TNPSC Thervupettagam

கட்சித் தலைவர்கள் கைது பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது

September 15 , 2023 474 days 294 0
  • ஆந்திரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுகூட இல்லாத நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதுசெய்யப் பட்டிருப்பது ஆந்திர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
  • 2014இல் தொடங்கப்பட்ட அரசு திறன் வளர்ப்புக் கழகத்தின் மூலம் ஊழல் நடந்திருப்பதாகவும் இந்த ஊழலின் மூலம் முதன்மையாகப் பயனடைந்தவர் அன்றைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு என்றும் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, 2021இல் குற்றம்சாட்டினார்.
  • அதே ஆண்டில், ஆந்திரப் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி..டி.) இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. ரூ.371 கோடி அரசுப் பணம், செயல்படாத தனியார் நிறுவனங்களின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் திசைதிருப்பப்பட்டது தெரியவந்திருப்பதாக சி..டி. கூறியது.
  • இதையடுத்து, செப்டம்பர் 9 அன்று விஜயவாடாவில் உள்ள ஆந்திர லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவைக் கைதுசெய்து 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. கைதுக்கு எதிரான சந்திரபாபு நாயுடுவின் மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 19க்கு ஒத்திவைத்தது. அதுவரை அவர் நீதிமன்றக் காவலிலேயே தொடர வேண்டும் என்றும் சி..டி. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
  • இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்திவருகின்றனர். டயர்களை எரிப்பது, அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது, போக்குவரத்தை முடக்கும் வகையில் சாலைகளில் போராட்டம் நடத்துவது என மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் அவர்கள் அத்துமீறிச் செயல்படுகின்றனர்.
  • அரசியல் கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்படும்போது சம்பந்தப்பட்ட கட்சியின் தொண்டர்கள் மக்களைப் பாதிக்கும் வகையில் போராட்டங்களை நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. இது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது; குறிப்பாக பிரதான தலைவர்கள் கைதுசெய்யப்படும்போது போராட்டங்களின் தீவிரமும் வன்முறையும் கட்டுக் கடங்காத அளவுக்குச் சென்றுவிடும்.
  • தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெ.ஜெயலலிதாவும் மு.கருணாநிதியும் கைது செய்யப்பட்ட போதெல்லாம் அவர்கள் தலைமை வகித்த கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். குறிப்பாக 2000ஆம் ஆண்டில் ஜெயலலிதா பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டபோது, தருமபுரியில் ஒரு பேருந்து தீக்கிரையாக்கப் பட்டு உள்ளே இருந்த கல்லூரி மாணவிகள் மூவர் உயிரிழந்த கொடூரத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்.
  • அத்துடன் தலைவர்கள் கைதுசெய்யப்படும்போது தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிர்ச்சியின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணிப்பதும் தொடர்கிறது. சந்திரபாபு நாயுடுவின் கைதை அடுத்து மூவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; 12 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
  • அரசியல் கட்சித் தலைவர்கள், நீதிமன்ற உத்தரவின்படி கைதுசெய்யப் படுவதற்கு எதிரான நிவாரணங்களைப் பெற சட்டரீதியான வழிமுறைகள் உள்ளன. அவற்றைத் தாண்டி தொண்டர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகளை அரசியல் கட்சித் தலைவர்கள் அனுமதிப்பதையும் ஊக்குவிப்பதுபோல் செயல்படுவதையும் கைவிட வேண்டும். நீதிமன்றங்களும் அரசியல் கட்சித் தொண்டர்களின் இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான காத்திரமான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories