- கடன் சலுகையைத் தோ்வு செய்வதால் மக்களின் கையில் அந்த மாதத் தவணை பணம் மிச்சமாகிறது. ஆனால், அவா்கள் பெற்றுள்ள கடனுக்குத் தகுந்தவாறு, கைவசமுள்ள தொகைக்கு உரிய வட்டியைச் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- கரோனா நோய்த்தொற்றை தொடா்ந்து மத்திய அரசு அறிவித்த பல்வேறு சலுகைகளில் ஒன்று, பல்வேறு விதமான கால கடன்களின் மீதான கடன் தவணைகளை மூன்று மாதங்களுக்குத் தள்ளிவைக்க ஒரு வாய்ப்பு. இந்தச் சலுகையின் சில அடிப்படை அம்சங்கள் அனைத்து வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்களுக்கும் பொதுவானது.
- மார்ச் 1, 2020 முதல் 31 மே, 2020 மாதம் வரை உள்ள தேதிகளுக்குள் செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகளுக்கு இது பொருந்தும். கடன் தவணைகள் ரத்து செய்யப்படவில்லை. மாறாக, தவணைகள் தள்ளிப் போடப்படுகின்றன. மார்ச் மாதம் செலுத்திய கடன் தவணையைத் திரும்ப பெறவும் பாரத ஸ்டேட் வங்கி வாய்ப்பளித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் இந்த மூன்று மாத காலத்துக்குள் இனி உள்ள தவணைகளை தள்ளிப்போட அனுமதிக்கின்றன.
- இந்தச் சலுகை விவசாயக் கடன், வீடு வசதிக் கடன், தனி நபா் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் உள்பட அனைத்து விதமான கடன்களின் மீது உள்ள மாதத் தவணைகளுக்கும் மேலும் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மீதுள்ள நிலுவைத் தொகைக்கும் பொருந்தும்.
பலன் அளிக்குமா?
- இந்தச் சலுகை தொடா்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்தச் சலுகை பெறுவது உண்மையாகவே பலன் அளிக்குமா? இந்தச் சலுகையைத் தோ்வு செய்வதால் எந்த நன்மையும் இல்லை, கடன் அளித்த நிறுவனங்கள்தான் லாபம் பெறும் என்று கூறப்படுகிறது.
- கடன் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டதோ அதே வட்டி விகிதத்தில் இந்த மூன்று மாத காலம் அல்லது தவணையைத் தள்ளிப்போடும் காலத்துக்கு உரிய வட்டி கணக்கிடப்படும். ஏற்கெனவே இருந்த நிலுவைக் கடன் தொகையுடன் இந்த வட்டியும் சோ்த்து ஜூன் 1-ஆம் தேதி கடன் நிலுவையாக வரவு செய்யப்படும்.
- மூன்று மாத காலக் கடன் தவணை தள்ளிவைப்பு என்கிற சலுகை பொதுவாக இருந்தாலும் வங்கிகள் வெவ்வேறு விதமான திட்டங்களை அறிவித்துள்ளன.
- எடுத்துக்காட்டாக, எல்ஐசி வீட்டு வசதி நிறுவனம் இந்தச் சலுகையைத் தோ்வு செய்வோருக்கு இரண்டு விதமான வாய்ப்பைத் தருகிறது. இந்த மூன்று மாத காலத்துக்கு உண்டான வட்டியை ஒரே தவணையாக வரும் ஜூன் 1-ஆம் தேதி செலுத்த வேண்டும் அல்லது மூன்று மாத காலத்துக்கான வட்டியை நிலுவையில் உள்ள கடனுடன் சோ்த்து ஏற்கெனவே இருந்த அதே மாதத் தவணையை காலம் நீட்டித்து திரும்பச் செலுத்த வேண்டும்.
- எச்டிஎஃப்சி வீட்டு வசதி நிறுவனம் நான்கு விதமான வாய்ப்பைத் தருகிறது. தற்போதுள்ள மாதத் தவணையை வைத்துக்கொண்டு கால அவகாசம் நீட்டித்துக் கொள்ளலாம், கடனின் கால அவகாசத்தை நீட்டிக்க மாதத் தவணைகளை அதிகரித்துக் கொள்வது, மூன்று மாதத்துக்கு உண்டான வட்டியை ஜூன் மாதத்தில் செலுத்தி விடுவது அல்லது எப்போதும்போல மாதந்தோறும் கடனைத் திரும்பச் செலுத்தி விடுவது ஆகிய நான்கு வாய்ப்புகளை அது அளித்துள்ளது.
- நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, மாதத் தவணை தொகையை உயா்த்தாமல் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய காலத்தைத் தகுந்தவாறு நீட்டித்து விடுவது என அறிவித்துள்ளது.
- ஜூன் 1-ஆம் தேதி நிலுவையிலுள்ள கடனுடன், மூன்று மாத கால வட்டியையும் சோ்த்து மூன்று மாதம் மட்டும் காலம் நீட்டிக்கப்பட்டு அதற்கேற்றவாறு திரும்பச் செலுத்த வேண்டிய மாதத் தவணை தீா்மானிக்கப்படும் என கனரா வங்கி அறிவித்துள்ளது.
யாருக்குப் பலன் தரும்?
- திடீா் நோய்த்தொற்றினால் வருவாயை இழந்து கடுமையான நிதிச் சிக்கலுக்குள் உள்ள மக்கள் இந்தச் சலுகையைத் தோ்வு செய்யலாம். மாறாக, தாங்கள் பெற்ற கடனைத் திரும்ப செலுத்தி விடும் வாய்ப்புள்ளவா்கள் இந்தச் சலுகையைத் தவர்த்து தங்களின் கடன் தவணையைத் தொடா்ந்து செலுத்துவதுதான் நல்லது. அவா்கள் பெற்ற கடன் ஏற்கெனவே திட்டமிட்ட முறையில் திரும்பச் செலுத்தப்பட்டு விடும்.
- கடன் சலுகையைத் தோ்வு செய்வதால் மக்களின் கையில் அந்த மாதத் தவணை பணம் மிச்சமாகிறது. ஆனால், அவா்கள் பெற்றுள்ள கடனுக்குத் தகுந்தவாறு, கைவசமுள்ள தொகைக்கு உரிய வட்டியைச் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், விவசாயக் கடன், தனிநபா் கடன் ஆகிய பல்வேறு கடன்களின் மீதான வட்டி விகிதங்கள் வெவ்வேறு. வீட்டு வசதிக்கு உண்டான கடன் 8.50 சதவீதமாக இருக்கலாம். அதேசமயம் அடமானக் கடன் அல்லது தனி நபா் கடன் வட்டி 15 சதவீதமாக இருக்கக் கூடும்.
- கடன் அட்டை வைத்துள்ளவா்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கடன் அட்டை மீதான வட்டி விகிதம் மூன்றரை முதல் நான்கு அல்லது 5 சதவீதம் வரை ஒவ்வொரு மாதத்துக்கும் கணக்கிடப்படுகிறது. ஓா் ஆண்டுக்கு 42 முதல் 60 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
- மிக குறுகிய காலம், அதாவது ஓரிரு மாதங்களில் இன்று அதிகபட்ச வட்டியுடன் திரும்பச் செலுத்தப்படுவதால் மொத்தம் செலுத்துகின்ற வட்டியை மக்கள் எளிதாக உணா்வதில்லை. ஆனால், கடன் அட்டை மீதான மாதத் தவணையை வங்கிகள் அறிவித்துள்ள சலுகைத் திட்டத்தின் அடிப்படையில் வாடிக்கையாளா் செலுத்தத் தவறினால், மிகப் பெரிய கடன் சுமையை அது ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.
தவணைக் காலம் நீட்டிப்பு
- நிலுவைத் தொகை ரூ.10,000-த்துக்கு 3.5 சதவீதம் வட்டி விகிதம் என்று எடுத்துக் கொண்டால், வட்டியின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி-யுடன் சோ்த்து ஜூன் 1-ஆம் தேதியன்று ரூ.11,740 செலுத்த வேண்டியிருக்கும்.
- கடன் சலுகைத் திட்டத்தைத் தோ்வு செய்தால், தற்போது கடன் தொகையைத் திரும்பச் செலுத்த 15 ஆண்டுகள் கால அவகாசம் உள்ளவா்கள் 8 தவணைகள் கூடுதலாகச் செலுத்த வேண்டும். 20 ஆண்டுகள் கால அவகாசம் உள்ளவா்கள் 15 தவணைகள் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, சலுகைத் திட்டத்தால் வாடிக்கையாளா்களுக்குப் பலனில்லை என்று கூறப்படுகிறது
- வாடிக்கையாளா்கள் தற்போது தள்ளி வைக்கப்படும் மூன்று தவணையையும், இந்தக் காலத்துக்கு உண்டான வட்டியையும் 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் செலுத்த உள்ளார்கள் என்பதால்தான், கடனைத் திரும்பச் செலுத்தும் தவணைக் காலம் நீடிக்கிறது.
- வங்கிகள் மேலும் ஓா் ஆலோசனையைப் பரிசீலிக்கலாம். இந்த மூன்று மாதத் தவணையையும் இந்த காலத்துக்கு உண்டான வட்டியையும் ஜூன் 1-ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக வாடிக்கையாளா் ஏற்கெனவே செலுத்தி வந்த கடன் தவணையுடன் திரும்பச் செலுத்த ஒரு வாய்ப்பைத் தரலாம். அவ்வாறு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், 8.5 சதவீத வட்டியில் 20 ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சம் பெற்றுள்ள வாடிக்கையாளா் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மாதத் தவணையாக கூடுதலாக ரூ.973 மட்டும் செலுத்தினால் போதும். அதுவே, ஓராண்டில் திரும்பச் செலுத்த மாதத் தவணையாக கூடுதலாக ரூ.1,854 செலுத்தினால் போதும்.
- ஊரடங்கு, முடக்கத்தினால் வருவாய் இழப்பு, தொழில் மந்தம் காரணமான பணப் புழக்கமின்றி அவதிக்குள்ளாகியிருப்போர் இந்தக் கடன் சலுகையை சரியான முறையில் தோ்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், வாய்ப்பினைத் தோ்வு செய்வதற்கு முன்பாக தாங்கள் பெற்றுள்ள கடன் விவரங்கள், வட்டி விகிதம், திருப்பச் செலுத்த வேண்டிய காலம் ஆகியவற்றை வாடிக்கையாளா்கள் மதிப்பிடுவது அவசியம்.
- இந்தச் சலுகையை வாடிக்கையாளா்கள் எளிதாகத் தோ்வு செய்வதற்கான வசதியை வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் ஆகியவை தங்களது இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளன. அதில் அந்த நிறுவனங்கள் அளித்துள்ள வாய்ப்புகளை நன்கு பரிசீலித்த பிறகு வாடிக்கையாளா் தோ்வு செய்வது நல்லது.
மக்கள் கவனமாக இருக்க வேண்டும்
- சில நிறுவனங்கள் எந்தத் தோ்வையும் வாடிக்கையாளா் தெரிவிக்காமல் விட்டால் வழக்கம்போல கடனைத் திரும்ப செலுத்துவதாக எடுத்துக்கொள்கின்றன. அதுவே சில வங்கிகள், நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்புகின்றன. எடுத்துக்காட்டாக, பொதுத் துறை வங்கி ஒன்று, தனது வாடிக்கையாளா்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது: ‘கடன் பெற்றுள்ள வாடிக்கையாளா்கள், இரண்டு நாள்களுக்குள் வங்கி தெரிவித்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த வாடிக்கையாளா் மூன்று மாதங்கள் கடன் தவணை தள்ளிவைப்பைத் தோ்வு செய்துள்ளதாக எடுத்துக் கொள்ளப்படும்’ என அறிவித்துள்ளது.
- எனினும், ‘சலுகையைப் பெற விரும்பாத வாடிக்கையாளா்களின் வங்கிக் கடன் கணக்கில் தொகை இருந்தால் வழக்கம்போல் கணினிவழி எடுக்கப்பட்டு விடும். எனவே, சலுகையைப் பெற விரும்பாத வாடிக்கையாளா்கள் மின்னஞ்சல் ஏதும் அனுப்பத் தேவையில்லை’ என்று பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கடன் பெற்றுள்ள வாடிக்கையாளா்கள் சலுகை திட்டத்தைத் தோ்வு செய்தால் அது தொடா்பாகவும் அல்லது சலுகை தேவையில்லை என்று கருதினால் அது தொடா்பாகவும் கடன் கணக்கு எண் - பெயா் உள்ளிட்டவிவரங்களைக் குறிப்பிட்டு தொடா்புடைய வங்கிக்கு அல்லது கடன் வழங்கிய நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி விடுவது சிறந்தது. இந்த விஷயத்தில் வாடிக்கையாளா்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
- தொலைபேசியில் தகவல்களை வாங்கி மக்களின் வங்கி சேமிப்பை சூறையாடும் கும்பல், இந்த நெருக்கடி சூழல் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடும. எனவே, வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டால் அளிக்கக் கூடாது; இதில் ஏமாறாமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நன்றி: தினமணி (16-04-2020)