TNPSC Thervupettagam

கடன் பொறியில் ஆஆக பஞ்சாப்

August 25 , 2024 144 days 166 0

கடன் பொறியில் ஆஆக பஞ்சாப்

  • பஞ்சாபின் அதிகரித்துக்கொண்டேவரும் கடன் சுமை குறித்து மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் சத்நாம் சிங் சாந்து ஒன்றிய நிதியமைச்சரிடம் தகவல் கேட்டார். 2024 பட்ஜெட் மதிப்பீட்டின்படி அது ரூ.3.51 லட்சம் கோடி என்று ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதில் அளித்தார்.
  • பஞ்சாப் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மாநில நிதியமைச்சர் ஹர்பால் சீமா, 2024 - 2025 நிதியாண்டு இறுதியில் கடன் சுமை ரூ.3.74 லட்சம் கோடியாகவிடும், இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 46% என்றார். பஞ்சாபின் ஜிடிபி ரூ.8 லட்சம் கோடிக்கும் மேல். இந்த ஆண்டு மட்டும் ரூ.41,000 கோடி கடனாக திரட்டப்படும் என்றும் கூறியிருக்கிறார். மாநில மக்கள்தொகை 3 கோடிக்கும் மேல். மொத்தக் கடன் தொகையை மக்கள்தொகையால் வகுத்தால் சராசரியாக ஒவ்வொரு பஞ்சாபியரின் மீதும் கடன் சுமை ரூ.1.24 லட்சமாகும்.
  • கடுமையான நிதிநிலைமை காரணமாக, நெருக்கடியிலிருந்து மீள தங்களுக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு 16வது நிதி ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது மாநில அரசு. மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களுக்குப் புது வேகம் அளிக்க ரூ.1.32 லட்சம் கோடி தர வேண்டும் என்று நிதி ஆணையத்தின் உறுப்பினர்களை ஜூலை 22இல் நேரில் சந்தித்த முதல்வர் பகவந்த் மான் கோரியிருக்கிறார்.
  • வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி, வேளாண்மைத் துறைக்கும் நெல் சாகுபடியிலிருந்து வேறு பயிர்ச் சாகுபடிகளுக்கு மாற ஊக்குவிப்புகள் அளிக்கவும் ரூ.17,950 கோடி, நெல் அறுவடைக்குப் பிறகு அடிக்கட்டைகளை எரிக்காமல் தடுக்க ரூ.8,846 கோடி, போதைப்பொருள் கடத்தல் - புழக்கம் ஆகியவற்றைத் தடுக்க ரூ.8,846 கோடி, தொழில் துறைக்குப் புத்துயிர் அளிக்க ரூ.6,000 கோடி, மாநில நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களின் தேவைகளுக்கு ரூ.9,426 கோடி, கிராமப்புற உள்ளாட்சி மன்றங்களின் செலவுகளுக்கு ரூ.10,000 கோடி தேவை என்று தன்னுடைய கோரிக்கைகளை ரகம் பிரித்திருக்கிறார் முதல்வர் மான்.

நிதி நிர்வாகச் சீர்திருத்தம் அவசியம்

  • பஞ்சாப் மாநில அரசு தன்னுடைய நிதி நிர்வாகத்தை முழுமையாக சீரமைக்கும் வரையில் அதன் கோரிக்கைகளை ஒன்றிய அரசோ நிதி ஆணையமோ முழுதாக ஏற்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்று பொருளாதார நிபுணர்களும் ஓய்வுபெற்ற மாநில அதிகாரிகளும் சுட்டிக்காட்டுகின்றனர். “பஞ்சாபின் மொத்தக் கடன் அதன் மொத்த உற்பத்தி மதிப்பில் 46% என்றால் அதை எப்படி மீட்பது? இந்தக் கடன் சுமை 30% முதல் 35%க்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவுறுத்துகிறது. மக்களுக்கு இலவசங்களையும் நிதி மானியங்களையும் வரம்பில்லாமல் வழங்கும் மாநிலத்துக்கு எந்த அடிப்படையில் ஒன்றிய அரசால் நிதியுதவி அளிக்க முடியும்” என்று கேட்கிறார் சண்டீகர் நகரில் உள்ள வளர்ச்சி – தகவல் தொடர்புக்கான அமைப்பின் தலைவர் டாக்டர் பிரமோத் குமார்.

