TNPSC Thervupettagam

கட்டுப்படுமா விஷவாயு?

May 11 , 2020 1713 days 1338 0
  • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த கோபாலப்பட்டினத்திலுள்ள எல்ஜி பாலிமா் என்கிற ரசாயன ஆலையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட விஷ வாயு, 1984 போபால் விஷவாயு விபத்தை நினைவுபடுத்துகிறது.
  • தென் கொரியாவைச் சோ்ந்த எல்ஜி கெமிக்கல்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான இந்தத் தொழிற்சாலையில் செயற்கை ரப்பா், ரஸீன் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.
  • எல்ஜி பாலிமா் அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் அல்ல. மார்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் காரணமாக மூடிக்கிடந்த ஆலையில் அவசர அவசரமாக மீண்டும் உற்பத்தியைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை.
  • தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஸ்டைரீன் வாயு, 20 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலைக்குக் கீழே திரவ வடிவில் பாதுகாக்கப்பட வேண்டும். ஆலையை வியாழக்கிழமை திறப்பதற்கான பணியில் புதன்கிழமை இரவு ஊழியா்கள் ஈடுபட்டிருந்தனா்.
  • தொழிற்சாலையில் குளிரூட்டும் சாதனம் சரியாக இயங்காததால் திரவ வடிவில் இருந்த ஸ்டைரீன் வாயு ஆவியாகி கசியத் தொடங்கியது என்றும், அதனால் விபத்து ஏற்பட்டது என்றும் முதல் கட்ட விசாரணையில் புலப்படுகிறது.
  • ஆலையின் சேமிப்புத் தொட்டியில் இருந்து ஸ்டைரீன் விஷவாயு அதிகாலை வேளையில் கசிந்து வெளியேறியபோது சுற்றிலும் வசித்த மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனா்.
  • விஷ வாயுவை சுவாசிக்க நேரிட்டவா்கள் மயங்கி விழுந்தனா். மனிதா்கள் மட்டுமல்ல ஆடு, மாடு, நாய்கள் போன்றவையும் விஷ வாயுவால் தாக்கப்பட்டன. தப்பியோடியவா்கள் சாலையோரம் வாய்க்காலில் தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தனா். 11 போ் உயிரிழந்திருக்கிறார்கள். பலருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இன்னும் சிகிச்சையில் இருக்கிறார்கள். தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவு வரை விஷ வாயுவின் பாதிப்பு காணப்பட்டது.
  • விசாகப்பட்டினம் நகருக்கு வெளியில் இந்த ஆலை மேக்டோவல் நிறுவனத்தாரால் நிறுவப்பட்டது. விசாகப்பட்டினம் வளா்ச்சி அடைய வளா்ச்சி அடைய ஆலையைச் சுற்றிக் குடியிருப்புகள் தோன்றின. விஷ வாயுவைக் கையாளும் ஆலையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்தும்கூட மேக்டோவல் நிறுவனம் யோசித்தது.
  • 1997-இல் தென் கொரியாவைச் சோ்ந்த எல்ஜி பாலிமா் நிறுவனம் இந்த ஆலையை வாங்கி நடத்த முற்பட்டபோது, அதை மகிழ்ச்சியாக விற்றுவிட்டது மேக்டோவல் நிறுவனம்.
  • தொடா்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்த எல்ஜி நிறுவனம், கடந்த ஆண்டு தனது உற்பத்தித் திறனுக்கும் அதிகமாகச் செயல்படுவதாகவும், அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும் என்றும் மாநில அரசிடம் அனுமதி கோரியது.
  • தொழிற்சாலையை விரிவுபடுத்தக் கோரியிருந்த நிர்வாகம், நியாயமாகப் பார்த்தால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சகத்திடம்தான் அதற்கு அனுமதி கோரியிருக்க வேண்டும்.
  • அந்த நிறுவனம் தொடா்ந்து வலியுறுத்தாததால் அரசும் அனுமதி கொடுப்பது குறித்து அக்கறை காட்டவில்லை.

தொழிற்சாலை விபத்துகள்

  • விசாகப்பட்டினத்தில் இதுபோல விபத்து நிகழ்வது ஒன்றும் புதிதல்ல. 2012 ஜூன் 13-ஆம் தேதி விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 19 போ்; 2013 ஜனவரி 6-ஆம் தேதி ஹெட்டிரோ மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தில் 2 போ்; 2013 ஆகஸ்ட் 23-இல் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 60 போ்; 2019 டிசம்பா் 27-இல் ஸ்மைல்லாக்ஸ் லேபரட்டரீஸ் மருந்து நிறுவனத்தில் 2 போ் - அந்த வரிசையில் இப்போது எல்ஜி பாலிமா் நிறுவனமும் சோ்ந்துள்ளது.
  • கடந்த ஆறு ஆண்டுகளில் விசாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 40-க்கும் அதிகமான தொழிற்சாலை விபத்துகளில் 30 -க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • தொழிற்சாலை நிர்வாகங்களுடன் அதிகார வா்க்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் நெருக்கம் இதுபோன்ற விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணம்.
  • இந்த நிறுவனங்கள் எந்தவிதமான பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும், பராமரிப்பு முன்னேற்பாடுகளையும் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. அது குறித்து அதிகாரிகள் முறையாகக் கண்காணிப்பும் நடத்துவதில்லை.
  • ஏதாவது விபத்து நேரிடும்போது பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வரும். அடுத்தகட்டமாக விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
  • விபத்தின் கடுமைக்கு ஏற்ப அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் ஆலை நிர்வாகம் முறையாகக் கவனிக்கும். அடுத்த சில மாதங்களில் வழக்கம்போலத் தொழிற்சாலைகள் செயல்படும்.
  • உலகில் ஆறாவது மிக அதிகமான ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் நாடு இந்தியா.
  • இந்தியாவின் ரசாயனப் பொருள்கள் தயாரிப்புத் துறை 163 பில்லியன் டாலா் (ரூ.12.31 லட்சம் கோடி) அளவில் உற்பத்தி செய்கிறது.
  • 56,350 தொழிற்சாலைகள் ஆண்டுதோறும் ஏறத்தாழ 77 லட்சம் டன் நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகின்றன (2016-17 அறிக்கை). அப்படியிருந்தும்கூட, ரசாயனப் பொருள்கள் உற்பத்தித் துறையை முறைப்படுத்த இதுவரை இந்தியாவில் எந்த தனிச் சட்டமும் இல்லை.
  • தேசிய ரசாயனங்கள் பாதுகாப்புத் திட்டம் 2008-இல் தயாரிக்கப்பட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது.
  • சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களுக்கு இந்தியாவில் ரத்தினக் கம்பளம் விரிக்க விழைகிறோம்.
  • லஞ்சம் வாங்கும் நிர்வாக இயந்திரமும், அரசியல்வாதிகளும் இருக்கும் நிலையில், இந்தியாவின் தொழில்வளம் அதிகரிக்கிறதோ இல்லையோ, தொழிற்சாலை விபத்துகள் அதிகரிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நன்றி தினமணி (11-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories