TNPSC Thervupettagam

கடலைக் கவனித்தல் எனும் கடற்குடிகளின் வாழ்க்கை

November 16 , 2024 61 days 123 0

கடலைக் கவனித்தல் எனும் கடற்குடிகளின் வாழ்க்கை

  • “மத்தியதரைக் கடலைப் புரிந்து கொள்வது என்பது, அதைப் பார்த்துக்கொண்டே இருப்பது.” - ஃபெர்னண்டு ப்ராதெல்-இன் இக்கூற்று கடற்குடி வாழ்வின் எதார்த்தத்தைப் பிரதி பலிப்பது. ‘கால் கழுவ’ அலைவாய்க் கரைக்குச் செல்லும் கடற்குடி, அலைநீர் வார்ந்துபோகும் மணலைக் காலால் சற்றே கிளறி விடுகிறார்.
  • அம்மணலின் செறிவு கடல் நீரோட்டத்தின் தன்மையை அவருக்குச் சொல்லிவிடும். நிலா வெளிச்சமற்ற இரவில் கடலில் ஒளிர்ந்து அடங்குகிற ‘கவுரு’ என்னும் உயிரொளிர்வு (bioluminescence) அவர் எப்போது கடல் புகவேண்டும் எனத் தீர்மானிக்கிறது. கடலைக் கவனித்துக் கொண்டிருப்பது கடற்குடி வாழ்க்கை முறையின் அடிப்படையாக இருக்கிறது.
  • சங்க இலக்கியத்தில் இப்படியொரு குறிப்பு வருகிறது- தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி (நற்றிணை-4). அலை, கடல் ஏற்ற வற்றம், நீரோட்டம், காற்று, காலம், பொழுது, கோள்கள்- ‘தண்பெரும் பரப்பின் ஒண்பத’த்தை அவருக்கு எடுத்துச் சொல்கின்றன.

மீனைப் பின்தொடரும் கடற்குடி:

  • கடல் நோக்குதலும் கடல் பழகுதலும் நெய்தல் வாழ்வின் இரண்டறக் கலந்த கூறுகளாகச் சங்க இலக்கியத்தில் இடம்பெறுகின்றன. என் கிராமத்தில் சிறுவயதில் நாங்கள் விளையாடும் ஆட்டங்களில் ஒன்று, மீன் பெயர் சொல்லுதல். மணல்வெளியில் வட்டமாக உட்கார்ந்து கொள்வோம். அதிகப்படியான மீன் பெயர்களைச் சொல்பவர் வெற்றி பெற்றவராவார்.
  • முத்துக்குளித்துறைக் கிராமங்களில் இந்த ஆட்டத்தைச் சற்று வித்தியாசமாக ஆடுவார்கள். ஒருவர் ஒரு மீன் பெயரைக் குறிப்பிட்டதும் மற்றவர்கள் அம்மீனின் தனிப் பண்புகள், கிடைக்கும் காலம், அம்மீனை அறுவடை செய்வதற்கான கருவி போன்ற விவரங்களைச் சொல்ல வேண்டும். மீனவச் சிறுவர்களின் கடலார்வம் இப்படிப் பல வகைகளில் வளர்த்தெடுக்கப்படுகிறது.
  • இயற்கை, காலமும் இடமும் ஊடாடும் கட்டமைவு. உயிர்களாலும் ஐம்பெரும் ஆற்றல் கூறுகளாலும் அமைவது. பருவம்தோறும், பொழுதுதோறும் இயற்கை மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு சூழலியல் கட்டமைவில் காலம்தோறும் நிகழும் அம்மாற்றங்களுக்கு இசைவாக உயிர்கள் எவ்வாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன என்பதை மனிதர்கள் அவதானித்து, அவற்றை அடியொற்றி, தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

பெருமீன்:

  • சங்கப் பாடல்களில் நெய்தல் திணை விலங்குகளும் அவற்றின் நடத்தைப் போக்குகளும் விரிவாக விவரிக்கப் பெறுகின்றன. கடலிலும், கடலோடு இணைந்து கிடக்கும் கழிகளிலும், கரையிலும் வாழும் இவ்விலங்குகளின் தோற்றம், வடிவமைப்பு, சூழல், வாழ்க்கைமுறை ஆகியவை பெரும் பான்மையும் பயன்பாட்டின் பார்வையில் பதியப்பெற்றுள்ளதைக் காணலாம்.
  • பிற கடல் விலங்குகளையும் மனிதனையும் வேட்டையாடும் மீன் இனம் சுறா. பால் சுறா, முண்டன்சுறா, கொப்புளிச்சுறா, புலிச்சுறா, கொம்பன் சுறா, கூரச்சுறா, வாள்சுறா என்பதான பல சுறா இனங்களை மீனவர்கள் அறிந்திருந்தனர். சில சுறா இனங்கள் 30 அடி நீளம்வரை வளரும்.
  • வழக்கமாகக் கடல் நீரில் மட்டுமே காணப்படும் சுறா மீன்களில் சில, கடலொட்டிய கழிகளிலும் காணப்படும். சங்கப் பாடல்களில் ஏறு, பெருமீன் எனப் பல பெயர்களில் வழங்கப்பெறும் சுறா மீனின் பண்புகள், பரதவரின் சுறா வேட்டை, சுறாமீன் உணக்கல், சுறா எண்ணெய் குறித்தும் சங்க இலக்கியத்தில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.

கழிமுகம்:

  • பதினெட்டாம் நூற்றாண்டில் பெயரறியாப் புலவரொருவர் பாடிய செண்பக ராமன் பள்ளுவில் ஒரு நெய்தல் நிலக் காட்சி விவரிக்கப்படுகிறது (பாடல் 56). மழைக் காலத்தில் கரை புரண்டோடும் பறளியாற்றில் அடித்துவரப்படும் மீன்களின் சிறப்பான அந்த விவரணை ஆர்வத்தைத் தூண்டுவது. இலக்கியம் காலத்தையும் வாழ்வையும் பிரதிபலிப்பது. எனில், சங்க இலக்கியம் பதிந்துள்ள இயற்கை பற்றிய அவதானிப்புகள் திணைக்குடி மரபறிவின் பிரதிபலிப்பாகும்.
  • கடலிலும் அதை ஒட்டிய நீர்நிலைகளிலும் வாழும் மீன் இனங்களின் பண்புகள், கடற்கரைகளில் மணல்மேடுகள் உருவாகும் முறைகள், மணற்பகுதியில் வளரும் தாவரங்கள் பற்றிய நுட்பமான விவரணைகளில் நெய்தல் குடிகளின் இயற்கை குறித்த ஆழமான அறிவும் அக்கறையும் வெளிப்படுகின்றன.
  • பழவேற்காடு ஏரி, தேங்காய்ப்பட்டினம் கழிமுகம், பக்கிங்ஹாம் கால்வாய்ப் பகுதிகளின் மீன்வளம் குறித்து இராஜசேகரன் (1951, கோட்டைக் குப்பம்), ஜான் போஸ்கோ (1955, இரயுமன்துறை) போன்றோர் குறிப்பிடும் தரவுகள் மீனவர்களின் வாழ்வாதாரம் கடலொட்டிய நீர்நிலைகளைச் சார்ந்து இருப்பதன் பிரதிபலிப்பாகும். இந்நீர்நிலைகள் கரைக்கடல் மீன்வளத்துக்கும் ஆதாரமாக இருந்திருக்கின்றன.

கழிமுகமும் மீன்வளமும்:

  • காலநிலை மாற்றம் கடல் மீன்வளத்தைப் பாதிக்கிறது என்பது பொது அறிவு. கழிமுகங்களின் சிதைவு அதில் முக்கியமான கூறு. பருவமழைநீர் கடலில் கலப்பதாலேயே கடல் மீன்வளம் செழிக்கிறது. தமிழ்நாட்டின் வடக்கில் கொற்றலையாறு தொடங்கி தெற்கில் குழித்துறையாறு வரை ஏராளமான ஆறுகள் கரைக்கடலுக்கு நன்னீரைக் கொண்டுவந்து சேர்க்கின்றன
  • ஆறுகள் கடலில் சேருமிடத்தில் நன்னீரும் கடல்நீரும் கலந்து கழிமுகம் என்னும் புதிய ஒரு சூழலியல் கட்டமைவு உருவாகிறது. இறால் உள்ளிட்ட பெரும்பான்மையான மீனினங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும், நன்னீர், கடல் வலசை மீன்களின் வலசைப் பாதையாகவும் கழிமுகங்கள் விளங்குகின்றன. பாலாறு, வெள்ளாறு, பரவனாறு, கொள்ளிடம் ஆறு, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் இணையும் கடல் பகுதிகள் இயல்பில் மீன்வளம் கொழிக்கும் இடங்களாக அமைந்திருப்பதும் பருவமழையைத் தொடர்ந்து இப்பகுதிகளில் சிறப்பான மீன்வளம் அமைவதும் நன்னீர் கடலில் கலப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

அழியும் கழிமுகங்கள்:

  • இன்று நன்னீருக்குப் பதிலாகச் சமவெளி நிலத்தின் கூளங்களையும் மாசுகளையும் நகரக் கழிவுகளையும் கடலில் கொண்டுசேர்க்கும் பாதைகளாகவே ஆறுகள் மாறியிருக்கின்றன. வட சென்னை, திருவள்ளூர்க் கடற்கரைப் பகுதிகள் எண்ணெய்க் கசிவு, அனல்மின் நிலையச் சாம்பல் கழிவு, ஆலைகள் வெளி யேற்றும் மாசுகளால் வாழத் தகுதியற்ற நிலமாக மாறிக்கொண்டிருக்கிறது.
  • பழவேற் காடு ஏரி, கொற்றலையாறு, எண்ணூர் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகள் கழிவுக் கிடங்குகளாக மாறிவரும் நிலையில், கடலும் கழிமுகங்களும் மீன்வளத்துக்குச் சாதகமாக இல்லை. உவர்நீர் இறால் பண்ணைகளால் கிள்ளை, கழுவெளி போன்ற நீர்நிலைகள் அழிவுக்கு உள்ளாகியிருக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories