- தொல் பழங்காலத்தில் வளிமண்டலமும் காலநிலையும் எப்படி இருந்திருக்கும்? அதைப் பற்றி ஓரளவு துல்லியமாக நமக்கு அறியத் தருவது, அக்கால உறைபனிக்குள் ஆங்காங்கே சிறைப்பட்டிருக்கும் காற்றுக் குமிழ்கள்தான். வளிமண்டலத்தில் கடந்த நான்கு லட்சம் ஆண்டுகளில் ஒருபோதும் உயர்ந்திராத அளவுக்குக் கரிமவளியின் அளவு அதிகரித்திருக்கிறது என்பதை இந்தப் பழங்காற்றுக் குமிழ்கள் தெளிவுபடுத்துகின்றன.
- உறைபனி யுகங்களின் காலத்தில் (இதே தொடரின் அத்தியாயம் 2இல் அலசப்பட்டுள்ளது) வளிமண்டலத்தில் கரிமவளியின் அளவு 0.02 விழுக்காடாக இருந்தது. உறைபனி யுகங்களுக்கு இடைப்பட்ட காலங்களில்கூட (inter-glacial periods), அதிகபட்சம் 0.028% வரைதான் அது உயர்ந்திருந்து இருக்கிறது. நிலக்கரியை எரிக்கத் தொடங்கிய காலம் வரை 0.02% எல்லைக்குள்ளேயே இருந்துள்ளது. 2013இல் முதன்முறையாக கரிமவளி அளவு 0.04%ஐத் தாண்டியது. புதைபடிவ எரிபொருள் பயன்பாடே இதற்கு முக்கியமான காரணி.
- உபரியாக ஒரு தகவல்- புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளில் 60% வளிமண்டலத்திலேயே தங்கிவிடுகிறது. இப்போது வளிமண்டலத்தில் கரிம வளியின் அளவு 0.0415%. இது ஓர் அடிப்படையான புள்ளிவிவரம். நாம் அன்றாடம் மூச்சிழுக்கும் வளியில் 0.06% முதல் 0.1% வரை கரிமவளி உள்ளதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. 0.1% என்பது மனிதர்களுக்கு நச்சுநிலை. இவையெல்லாம் என்ன கணக்கு? காற்றில் கரிமவளி கூடினால் என்னாகும்? ஒன்றும் புரியவில்லை அல்லவா?
பசுங்குடில் விளைவு
- உதகை, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாத அரிய வகை தாவரங்களைக் கண்ணாடி அறைகளில் (glass house) வைத்துப் பராமரிப்பார்கள்; வீடுகளைக் கண்ணாடி ஜன்னல்களுடன் அமைத்து, வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருப்பார்கள். கண்ணாடி வழியாக அறைக்குள்ளே வரும் சூரிய ஒளி, அங்குள்ள பொருள்களைச் சூடாக்குகிறது. அவ்வாறு வெம்மையாகும் பொருள்கள் அகச்சிவப்புக் கதிர்களை உமிழ்கின்றன. கண்ணாடி அகச்சிவப்புக் கதிர்களைக் கடத்தாது; அந்த வெப்பம் உள்ளேயே தங்கி, அறையைச் சூடாக்கிவிடுகிறது. பசுங்குடில் விளைவு என்பது இதுவே.
- புவிப்பரப்பில் விழும் சூரிய வெளிச்சம் இதே வேலையைத்தான் செய்கிறது. வெம்மையாகும் பரப்பி லிருந்து வெளியேறும் அகச்சிவப்புக் கதிர் இயல்பாக வான்வெளிக்கு எதிரொளித்துப் போயாக வேண்டும். ஆனால் வளிமண்டலத்திலுள்ள கரிமவளி, கண்ணாடிபோல அகச் சிவப்புக் கதிரைச் சிறைப்படுத்தி, பூமியைச் சூடாக்குகிறது. உலகம் உயிர்த்திருக்க இந்த வெப்பம் தேவை.
- பூமிக் கோளம் வெள்ளிக் கோளுக்கும் செவ்வாய்க்கும் இடையில் தனது அச்சில் சுழன்றபடி சூரியனை வலம் வருவது. வெள்ளிக்கோள் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான கோள்; செவ்வாயின் நிலைமையோ மைனஸ் 85 பாகை செல்சியஸ் உறைநிலை! 4 பாகை வெப்பத்தை மட்டும் உயர்த்த முடிந்துவிட்டால் (-81 டிகிரி செல்சியஸ்) அங்கே உறைநிலையிலுள்ள கரிவளிக்கூறுகள் வளிநிலைக்குத் திரும்பி, படிப்படியாக செவ்வாய்க் கோள் மிதவெப்பநிலைக்கு வந்துவிட முடியும். அதன் பிறகு, அங்கு உயிரினங்களின் குடியேற்றம் சாத்தியப்படலாம். பூவுலகம் தோன்றிய காலத்தில் அதன் நிலைமையும் ஏறத்தாழ இப்படித்தான் இருந்திருக்கிறது. கரிமவளியின் தயவால்தான் உயிர்கள் தோன்ற ஏதுவான வெப்பநிலை வாய்த்தது. கரிமவளியின் அளவு அதிகமானதால், புவி வெப்பநிலை உயர்ந்து, காலநிலைப் பிறழ்வு நேர்ந்துவிட்டது. மனிதர்கள் இயற்கையைத் தவறாகக் கையாண்ட தால் வரமாக வந்த கரிமவளி, இப்போது சாபமாகிப் போனது.
- பசுங்குடில் வளிகளின் பட்டியலில் வேறு சில வளிகள் உள்ளன: குளோரோ ஃபுளூரோ கார்பன். குளிர்ப்பதனம், உறைபாடம் போன்ற தொழில்நுட்பங்கள் வந்த பிறகு, இந்த வளிகளும் வளிமண்டலத்தில் கலக்க ஆரம்பித்தன. இந்த வரிசையில் புதிய வரவான சல்ஃபர் ஹெக்சா ஃபுளூரைடு பல மடங்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.
ஜேம்ஸ் ஹான்சன்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணியாற்றிவந்த ஜேம்ஸ் ஹான்சன் குழுவினர் ஏறத்தாழ இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னால் ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருந்தனர். ‘தொல்லியல் பதிவுகளின்படி, கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர்ந்ததால்தான் கடல் மட்டம் 25 மீட்டர் அளவு உயர்ந்திருக்கிறது; இந்த மாற்றம் பனிப்பாறைகள் சீராக உருகி வழிந்ததால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை; போலவே, இந்த நூற்றாண்டில் நிகழப் போகும் கடல் மட்ட உயர்வு என்பது படிப்படியான மாற்றமாக இருக்காது’ என்றார் ஹான்சன்.
- துருவப் பனிப்பாறைகள்- குறிப்பாக மேற்கு அண்டார்க்டிக், ஐஸ்லாந்து பனிப்பாறைகள்- நூறு ஆண்டுகள் தாக்குப்பிடிக்காது, படுவேகமாகச் சரிந்துவிடும் என்பதே ஹான்சனின் கணிப்பாக இருந்தது. சீரான வெப்பநிலை மாற்றங்கள் என்பது இனிமேல் சாத்தியமேயில்லை என அவர் கணித்தார். ஹான்சன் குழு முன்கணித்த சடுதி மாற்றங்களை இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக் கின்றோம். உதாரணமாக, சிங்கப்பூர், பஹ்ரைன் போன்ற நாடுகளின் பரப்புக்கு இணையான பனிப்பாறை அண்டார்க்டிகாவிலிருந்து பிரிந்து, கடலுக்குள் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதன் அடிப்பகுதி 2020இலேயே உருகத் தொடங்கியுள்ளது.
பனிப்பாளம் தாங்கி
- பனிக் கழிவடை ஏரிகளின் சிதைவு குறித்து மூன்றாவது அத்தியாயத்தில் விவாதித்திருந்தோம். பனிப்பாறைகள் எப்படிக் குடைசாய்கின்றன? பனிப் பாறைகளின் வெண்மைப் பரப்பு அதிகபட்ச வெப்பத்தைப் பிரதிபலித்து விரட்டிவிடும் தன்மை கொண்டது. அதனால் துருவப் பகுதியில் இயல்பான வெப்பநிலை நிலவும், பனிப்பாறைகள் உருகிக் கரையச் சாத்தியமில்லை. ஆனால், உலகளவில் வெப்பநிலை இரண்டு மூன்று பாகை அதிகரித்திருக்கும் நிலையில், பனிப்பாறைகள் உருகி, ஆங்காங்கே சிறு குட்டைகளாகத் தேங்குகின்றன. இப்படித் தேங்கும் நீரானது, அதிக வெப்பத்தை உள்ளிழுக்கும். இது பனிப்பாறை உருகுதலைப் பன்மடங்கு துரிதப்படுத்தும். இதன் விளைவாக, பனிப்பாளங்களைத் தாங்கி நிற்கும் ‘பட்ரஸ்’ (butress) என்னும் குறுக்குத் தடுப்புகள் (தாங்கிகள்) நொறுங்கி, பனிப்பாறைகள் மொத்தமாக நொறுங்கி விழ ஏதுவாகும். புவி வெப்ப உயர்வினால் நிகழும் வேகமான சங்கிலி விளைவு இது.
வேளாண்மை ஓர் இயற்கை மீறல்
- இயற்கையின் இயல்பை மாற்றும் மானுடச் செயல்பாடு எதுவும் மீறலே. அப்படிப் பார்த்தால், மனிதன் நிலத்தின் மீது நிகழ்த்திய ஆதி வன்முறை வேளாண்மை. விளைந்தவற்றைச் சேகரித்து உண்டு வாழ்ந்த மனித இனம், 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் பயிரிடத் தொடங்கியது; அதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விலங்குகளைப் பழக்கப்படுத்தி யிருந்தது. பிறகு, அவற்றை உழவுக்குப் பயன்படுத்தியிருந்தது.
- ‘காடு கொன்று நாடாக்கி’ என்பதை வளர்ச்சியைக் கொணர்ந்த மன்னர்களின் புகழ்பாடும் வரிகளாக வாசித்துப் பழகியிருக்கிறோம். காட்டைக் கொன்றால் நாடாகாது, நரகமாகும் என்பது இப்போது புரிந்திருக்கும். காட்டைப் பாலையாக மாற்றும் மனித முயற்சியில் ஓர் இடைவேளைக் காட்சிதான் நாடு. சகாரா, தார் பாலைவனங்கள் ஒரு காலத்தில் காடுகளாக இருந்திருக்கின்றன.
கரிமவளியின் மேலாளர்கள்
- காட்டுப் பரப்பு குறைந்தால் நாட்டில் மழைப்பேறு குறையும் என்பது தெரிந்த செய்தி. ஆனால், அதையும் தாண்டி காடு நமக்கு வேறொரு முக்கியமான வேலையைச் செய்து கொண்டிருக்கிறது- அது வளிமண்டலத்தின் கரிமவளிச் சுமையைக் குறைக்கும் வேலை. பசுந்தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு உற்பத்தி செய்துகொள்வதற்குக் கரிமவளியை இடுபொருளாக்கி, உயிர்வளியை வெளியேற்றுகின்றன. வளிமண்டலத்திலுள்ள உயிர் வளியில் 40%ஐ நிலப்பரப்பிலுள்ள தாவரங்கள் உற்பத்தி செய்கின்றன.
- சரி, மீதி 60% உயிர்வளி எங்கிருந்து வருகிறது? அது கடலின் பங்களிப்பு! மிதக்கும் நுண்-தாவரங்கள் (phyto plankton), கடற்பாசி (sea weeds), கடற்புல் (sea grass) அனைத்தும் சேர்ந்து செய்கிற வேலை. உயிர்வளி உற்பத்திக்கு நிகரான கரிமவளியைத்தாவரங்கள் விழுங்கிச் செரிக்கின்றன. இந்த அற்புதமான சேவையை வழங்குகிற பசுந்தாவரங்களை அழித்து ஒழித்துவிட்டு, ‘ஐயோ பத்திக்கிச்சே!’ என்று நாம் புலம்புகிறோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 06 – 2024)