பஞ்சாபின் வாதம்

  • பஞ்சாப் அரசு வருவாயைத் தொடர்ந்து சீராகப் பெருக்கிவருவதால் இந்த முறை நிதியுதவி செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார் முதல்வர் மான். கடந்த இரண்டு ஆண்டுகளில் சில துறைகளில் தேசிய சராசரியைவிட அதிக வளர்ச்சியைப் பஞ்சாபில் சாதித்திருக்கிறோம். மாநில சரக்கு-சேவை வரி வசூல் 33% அதிகரித்திருக்கிறது. உற்பத்தி வரி வசூல் மட்டுமே கடந்த ஆண்டைவிட 50% அதிகரித்திருக்கிறது.
  • துடிப்பான, நேர்மையான நிர்வாகம் காரணமாக இது சாத்தியமாயிற்று என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். முத்திரைத்தாள் கட்டணம் – பத்திரப்பதிவுத் துறையில் மட்டும் வருவாய் 71% அதிகரித்திருக்கிறது என்று பஞ்சாப் வருவாய்த் துறை அமைச்சர் பிரம்ம சங்கர் ஜிம்பா 2024 ஜூலையில் தெரிவித்தார்.
  • பஞ்சாப் மாநில பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி, உற்பத்தி வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி ஆகியவை 2023 - 2024 நிதியாண்டின் 10 மாதங்களில் ரூ.30,000 கோடியைத் தாண்டிவிட்டது, ஜிஎஸ்டி வருவாய் மட்டும் 15.67%, உற்பத்தி வரி வருவாய் 10% 2022 - 2023 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்திருக்கிறது என்கிறார் முதல்வர் மான்.
  • ஜிஎஸ்டியில் நிகர வருமான அதிகரிப்பு ரூ.2,351 கோடி, உற்பத்தி வரியில் ரூ.669 கோடி, மதிப்பு கூட்டப்பட்ட வரியில் 28.14%, ஒன்றிய விற்பனை வரி வசூல் அதிகரிப்பு 5.53% என்கிறார் நிதியமைச்சர்.

நிபுணர்கள் எச்சரிக்கை

  • வருவாய் வசூல் வகையில் இந்தச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுவருவதாகக் கூறினாலும் அரசின் செலவுகள் எல்லா இனங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருவதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றனர்.
  • மக்களைக் கவர்வதற்கான விலையில்லாத் திட்டங்கள், மானியங்கள், இலவசமாக அளிக்கப்படும் பொருள்கள் – சேவைகள், வேலையில்லா இளைஞர்கள், குடும்பத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு தரும் ரொக்க உதவி, அரசு ஊழியர்களின் ஊதியம் – படிகள் - ஓய்வூதியம் ஆகியவை அதிகரித்துக்கொண்டேவருவதால் மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு அரசின் நிதி போதவில்லை என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • மூலதனச் செலவாக கடந்த ஆண்டு ரூ.10,300 கோடி செலவிட்ட பஞ்சாப் அரசு, நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு அதை ரூ.7,400 கோடியாகக் குறைத்துவிட்டது என்று நிதியமைச்சரே பட்ஜெட்டில் தெரிவித்திருக்கிறார். அரசின் உத்தேச செலவு ரூ.1.27 லட்சம் கோடியில் இந்த ஆண்டு ரூ.35,000 கோடி அரசு ஊழியர்களின் ஊதியம் – படிகளுக்கும், ரூ.20,000 கோடி ஓய்வூதியத்துக்கும் ஒதுக்கப்பட உத்தேசித்திருக்கிறது அரசு.
  • மாநிலம் வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்டுவதற்காக மட்டும் ரூ.24,000 கோடி ஒதுக்கப்படுகிறது. விவசாயத் தேவைக்கான மின்கட்டண மானியமாக ரூ.9,330 கோடி, வீடுகளுக்கான மின்சார மானியத்துக்கு ரூ.7,780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 300 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் நுகரும் வீடுகளின் முழுக் கட்டணத்தையும் அரசே மானியமாகச் செலுத்துகிறது.

கடனில்தான் ஓடுகிறது

  • மாநில அரசாங்கம் கடனில்தான் ஓடுகிறது என்று எச்சரிக்கிறார் அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழக பேராசிரியர் ரஞ்சித் சிங் குமான். ஆண்டுக்காண்டு கடன் சுமையும் அதிகரித்துவருவதால் மாநிலத்தின் நிதிநிலைமை படுமோசமாக இருக்கிறது என்கிறார். நாட்டிலேயே அதிக கடன் சுமையுள்ள முதல் 5 மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாபும் இடம்பெற்றுள்ளது, நபர்வாரி (தனிநபர்) கடன் சுமையில் முதலிடம் வகிக்கிறது என்று வருத்தம் தெரிவிக்கிறார் குமான்.

பொறியில் சிக்கியது எப்படி?

  • பழைய கடன்களை அடைக்க புதிய கடன்களைத் தொடர்ந்து வாங்குகிறது. 1989இல் பஞ்சாபின் மொத்தக் கடனே ரூ.1,009 கோடி. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அது ரூ.7,102 கோடியாக உயர்ந்தது. 1991 முதல் 2002 வரையில் ஆண்டுதோறும் ரூ.3,000 கோடிக்கு கடன் சுமை உயர்ந்துகொண்டேவந்தது. 2007 வரையில் அடுத்த ஐந்தாண்டுகளில் சராசரியாக ஆண்டுதோறும் ரூ.3,418 கோடியாக கடன் அளவு உயர்ந்தது. 2007 முதல் 2012 வரையில் வருடாந்திர கடன் சராசரி அளவு ரூ.6,389 கோடியாகிவிட்டது.
  • 2012 முதல் 2017 வரையில் ஆண்டு சராசரி கடன் அதிகரிப்பு ரூ.19,885 கோடி. நெல் - கோதுமை கொள்முதலில் ஏற்பட்ட சமச்சீரற்ற நிலையைச் சமாளிக்க வாங்கிய ரூ.31,000 கோடியை, கடனாக மாநில அரசு மாற்ற நேரிட்டது. 2017 முதல் 2022 வரையில் ஆண்டுதோறும் சராசரி கடன்சுமை அதிகரிப்பு ரூ.20,000 கோடியானது. 2022 – 2023இல் மட்டும் ரூ.32,500 கோடி கடன் பெறப்பட்டது. 2023 – 2024இல் சராசரி வருடாந்திர கடன் அதிகரிப்பு ரூ.29,000 கோடி. இவ்வாறு மாநிலம் கடன் பொறியில் சிக்கிவிட்டது. பழைய கடனுக்கு அசலில் ஒரு பகுதியும் - வட்டியும் கட்ட, புதிதாகக் கடன் வாங்கப்படுகிறது என்று இதை விளக்குகிறார் குமான்.

ஆளுநர் கவலை

  • பஞ்சாபில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், மாநிலத்தின் அதிகரித்துவரும் கடன் சுமைக்கு விளக்கம் கேட்டு முதல்வர் மானுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். 2022 மார்ச்சில் பதவிக்கு வந்த ஆம்ஆத்மி கட்சியின் நிர்வாகத்தில் 2 ஆண்டுகளில் மட்டும் கடன் சுமை ஏன் ரூ.50,000 கோடி உயர்ந்தது என்று அக்கடிதத்தில் கேட்டிருக்கிறார்.
  • தனக்கு முந்தைய மாநில அரசுகள் வாங்கிய கடனுக்கு அசல் – வட்டி கட்டவே புதிய கடன்கள் வாங்கப்பட்டன என்று பதிலில் கூறியிருக்கிறார் முதல்வர் மான். கடன்களுக்கு வட்டியாக மட்டுமே ரூ.27,016 கோடியை புதிய கடன் மூலம் செலுத்த நேரிட்டது என்று அதில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மாநில அரசுக்கு ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய ஊரக வளர்ச்சி நிதி நிலுவை ரூ.5,500 கோடியைப் பெற்றுத் தருமாறும் அதே கடிதத்தில் ஆளுநரிடம் கோரியிருக்கிறார்.

ஒன்றிய – மாநில அரசுகள்

  • ஒன்றிய அரசை ஆளும் பாஜக அரசு மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய நிதியைத் தராமல் வைத்திருப்பதாக பஞ்சாப் முதல்வரும் ஆஆக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
  • “பஞ்சாபின் கிராமங்களில் மண்டிகளைக் கட்டுவதற்கும் சாலைகளை அமைப்பதற்கும் நிதி தேவை. ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அதன் ரகசிய செயல்திட்டம் மண்டிகளை மூடவைப்பது அத்துடன் பஞ்சாப் விவசாயிகள் ஒன்றிய அரசின் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தார்கள் என்பதற்காக அவர்களைப் பழிவாங்குவதற்காக இப்படி நிதியைத் தராமல் நிறுத்திவைக்கிறது” என்று ஆஆக சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் சட்டா நிருபர்களிடம் கடந்த மாதம் குற்றஞ்சாட்டினார். 
  • ஒன்றிய அரசை மாநில அரசு குறை கூறுவதில் தவறு இல்லை என்றும் பேராசிரியர் குமான் கூறுகிறார். “பஞ்சாபை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டது. தொழில் வளர்ச்சிக்காக எல்லைப்புற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு சில சலுகைகளை வழங்குகிறது. இதனால் இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட் மாநிலங்களில் தொழில் வளர்ச்சி பஞ்சாபைவிட அதிகமாகியிருக்கிறது. இரண்டாவதாக, பாகிஸ்தானுக்கு எதையும் விற்கக் கூடாது என்று பஞ்சாபுக்குத் தடை விதித்துவிட்டது. பஞ்சாப் எல்லைப்புற மாநிலமாக இருப்பதால் போர்ச் சூழலில் ஆபத்து நேரிடும் என்று பெரிய தொழில் நிறுவனங்களை அமைக்க யாரும் முன்வருவதில்லை, இதற்கு உரிய வகையில் ஒன்றிய அரசுதான் ஈடுசெய்ய வேண்டும்” என்கிறார் குமான்.
  • “நெல் சாகுபடியிலிருந்து மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறுங்கள் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னால் உணவு தானிய பற்றாக்குறையைப் போக்க நெல், கோதுமை சாகுபடியை மேற்கொள்ளுமாறு பஞ்சாப் விவசாயிகளை உந்தித் தள்ளியது இதே ஒன்றிய அரசுதான். இப்போது உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டுவிட்டது, களஞ்சியங்களில் உபரியாக கொட்டிக் கிடக்கிறது. பஞ்சாபில் நிலத்தடி நீரும் வற்றிவிட்டது. விவசாயத்துக்கு அதிகம் செலவாகிறது. இதற்குண்டான இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கியே தீர வேண்டும்” என்கிறார் குமான்.

பஞ்சாப் அரசும் காரணம்

  • “மாநில நிதி நெருக்கடிக்குப் பஞ்சாப் அரசும் காரணம். எல்லோருக்கும் அரசு மானியங்களை வழங்க வேண்டியதில்லை, யாருக்கு தேவையோ, யார் ஏழையோ அவர்களை மட்டும் அடையாளம் கண்டு அளிக்க வேண்டும். மாநிலத்தின் வருவாயைப் பெருக்க வழிகாண வேண்டும். அந்த வகையில் மாநில அரசிடம் திட்டமே இல்லை. மாநிலத்துக்கென்று தனி விவசாயக் கொள்கையோ தொழில் வளர்ச்சிக் கொள்கையோ இல்லை. தனக்குக் கிடைக்கும் வருவாயை சிக்கனமாகவும் தேவைப்பட்ட இனங்களில் மட்டும் அதிகம் செலவிட்டு வருவாயை மேலும் பெருக்கும் வழிகளையும் அரசு ஆராய வேண்டும். மாநிலத்தின் எல்லாத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழலைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று மாநில அரசு கூறுவதில் உண்மையில்லை” என்றும் சுட்டிக்காட்டுகிறார் குமான்.

முன்னாள் நிதித் துறை செயலர்

  • பஞ்சாபின் நிதித் துறையைப் பீடித்துள்ள நோய்க்கு மருந்து – மாத்திரைகள் போதாது, பெரிய அறுவை சிகிச்சையே நடத்தியாக வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற நிதித் துறை செயலர் கே.பி.எஸ்.சித்து: “பஞ்சாபின் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம் மின்கட்டண மானியம், அதிலும் விவசாயத்துக்கு அதிகம். 2023 – 2024இல் ரூ.8,881 கோடி இதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 1997 முதல் 2023 - 2024 வரையில் மின்சார மானியமாக மட்டும் மாநில அரசு ரூ.1,23,904.84 கோடியைச் செலவிட்டிருக்கிறது. 2024 – 2025இல் ரூ.22,000 கோடி தேவை என்று மதிப்பிட்டுள்ளனர். விவசாய பம்புசெட்டுகளுக்கு, வீடுகளுக்கு, தொழில் பிரிவுகளுக்கு மானியம் தரப்படுகிறது.

அளவுக்கு அதிகமான ஊழியர்கள்

  • “நாட்டிலேயே பஞ்சாப் மாநிலத்தில்தான் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகம், அத்துடன் ஊதிய விகிதங்களும் மிக மிக அதிகம். 2023 - 2024 நிதியாண்டில் அரசின் மொத்தச் செலவில் 75% அரசு ஊழியர்களின் ஊதியம் - படிகள், ஓய்வூதியம், வாங்கிய கடனுக்கு வட்டி ஆகியவற்றுக்கே சரியாகப் போய்விடுகிறது. அரசின் வருவாயில் 35% அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு மட்டும் செல்கிறது. ஓய்வூதியச் சுமை ஆண்டுதோறும் கூடிக்கொண்டேவருகிறது. 2023 – 2024இல் ரூ.17,200 கோடி என்று மதிப்பிடப்பட்ட ஓய்வூதியச் செலவு 2024 – 2025இல் ரூ.18,000 கோடியாக, கடந்த ஆண்டைவிட 5% அதிகமாக செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. 2011இல் மாநில அரசின் செலவில் 9.8% ஆக இருந்த ஓய்வூதியச் செலவு 2024 – 2025இல் 19% ஆக உயர்ந்திருக்கிறது. ஜிஎஸ்டி அமல்செய்வதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசு அளித்த சிறப்பு மானியம் ரூ.15,000 கோடி இனி நிறுத்தப்பட்டுவிடும். இது பஞ்சாபின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். வேலைவாய்ப்புகளையும் நிரந்தரச் சொத்துகளையும் உருவாக்கும் மூலதனச் செலவுக்கோ, புதிய முதலீடுகளுக்கோ இனி பஞ்சாபிடம் நிதி இருக்காது. அது மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கு இனி ஊதியம் தருவதே பெரிய சிக்கலாகிவிடும்” என்கிறார் சித்து.
  • மாநில அரசு புத்திசாலித்தனமாகவும் விவேகமாகவும் நிதி நிர்வாகத்தில் நடந்துகொள்ள வேண்டும். மானியங்களையும் இலவசங்களையும் மறுபரிசீலனை செய்து குறைக்கவோ கட்டுப்படுத்தவோ வேண்டும். விவசாயத்துக்கான மின்சார மானியத்தை, விளைச்சல் உற்பத்தித் திறனுடன் இணைக்க வேண்டும். விளைந்த பொருள் மண்டிக்கு வந்த பிறகுகூட ரொக்க மானியத்தை வழங்கலாம். நகர்ப்புறங்களில் வீடுகளுக்கான மின்சார கட்டண மானியத்தைத் திருத்தியாக வேண்டும். ஒன்றிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனை பஞ்சாப் அரசு இப்போது ஆலோசகராக நியமித்திருக்கிறது. அவர் என்ன தீர்வுகளுடன் வருகிறார் என்று பார்ப்போம்.”
  • “அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் அறிக்கைகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக - எவையெல்லாம் இலவசம் அல்லது மானியம் என்று மளிகைச் சாமான் பட்டியலைப் போலத் தயாரிக்கின்றன. மாதாந்திர உதவித்தொகை, இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம், வேட்டி - சேலை என்று பல ரகங்கள் அறிவிக்கப்படுகின்றன. இந்த இலவசங்களால் மாநிலம் எந்த வகையிலும் வளர்ச்சி பெறாது, அல்லது மக்களிடையே சமத்துவமும் ஏற்பட்டுவிடாது. வறுமையை ஒழிக்கவும் பயன்படாது. இலவசங்கள் மாநிலத்தின் நிதி நிலைமையைச் சீர்குலைப்பதுடன் வளர்ச்சிக்கான நிதியை வற்றச்செய்து, மாநிலத்தைப் பின்னுக்கு இழுத்துவிடும்” என்கிறார் டாக்டர் பிரமோத் குமார்.

அதிகாரிகளே காரணம்

  • பஞ்சாபின் நிதி நெருக்கடிக்கு மாநில அதிகாரிகளே பெருமளவு காரணம் என்கிறார் பாடியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் டாக்டர் சூச்சா சிங் கில். “அரசு அதிகாரிகளுக்கு மாநிலத்தை வளர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற உறுதி இல்லை, புதிய திட்டங்களைத் தீட்ட ஆக்கப்பூர்வ சிந்தனையும் இல்லை. பொருளாதாரம் அச்சு முறியும் நிலைக்குச் சென்றிருக்கிறது, விரைந்து செயல்பட்டால் சீரமைத்துவிடலாம். மாநிலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்று முதல் நடவடிக்கையாக, சொந்த மாநிலத்தில் உள்ள நிபுணர்களிடம் ஆலோசனை கலக்க வேண்டும்.
  • “செலவுகளைக் குறைக்க மானியங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். வருமான வரி செலுத்துவோருக்கு மின்கட்டண மானியமும் இலவச பேருந்துப் பயணச் சலுகைகளும் கூடாது. விவசாய பம்புசெட்டுகளுக்கான மானியம் ஒரு விவசாயியின் ஒரேயொரு ஆழ்துளைக் கிணறுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும் அல்லது 5 ஏக்கர் அல்லது 7.5 ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ள விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும். ஹரியாணாவில் செய்வதைப் போல சூரியஒளி மின்தயாரிப்புப் பலகைகளை ஆழ்துளைக் கிணறு பம்புசெட்டுகளுடன் பொருத்த ஒன்றிய அரசின் மானியங்களையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். இதனால் மாநில அரசின் மானியச் செலவு பெருமளவு குறையும். மாநில அரசின் வருவாய் துறையில் உள்ள முறைகேடுகளையும் மெத்தனங்களையும் கட்டுப்படுத்தினால் மட்டும் ஆண்டுக்கு ரூ.35,000 கோடி சேமிக்கப்படும்” என்கிறார் அவர்.

தீவிரவாதம் முக்கிய காரணம்

  • பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பிரீத்தம் சிங், பஞ்சாபின் நிதிக் கோளாறுகளுக்குக் காரணம் தனிநாடு கோரிக்கைக்காகப் போராடிய சீக்கிய தீவிரவாதிகள் காலம்தான் என்கிறார். அப்போது மாநில நிர்வாகம் ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ராணுவம், துணைநிலை ராணுவப்படைகள் உள்ளிட்டவற்றின் செலவுகளுக்கு மாநில நிதிதான் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து அரசுக்கு வருமானமும் வெகுவாகக் குறைந்தது.
  • ஒருபுறம் வருவாய் குறைந்தது, இன்னொருபுறம் செலவு – பயனில்லாச் செலவு – அதிகரித்தது. அப்போது ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்படாததால், ஒன்றிய அரசால் ஈடுசெய்யப்படாததால் அது வளர்ந்து பெரிதாகிவிட்டது. இந்த ஒரு காரணத்துக்காகவே ஒன்றிய அரசு மாநிலத்துக்கு ஒரேயொருமுறை உதவியாக பெருந்தொகையை வழங்க வேண்டும். உலக வங்கி இதை ஆண்டுதோறும் ஏதாவதொரு நாட்டுக்கு அமல்படுத்துகிறது.
  • “ஒன்றிய அரசு இப்போது கடைப்பிடிக்கும் நிதியாணையப் பரிந்துரைப்படியான நிதி ஒதுக்கீடு, பஞ்சாப் போன்ற வளர்ந்த மாநிலங்களுக்குப் போதவில்லை. வளர்ந்த மாநிலங்களில் பெறும் ஜிஎஸ்டியின் அதிகப் பங்கு, வருவாயைப் பெருக்காத உத்தர பிரதேசம், பிஹார் போன்றவற்றுக்குப் பிரித்துத் தரப்படுகின்றன. மாநிலங்களின் அன்றாடச் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், ஒன்றிய அரசோ மாதம் ஒருமுறை எல்லாத் தொகையையும் திரட்டி பிறகு பிரித்தளிக்கிறது. சில வேளைகளில் ஏதாவது காரணம் சொல்லி குறைக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஜிஎஸ்டி பகிர்வுமுறையே மறுஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும்” என்கிறார் பிரீத்தம் சிங்.
  • “பெரும்பணக்காரர்கள் மீது மாநில அரசு தனி வரி விதிக்க வேண்டும். மாநில அரசின் உதவிகளால், பாதுகாப்பால் வளர்ந்த பெரிய தொழிலதிபர்களும் கோடீஸ்வரர்களும் மாநில வளர்ச்சிக்கு உதவக் கடமைப்பட்டவர்கள் என்பதால் இப்படி தனி வரி விதிப்பதில் தவறில்லை, ஆனால் போதிய தரவுகள் என்னிடம் இல்லை” என்றும் கூறுகிறார் பிரீத்தம் சிங்.

நன்றி: அருஞ்சொல் (25 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories