- சில வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் ஒரு கால்வாயின் தக்கவைப்புச் சுவர்கட்டுமானப் பணியின்போது, கால்வாய்அருகில் புதிதாகக் கட்டப்பட்டு, புதுமனை புகுவிழாவுக்காகக் காத்திருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து நொறுங்கிய காட்சி பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. அரசாங்கம் போதிய இழப்பீடு வழங்கக்கூடும். ஆனால், இந்தச் சம்பவம் தரும் பாடம் கட்டுமானப் பாதுகாப்பில் மிகமிக முக்கியமானது.
பின்னணி என்ன
- பெரும் மழைக் காலங்களில் புதுவையின் மைய நகர்ப் பகுதியை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதில் உப்பனாறு கால்வாயின் பங்கு அதிகம். சமீபத்தில், அந்தக் கால்வாயின் தக்கவைப்புச் சுவரைச் சீர்திருத்தும் பணி ஆட்டுப்பட்டிப் பகுதியில் தொடங்கப்பட்டிருந்தது. சுவருக்கான அடித்தளம் அமைக்க இயந்திரம் கொண்டு மண்ணைத் தோண்டியபோதுதான் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது.
- இது குறித்து வெவ்வேறு விதமான தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு சாரார், அடித்தளம் சரியாக அமைக்காமல் மூன்று மாடி கட்டியதைக் காரணமாகச் சொல்கின்றனர். வேறு சிலர், மண்தோண்டியதுதான் காரணம் என்கிறார்கள். “கட்டுமானப் பணி முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கால்வாய்ப் பணி தொடங்கியவுடன் ஏன் கட்டிடம் விழ வேண்டும்?” என்று வீட்டின் உரிமையாளர் எழுப்பும் கேள்வியில் அர்த்தமும் நியாயமும் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
- விபத்து நடந்த இடத்தை நான் பார்வையிட்டேன். சிறிய இடம், நானூறு சதுர அடி இருக்கலாம். முதல்தளம் பழையது. சுமார் மூன்றடி ஆழத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இரண்டு தளங்களைச் சமீபத்தில் கட்டியிருக்கிறார்கள்.
- இரும்புக் கம்பிகள், கான்கிரீட் ஆகியவற்றைப் பயன்படுத்தி இருந்தாலும், அது கல் கட்டிடம்போல் பாரம் தாங்கும் கட்டிடமாகத்தான் அமைக்கப்பட்டிருந்தது. பொறியாளர்களை வைத்துக் கட்டும் அளவுக்கு அவர்களுக்குப் பொருளாதார வசதியும் கிடையாது. விழிப்புணர்வும் இல்லை. வீட்டின் பின்பகுதி (கிழக்கு) கால்வாய்க் கரையின் மேல் அமைந்துள்ளது.
- கால்வாய் சீரமைக்கும் பணியில் இரண்டு தவறுகள் நிகழ்ந்துள்ளன. முதலாவதாக, கட்டிடத்துக்கு மிக அருகில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இரண்டாவது பெரும் தவறு, தோண்டப்பட்ட ஆழம் கட்டிடத்தின் அடித்தளத்தைத் தாண்டியுள்ளது. ஒரு கட்டிடத்தின் பாரம் அதன் அளவைவிட அதிகமான பரப்பளவில் வியாபித்திருக்கும்.
- ஆழம் அதிகமானால் பரப்பளவும் அதிகமாகும். அந்தக் கட்டிடம் சாய்வதற்கு இவை இரண்டுமே போதுமானவை. மூன்றாவதாக, பள்ளம் முழுதும் நீர் நிரம்பியது ஆபத்தை அதிகரித்தது.
-
- இவ்வளவு மோசமான சூழலிலும், அந்தக் கட்டிடம் சாய்வதற்கு முன் சிறிய எச்சரிக்கை தந்துள்ளது. அதற்குக் காரணம், அந்தக் கட்டிடத்தின் ஒரு சாதகமான அமைப்புதான். மேல்தளங்கள், தளங்கள் சுமார் இரண்டடி அளவுக்கு மேற்குப் பக்கம் நீட்டிக்கொண்டிருந்தன.
- கட்டிடம் கிழக்குப் பக்கம் சாய்கின்ற நேரத்தைத் தாமதிக்க அந்த அமைப்பு ஏதுவானது. இல்லையேல் உயிர்ச்சேதம்கூட ஏற்பட்டிருக்கலாம்.
எப்படித் தவிர்த்திருக்கலாம்
- இப்படிப்பட்ட விபத்தைத் தவிர்க்க இரண்டு பொறியியல் நுட்பங்கள் உள்ளன. முதலாவதாக, இரும்புத் தகடுகளைக் கட்டிடத்தை ஒட்டி ஆழமாகச் சொருக வேண்டும். அது பள்ளத்தின் ஆழத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.
- பணி முடிந்து சுவருக்கும் கட்டிடத்துக்கும் இடையே மண்ணை அடர்த்தியாக நிரப்பிய பிறகு இந்தத் தகடுகளை உருவிவிடலாம். இப்பணியில் செலவு சற்றே அதிகம். ஒப்பந்தக்காரர் போதுமான அனுபவம், பொருளாதார வசதி உள்ளவராக இருக்க வேண்டும்.
- இரண்டாவது நுட்பம் சுலபமானது, எளிமையானது. சுமார் பத்தடி நீளத்துக்கு மட்டுமே முதலில் பள்ளம் தோண்ட வேண்டும். தக்கவைப்புச் சுவரைக் கட்டி அடர்த்தியாக மண் நிரப்ப வேண்டும். பிறகு, மேற்கொண்டு பள்ளம் தோண்டலாம்.
- இம்முறையைப் பின்பற்றியிருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம். நிலைமையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள இது உதவியாக இருந்திருக்கும். இதை விடுத்து நூறடி நீளத்துக்கும் மேலாகத் தொடர்ந்து பள்ளம் தோண்டியது தவறு.
- அக்கறை அவசியம்: கட்டுமானப் பணியில் பாதுகாப்பு என்பது மிக நுட்பமான அம்சம். சீரிய பொறியியல் திறன் மட்டுமல்ல, மக்கள் மீதான அன்பும் அக்கறையும் இப்பணியில் அவசியமானவை. பெரும் கட்டுமானப் பணியிடங்களில் பாதுகாப்பு அம்சங்கள் உச்ச நிலையில் அமைய வேண்டும்.
- நோயாளி குணமடைய மருத்துவம் பாதி, அவரின் நம்பிக்கை மீதி என்பதுபோல, பொறியாளரிடம் தொழில்நுட்பம் பாதி, பொதுமக்கள் மீதான அக்கறைமீதி என இருந்தால் அவர்கள் பணி சிறக்கும்.
- இளநிலைப் பொறியியல் பாடத்திட்டத்தில் கட்டுமானப் பாதுகாப்பு பற்றிய பாடங்களைச் சேர்க்கலாம். இந்தியத் தரநிலைப் பணியகம் நிறைய வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது. சமூக ஈடுபாடு, சட்ட நுணுக்க அம்சங்களையும் பாடத்திட்டத்தில் சேர்த்தல் அவசியம்.
- பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய அடிப்படை வழிகாட்டுதல்கள் மக்களுக்கு அவசியம். அரசாங்கம் குடிசைவாழ் மக்களுக்கு இலவசக் கட்டிட ஆலோசனை வழங்கவேண்டும். இப்படியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டால்தான் புதுவையில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதங்களை எதிர்காலத்தில் தவிர்க்கலாம்!
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 02 – 2024)