- கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, அரிசி, கோதுமை, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் சில்லறை விலையேற்றம் தொடர்ந்து கொண்டே இருப்பது, நாடு முழுவதும் மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
- குறிப்பாக, தக்காளியின் விலையேற்றம், வீடுகள் தொடங்கி சிறு உணவகங்கள் வரை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு, போதிய விலை கிடைக்கவில்லை என மகாராஷ்டிரத்தில் தக்காளி விவசாயிகள் தங்களது சாகுபடியைச் சாலையில் கொட்டி ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இன்று, தக்காளியின் விலை 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிலோ ரூ.100-ஐத் தாண்டியிருக்கிறது; சில இடங்களில் கிலோ ரூ.130-க்கும் மேல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
- தக்காளியின் விலை 2022 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 66% அதிகம் என்றால், வெங்காயம் (7.5%), உருளைக்கிழங்கு (4.5%) போன்றவற்றின் விலையும் இந்த ஆண்டு அதிகரித்திருக்கின்றன. பருப்பு வகைகளின் விலையும் அதேபோல் உயர்ந்திருக்கிறது. துவரம் பருப்பின் விலை, கடந்த ஆண்டைவிட 7.8% உயர்ந்து கிலோவுக்கு ரூ.130.75-ஐத் தொட்டிருக்கிறது. உணவுப் பொருள்களின் இந்தத் திடீர் விலையேற்றத்துக்குப் பருவமழையும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
- எல் நினோ அச்சுறுத்தலால், சம்பா சாகுபடி குறித்த கவலையில் இந்திய விவசாயிகள் உள்ளனர். பருவமழை தாமதமானதால், நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்திருப்பதாலும், அரசின் கையிருப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மற்றொருபுறம், உற்பத்திக் குறைவால் துவரம் பருப்பின் விலையும் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. சந்தையில் துவரம் பருப்புக்கான தட்டுப்பாட்டைச் சமாளித்து, அதன் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, 12 லட்சம் டன் அளவுக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது; இது கடந்த ஆண்டு இறக்குமதி அளவைவிட 35% அதிகமாகும்.
- காய்கறிகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், தக்காளியின் விலையைக் கட்டுப்படுத்தும் யோசனைகளை மக்கள் வழங்கக் கோரி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தக்காளியின் விலை ரூ.100-ஐக் கடந்துவிட்ட நிலையில், இன்று (ஜூலை 4) முதல் சென்னையில் 82 ரேஷன் கடைகளிலும் விரைவில் மற்ற மாவட்டங்களின் ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனைத் தொடங்கப்படும் என கூட்டுறவு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
- “காலநிலை மாற்றம், உள்நாட்டில் மாறுபடும் பருவமழை ஆகியவற்றைப் பொறுத்து பணவீக்கம் தீர்மானிக்கப்படும். நம் நாட்டில் பருவமழை வழக்கமாகப் பெய்யும் என எதிர்பார்ப்பு இருந்தாலும், எல் நினோ பற்றிய கவலை அதிகமாக உள்ளது. இது உணவுப் பொருள் சார்ந்த பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உணவுப் பொருள்கள் விலை உயரும் அபாயம் ஏற்படும்” என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த வாரம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், உணவுப் பொருள்களின் தற்போதைய விலையேற்றம் நாம் அந்த நிலையிலிருந்து சற்றுத் தொலைவில் இருப்பதையே உணர்த்துகிறது. எனவே, உணவுப் பொருள்களின் விலை உள்ளிட்ட அத்தியாவசிய அம்சங்களில், தொலைநோக்குப் பார்வையுடன் அரசு செயல்பட்டாக வேண்டியது அவசியம்.
நன்றி: தி இந்து (04 – 07 – 2023)