TNPSC Thervupettagam

கட்டணம் இல்லாப் பேருந்து சேவை

September 5 , 2023 493 days 351 0
  • கட்டணம் இல்லாப் பேருந்து சேவையைப் பயன்படுத்திவரும் பெண்களுக்கு, மாதம் ஒன்றுக்கு ரூ.888 மீதமாகிறதுஎனத் தமிழ்நாடு திட்டக் குழு மேற்கொண்ட ஆய்வு முடிவு கூறுகிறது. 39% பட்டியல் சாதிப் பெண்கள், 21% மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்கள், 18% பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கட்டணம் இல்லாப் பேருந்து சேவையைப் பயன்படுத்திவருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
  • தொழில் (திருப்பூர்), வர்த்தகம் (மதுரை), வேளாண்மை (நாகப்பட்டினம்) என மூன்று முதன்மைப் பணிகளைக் கொண்ட மாவட்டங்கள், ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலைக்குச் செல்ல முடியாத பெண்கள், நோய் வாய்ப்பட்டிருக்கும் பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில், கட்டணம் இல்லாப் பேருந்து சேவை பெரும் நன்மையைக் கொடுத்துள்ளது. ஓராண்டில் 13.73 கோடிப் பெண்கள், இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

புரட்சிகரத் திட்டம்

  • கட்டணம் இல்லாப் பேருந்துப் பயணத்தில் மிக முக்கிய, நுணுக்கமான, உணர்வுரீதியான, தன்மானம், சுயமரியாதை அடிப்படையிலான, பல நன்மைகள் இருப்பதையும் கவனிக்க முடிகிறது. ஆணாதிக்கச் சமூக அமைப்பில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள், அந்தச் சிக்கலான சூழ்நிலையில்கூடத் தங்கள் தாய்வீட்டுக்குச் செல்லவோ காவல் நிலையம் சென்று புகார் அளிக்கவோகூடக் கையில் காசு இல்லாமல் கையறு நிலையில் தவிப்பார்கள்.
  • கட்டணம் இல்லாப் பேருந்துத் திட்டம் வந்த பின்னர், பேருந்துக் கட்டணத்துக்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டிய நிலை பெண்களுக்கு இல்லை. கிராமப்புற ஏழை, எளிய பெண்களிடம் குறைந்தபட்சச் செலவுக்கான பணம்கூட இருக்காது. சில நேரம் பேருந்தில் செல்ல கடன் பெற முடியாமல், அன்றைய தினக்கூலியை இழந்த பெண்கள் இருக்கிறார்கள். கையில் காசு இல்லாத பெண்கள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து செல்ல முடியும் என்பது பெண் சுதந்திரம் சார்ந்து பெரும் நகர்வு.
  • பெண்கள் பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் குறைகிறது. காற்று மாசுபாடு குறைகிறது. ஆரோக்கியக் குறைபாட்டை மட்டுப்படுத்துகிறது. இந்தப் பார்வையில் இத்திட்டத்தைப் பரிசீலனை செய்தால், இன்றைய காலநிலை மாற்ற ஆபத்துக் காலத்தில், இது ஒரு புரட்சிகரத் திட்டம் என்றே குறிப்பிட வேண்டும்.
  • 2019ஆம் ஆண்டு முதலே டெல்லியில் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. உலகின் பல்வேறு நாடுகளில், 50 நகரங்களில், இத்தகைய திட்டம் அமலில் உள்ளது. ஆனால், அதன் நோக்கம் தமிழ்நாடு வரித்துக்கொண்ட நோக்கங்களிலிருந்து வேறுபட்டது. இவ்வளவு நன்மைகள் மிகுந்த இத்திட்டம், ஒரு பகுதியினருக்கு இன்றுவரை சென்று சேரவில்லை என்பது குறித்துக் கேள்விப்படும்போது, மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

மலைவாழ் பெண்களுக்குப் பலனில்லை

  • அரசுப் பணியில் இருக்கும் பெண்கள்கூட இத்திட்டத்தைப் பயன்படுத்திவரும்போது, தமிழ்நாட்டில் வாழும் எட்டரை லட்சம் பழங்குடி மக்கள், பழங்குடியினர் அல்லாதவர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் பயன் தரவில்லை. காரணம், இவர்கள் மலைகளிலும் குன்றுகளிலும் வசிக்கிறார்கள். மலைப் பகுதிகளுக்கு நகர்ப்புறப் பேருந்து வசதி இல்லை என்ற ஒரே காரணத்துக்காகப் பழங்குடி மக்களும் மலைகளில் வாழும் மக்களும், இந்தச் சலுகையை இழந்துள்ளனர்.
  • ஈரோடு மாவட்டத்தில், கடம்பூர் மலைப் பகுதியில் கோட்டைமாளம் என்றொரு கிராமம். 100 பழங்குடிக் குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. பழங்குடியினர் அல்லாதவரும் வசித்துவருகின்றனர். இவர்கள் வங்கிச் சேவை, அரசு மானியங்களைப் பெற, ஆசனூர் அருகில் உள்ள அரேபாளையம் என்னும் கிராமத்துக்குச் சென்றுவர வேண்டும். இது 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு பேருந்துகள் மாறிச் சென்றுவர வேண்டும்.
  • போய் வர ரூ.90 செலவாகிறது. வங்கிக்குச் சென்று வந்தால் ஒருநாள் வேலை போய்விடும். நாள் ஒன்றுக்குத் தினக் கூலி 250 ரூபாய். ஆக மொத்தம் வங்கிக்குச் சென்றுவர 350 ரூபாயை அவர்கள் இழக்க வேண்டியிருக்கும். இது ஏதோ விதிவிலக்கான ஒரேயொரு கிராமம் அல்ல.
  • அப்பகுதியில் மந்தேதொட்டி, பாசக்குட்டை, செழுமைத்தொட்டி, சாமித்தொட்டி, நீர்குண்டி, காடட்டி, குன்றி, மார்க்கம்பாளையம் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் நாள் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.50 முதல் ரூ.90 வரை பேருந்துக்காகச் செலவழிக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 119 பழங்குடிக் கிராமங்களிலும் இதே நிலைதான்.
  • ஈரோடு மாவட்டம் தவிர, கொல்லிமலை, ஏற்காடு, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, பச்சைமலை, ஏலகிரி மலை, செங்கோட்டை, மாஞ்சோலை, சிறுமலை, கன்னியாகுமரி, கொடைக்கானல், ஆனைமலை, நீலகிரி, வால்பாறை, கூடலூர் எனப் பல மலைப் பகுதிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள் அல்லாதவருக்கும், கட்டணம் இல்லாப் பேருந்து சேவையைப் பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூரில் மட்டுமே நகரப் பேருந்து வசதிகள் உண்டு. கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட ஊர்களில் நகரப் பேருந்துகள் இல்லை.
  • வன உரிமைச் சட்டத்தில் (2006), பெரும்பகுதி தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவில்லை. வனச் சிறுபொருள்களைச் சேகரித்து விற்க ஏராளமான நேர்முக, மறைமுகத் தடைகள் உள்ளன. உணவுக்காகச் சிறு விலங்குகளை வேட்டையாடுதல் எப்போதோ தடைசெய்யப்பட்டுவிட்டது. இவையெல்லாம் சேர்ந்து, மலைவாழ் மக்களை விவசாயக் கூலிகளாக மாற்றிவிட்டன.‌
  • இவர்கள் பல கி.மீ. பயணம் செய்து, வேலை செய்து, குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்கள். பெரும்பாலும், ஆண்கள் வெளியூர் வேலைக்குச் செல்லும் நிலையில் உள்ளனர். இங்கு வசிக்கும் மக்கள் சுகாதார நிலையம் செல்லக்கூடப் பல கி.மீ. வரை பயணம் செய்கிறார்கள். இதற்கும்அவர்கள் பேருந்துக் கட்டணம் செலுத்தியே பயணித்தாக வேண்டும்.

கூடுதல் கவனம் வேண்டும்

  • எல்லோரையும் உள்ளடக்கித் திட்டமிடுதலில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம். பெண்களுக்கான சிறந்த திட்டத்தின் பலன்கள் பழங்குடிகள் உள்ளிட்ட, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அதிலும் குறிப்பாக சம பங்காக இருக்கும் சுமார் 5 லட்சம் பெண்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்த இயலாமல் இருப்பது வருத்தத்துக்குரியது.
  • இனியும் காலம் தாழ்த்தாமல் மலைவாழ் மக்களுக்கும் இதை விரிவுபடுத்த வேண்டும். இத்தகைய திட்டங்களை உருவாக்கும்போதே, அரசு இன்னும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நகரப் பேருந்துகள் இல்லாத இடங்களில், இத்திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்கான தீர்வு மிகவும் எளியது.
  • பள்ளிக் குழந்தைகளுக்குக் கட்டணச் சலுகை அட்டை உள்ளதுபோல், மலையில் இயக்கும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயனாளிகளுக்கு ஓர் அடையாள அட்டை கொடுத்து விட்டால் போதுமானது. நகரப் பேருந்துகள் இல்லை. எனவே, இந்தச் சலுகைகளை மலை வாழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றஅவலம் நீக்கப்பட வேண்டும்.
  • மே 2021இல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மாநிலத்தின் மொத்த உற்பத்தி வளர்ச்சிக்குத் துணைநிற்கும் திட்டம் என்றும் சொல்கிறார்கள். பழங்குடிகள் உள்ளிட்ட மலைவாழ் மக்களைக் கட்டணம் இல்லாப் பேருந்து சேவையிலிருந்து இனியும் தள்ளி நிறுத்தக் கூடாது!

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories