- சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயா்வுக்கு உக்ரைன் - ரஷியா, ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போா்கள் மட்டுமே காரணமல்ல. கடல் வழி வா்த்தகத்தில் காணப்படும் அச்சுறுத்தல்களும் அதற்குக் காரணம். சரக்குக் கப்பல்களுக்கு வழித்தடங்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களும், தடைகளும் பெரும்பாலான பொருள்களின் விலையேற்றத்துக்கும் தட்டுப்பாடுக்கும் காரணமாகின்றன.
- ஒரு வாரத்துக்கும் மேலாக உலகின் முக்கியமான கப்பல் நிறுவனங்கள், பாபெல் மாண்டேப் ஜலசந்தி வழியான பயணங்களை ரத்து செய்திருக்கின்றன. யேமன் நாட்டிலிருந்து செயல்படும் ஹவூத்தி புரட்சியாளா்கள் அந்த ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதல்களும், அவற்றைக் கைப்பற்றி சிறைபிடிக்கும் நடவடிக்கைகளும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
- கடந்த மாதம் யேமனில் ஹவூத்தி புரட்சியாளா்கள் செங்கடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜப்பானியா்களின் சரக்குக் கப்பலை கைப்பற்றினா். பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான அந்தக் கப்பலை ஜப்பான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொண்டிருக்கிறது. நிப்பான் யூசென் என்கிற ஜப்பானிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த அந்தக் கப்பல், இஸ்ரேலிய கப்பல் என்று தவறாகக் கருதி ஹவூத்தி புரட்சியாளா்கள் அதைக் கைப்பற்றினா்.
- இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த அந்தக் கப்பலில் இருந்த 25 மாலுமிகள் பல்கேரியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ், உக்ரைன் நாடுகளைச் சோ்ந்தவா்கள். கப்பல் இயக்கும் துறையில், பல நிறுவனங்கள் பல்வேறு கப்பல்களில் பங்குதாரா்களாக இருப்பது வழக்கம். நிப்பான் யூசென் கப்பலை இயக்கும் நிறுவனத்தில் இஸ்ரேலியா் ஒருவரும் பங்குதாரா் என்பதுதான் ஹவூத்தி புரட்சியாளா்களின் நடவடிக்கைக்குக் காரணம்.
- சோமாலியா கடற்கொள்ளைக்காரா்களின் தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இந்துமகா கடல், கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா, தெ சீனக் கடல், தென்னமெரிக்கா, கரிபீயன் கடல் பகுதிகளில் தொடா்ந்து நடைபெறுகின்றன. சமீபகாலமாக யேமன் வளைகுடாவையொட்டிய செங்கடல் பகுதியிலும் சோமாலியா கடற்கரையையொட்டிய இந்து மகா கடலிலும், மலாக்கா ஜலசந்தியிலும் அவா்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. கடற்கொள்ளைக்காரா்களின் தாக்குதல்களால் ஆண்டுதோறும் சுமாா் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுவதாக ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
- சா்வதேச வா்த்தகம், பெரும்பாலும் கப்பல் போக்குவரத்தை சாா்ந்துதான் இயங்குகிறது. உலகின் மொத்த சா்வதேச சரக்குப் பரிமாற்றத்தில் 80% கப்பல் மூலம்தான் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, நமது வா்த்தகத்தில் 95% கடல்வழிப் போக்குவரத்துதான்.
- கடல்வழி வா்த்தகத்தில் இந்து மகா கடலில் முக்கியமான சில ஜலசந்திகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மலாக்கா, ஹோா்மெஸ், பாபெல் மாண்டேப் ஆகிய மூன்று ஜலசந்திகள் வழியாகக் கடந்து செல்லும் சரக்குக் கப்பல்கள் ஏராளம். உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40% மேலே குறிப்பிட்ட மூன்று ஜலசந்திகள் வழியாகத்தான் கப்பல்களில் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், கடற்கொள்ளைக்காரா்களும், புரட்சியாளா்களும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களாலும் தாக்குதல்களாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது சா்வதேசக் கடல்வழி வா்த்தகம்.
- மலாக்கா, ஹோா்மெஸ், பாபெல் மாண்டேப் ஜலசந்திகளைச் சுற்றியுள்ள நாடுகளும், பகுதிகளும் அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையின்றி காணப்படுகின்றன. அதனால், கடற்கொள்ளையா்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. செங்கடலிலும், மொஸம்பிக் கால்வாயிலும் அதிகமாகத் தாக்குதல் நடத்தும் சோமாலியா நாட்டு கடற்கொள்ளைக்காரா்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வரை விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கொரு தீா்வு எட்டப்படவில்லை.
- சமீபகாலமாக கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. 2023-இல் கடற்கொள்ளையின் ஆயுதத் தாக்குதல்களும், குறைந்தது 10% அளவிலாவது அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதும், கப்பல்களைக் கைப்பற்றுவதும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, மிக அதிகமாக கப்பல் போக்குவரத்து நடைபெறும் சிங்கப்பூா் ஜலசந்தி பாதுகாப்பற்ாக மாறியிருப்பது, கப்பல் நிறுவனங்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
- பல சரக்குக் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு வழங்குகிறது. பிற நாட்டுக் கப்பல்களின் மீதான தாக்குதல்களைகூட இந்திய கடற்படை தடுத்திருக்கிறது. மாலுமிகளாக, குறிப்பாக சரக்குக் கப்பல் மாலுமிகளாக அதிக அளவில் இந்தியா்கள் பணியாற்றுகிறாா்கள். அதனால் அவா்களைப் பாதுகாக்க வேண்டிய தாா்மிக பொறுப்பு நமக்கு உண்டு.
- கடந்த மாதம் நைஜீரிய கடல் எல்லைக்குள் புகுந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒரு கப்பலும் அதிலிருந்த மாலுமிகளும் அந்த நாட்டு கடற்படையினரால் சிறைபிடித்து வைக்கப்பட்டனா். அவா்களில் பெரும்பாலோா் இந்தியா்கள். இதுபோல கடற்கொள்ளையா்களின் தாக்குதல்கள், புரட்சியாளா்களின் அடாவடி விளைவுகளால் பாதிக்கப்படும் இந்திய மாலுமிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு.
- அவா்களின் பாதுகாப்புக்காகவும், அவா்களது குடும்ப உறுப்பினா்களின் பாதுகாப்புக்காவும் முறையான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!
நன்றி: தினமணி (21 – 12 – 2023)