜிடிபி 3.38 டிரில்லியன் டாலர். இப்படிப்பட்ட அமெரிக்காவுக்கு, அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத அளவு என்ன நிதிநெருக்கடி வரமுடியும் என்று ஆச்சரியப்படலாம்.

31.5 டிரில்லியன் டாலர் கடன்:

  • எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அவருக்கு என்ன கடன் இருக்கிறது என்று பார்க்க வேண்டுமல்லவா? அமெரிக்க அரசுக்கு இருக்கும் மொத்தக் கடன் பிப்ரவரி 2023 நிலவரப்படி, 31.5 டிரில்லியன் டாலர். நாட்டின் ஓராண்டு ஜிடிபியைக் காட்டிலும் 20 சதவீதத்துக்கும் அதிகம். அமெரிக்க அரசுக்கும் வருமானம் போதவில்லை.
  • செலவுக்கு பணம் வேண்டும். கடன் வாங்குவதுதான் வழி. அதை ஒவ்வொரு வருடமும் செய்துதான் மொத்தக் கடனளவு இவ்வளவு பெருகிவிட்டது. அதனால் என்ன! வழக்கம் போல் புதிய கடன்கள் வாங்கி விட்டுப் போகவேண்டியதுதானே என்று கேட்கலாம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், டிரஷரி செயலர் எலெனும் அதைத்தான் செய்ய நினைக்கிறார்கள். ஆனால், அது முடியாத நிலை உருவாகிவிட்டது.
  • அந்த நிலை உருவாக காரணம், அரசு எவ்வளவு கடன் வாங்கலாம் என்று ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்த அளவான 31.38 டிரில்லியன் டாலர்அளவை கடந்த 2023, ஜனவரி மாதம் 19-ம் தேதியே அமெரிக்கா நெருங்கியாயிற்று. அதன்பின் அரசு செய்ய திட்டமிட்டிருந்த சில முதலீடுகளைத் தள்ளிவைத்து நிலைமையை சமாளித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சமாளிப்புகள் எல்லாம் மே மாதம் வரை சாத்தியம் என்றும் ஜூன் 1 முதல் கருவூலத்தில் சுத்தமாக பணம் இருக்காது என்றும், அதனால் கொடுக்க வேண்டிய எல்லாச் செலவுகளும் தடைப்படும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

நாடாளுமன்ற ஒப்புதல்:

  • நிலைமையை சமாளிக்க கடன்தான் வழி. அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் புதிய ஒப்புதல் வேண்டும். ஒப்புதல் பெற எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு வாக்கு வேண்டும். எதிர்க்கட்சியினர் அதிபர் ஜோ பைடனை எளிதாக இந்த சிக்கலில் இருந்து காப்பாற்றுவார்கள் என்று தோன்றவில்லை. 2024 மார்ச் மாதம் வரையிலான காலத்திற்கு மற்றுமொரு 1.5 டிரில்லியன் டாலர் கடன் வாங்க அனுமதி கேட்கிறார் பைடன்.
  • அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென்றால், அடுத்த நிதி ஆண்டில் (2023 அக்டோபர் 1 முதல் 2024 செப்டம்பர் 30 வரை) அரசு அதன் செலவுகளை 2022-ம் ஆண்டு அளவிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் 1 % மட்டுமே செலவுகளைக் கூட்டலாம். இதை குடியரசுக் கட்சியினர், ‘கடன் உச்சவரம்புச் சுருக்கம்’ என்கிறார்கள்.
  • இதற்கு பைடன் ஒப்புக்கொண்டால் அவரது அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் மின்சார வாகனங்களுக்கான சலுகைகள் போன்ற பலவற்றை செய்ய இயலாது. பைடன் இந்த நிபந்தனைகளுக்கு இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. விஷயம் இழுபறியில் இருக்கிறது. நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

முதல்முறை அல்ல

  • இதுபோன்ற ‘கடன் வாங்கமுடியா நெருக்கடி’, ‘டெட் சீலிங் கிரைசிஸ்’ நிலை அமெரிக்காவில் வருவது இதுதான் முதல் முறையா என்றால், இல்லை. 1960-க்குப் பின் அடிக்கடி அதிலும் குறிப்பாக 1995, 2011 மற்றும் 2013 ஆண்டுகளில் வந்திருக்கிறது.
  • ஒவ்வொரு முறையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய ஒப்புதல் பெற்று, வாங்கக்கூடிய கடன் அளவை உயர்த்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். பைடனுக்கு முன்பு, குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப் அதிபராக இருந்தபோதும் அப்போது இருந்த கடன் உச்சவரம்பை ஒன்றல்ல, மூன்று முறை உயர்த்தவேண்டிய நிலை வந்தது. காரணம், ட்ரம்ப் கொடுத்த வருமான வரிச் சலுகைகள்.
  • அப்போதைய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸில் அதற்கு வாக்களித்து உதவினார்கள். ஆனால், இப்போது அவர்களே எதிர்க்கட்சியினரானதும், வரம்பை உயர்த்த நிபந்தனைகளை விதிக்கிறார்கள். இழுபறி தொடர்ந்து, நிலை கைமீறிப் போவது இரண்டு கட்சிகளுக்குமே கெட்ட பெயரைத்தான் பெற்றுக்கொடுக்கும்.
  • அந்த பயம் இரண்டு கட்சியினரிடமும் இருக்கிறது. காரணம், அடுத்த ஆண்டு வரும் அதிபர் தேர்தல். ஒருவேளை, ஜூன் 1-க்குள் ‘டெட் சீலிங் கிரைசிஸ்’ சிக்கல் தீராவிட்டால் என்ன ஆகும் என்பதை பலரும் யூகிக்கிறார்கள்.

என்ன நடக்கும்..?

  • கட்டிடத்தின் முக்கிய பகுதியில் பெரும் சத்தத்துடன் விரிசல் விழுந்தால், அங்கு இருப்பவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எப்படி, எங்கே ஓடுகிறோம் என்று தெரியாமல் நாலு பக்கமும் ஓடுவார்கள். இதுபோலத்தான், அது நிகழ்ந்தால், பலவற்றிலும் முதலீடு செய்திருக்கும் பெரு முதலாளிகள் அவர்கள் செல்வத்தைப் பாதுகாத்துக்கொள்ள, உடனடியாக விற்பார்கள், வாங்குவார்கள்.
  • அதனால், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் விலை கடுமையாக சரியும், தங்கத்தின் விலை உயரலாம். வீடு, வாகன மற்றும் பிறகடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். பொருளாதாரம் பாதிக்கப்படும், லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை போகும். இன்னும் பலவும் நடக்கும்.
  • கடனுக்கான வட்டியை கொடுத்துவிட்டு ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றில் வேண்டுமானால் தாமதம் செய்ய வாய்ப்பிருக்கிறது; அரசு புதிதாக ஒரு டிரில்லியன் மதிப்பிலான நாணயத்தை அச்சடித்து நிலைமையை சமாளிக்கலாம்; ஐந்து குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மாற்றி வாக்களித்தால் போதும், ஒப்புதல் சட்டம் நிறைவேறிவிடும் என்பது போன்ற ஊகங்களும் இருக்கின்றன.
  • எல்லாம் ஜூன் 1-க்குள் தெரிந்துவிடும். எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் வரம்பை உயர்த்த, ஜப்பானில் நடைபெறும் ஜி 7 மாநாடு முடிந்தவுடன் ஜோ பைடன் ஆஸ்திரேலியா மற்றும் பிறநாட்டுகளுக்கு செல்லவிருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்க திரும்புகிறார்எப்படியோ, கடைசி நேரத்தில் கடன் வரம்பு உயர்த்தப்பட்டு, நிலைமை சமாளிக்கப்பட்டாலும், இப்படி ஒரு நிலை வந்ததால் வேறு விளைவுகள் இல்லாமல் போகாது.
  • அமெரிக்க டிரஷரி பில் என்றால், பாதுகாப்பானது என்ற பெயர் கெட்டு, அதன் ரேட்டிங் குறையும். இதனால், அவர்கள் வாங்கும் கடனுக்கு கூடுதல் வட்டி கொடுக்கவேண்டி வரும். வருமானத்தைக் காட்டிலும் மிக அதிகமாக செலவழிக்கும் அரசு, கடனுக்கு மேல் கடன் வாங்கும் அரசு, அது எவ்வளவு பெரியவலுவான நாடாக இருந்தாலும் பிரச்சினைதான். சொல்லப்போனால் அமெரிக்க அரசின் பொருளாதார சிக்கல், உலக பொருளாதாரத்துக்கே தலைவலிதான்.

நன்றி: தி இந்து (22 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories