- தமிழர்கள் தமிழை உணர்வுபூர்வமாகக் கருதும் அதே வேளையில், அறிவியல் மனப்பான்மையுடனும் அதை அணுகுகிறார்கள். அந்த அணுகுமுறையே அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, தமிழுக்கும் புதுக் குருதி பாய்ச்சிக் கொண்டேயிருக்கிறது. இந்தப் பணியானது இடைவிடாது தொடர் சங்கிலியாக மேற்கொள்ளப்படுவதாலேயே தொழில்நுட்பப் பயணத்தில் தமிழ் தொய்வில்லாமல் பயணப்படுகிறது.
- எண்ணையும் எழுத்தையும் கண்ணெனப் போற்றினார் ஔவை. எழுத்து - மொழி தொடர்பானது; எண் - கணக்கு தொடர்பானது. இந்த இரண்டிலும் தமிழர்கள் வல்லமை பெற்றிருந்தார்கள். ‘தமிழ் எண் கணித முறை பொ.ஆ.மு. (கி.மு.) 3000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார் வளையாம்பட்டு கு.வெங்கடாசலம் ‘தமிழர் கணக்கியல்’ நூலில்.
- தமிழர்களின் மொழி அறிவும் கணித அறிவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வளர்ந்துள்ளன. அந்த வகையில், தித்திக்கும் தீந்தமிழ் கணினிக்குள் தடம்பதித்த வேளையில், எண்ணும் எழுத்தும் இணைந்து கணித்தமிழாய்க் கனிந்தது.
ஆற்றல்மிகு அறிவாயுதம் மொழி
- மொழியின் நுண்ணறிவும் அறிவியலின் நுட்பமும் சந்திக்கும் புள்ளியில் ஒரு பெரும் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்கான ஆற்றல் குவிந்துள்ளது. அந்த ஆற்றலை ஆக்கபூர்வமான வகையில் கையாள்வதற்காக மொழியியல் அறிஞர்களும் ஆய்வறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆற அமர்ந்து உரையாட வேண்டியுள்ளது.
- அந்த உரையாடல்வழியே உருத்திரண்டு வரும் ஆலோசனைகளை ஒன்றுதிரட்டிக்கொள்ளும் பொருட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிகழ்வே ‘பன்னாட்டுக் கணித்தமிழ் 2024 மாநாடு’.
- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 8 தொடங்கி 10 வரை இம்மாநாடு நடைபெறுகிறது. மொழியானது தகவல்தொடர்புக் கருவி என்பதைக் கடந்து தனிமனிதர் தம் வருமானத்தைப் பெருக்கும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அனுகூலத்தையும் கொண்டுள்ள ஆற்றல்மிகு அறிவாயுதம்.
- இந்தக் கருத்தோட்டத்தைக் குறித்துச் சிந்திப்பதற்காகவே தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முதல் முறையாக இம்மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது. வேறெந்த மாநிலமும் மொழிக்காக இப்படியொரு மாநாட்டை நடத்தவில்லை என்பதே மொழிமீது தமிழர் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தும்.
புலம்பெயர் அறிவு
- அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இந்திய மாநிலங்களிலிருந்தும், கூகிள், மைக்ரோசாஃப்ட்,லிங்க்டுஇன், டெக் மகேந்திரா, ஏஐ சிங்கப்பூர் முதலான நிறுவனங்களிலிருந்தும் மொழியியலாளர்களும் வல்லுநர்களும் வருகை தருகிறார்கள். கணித்தமிழுக்காகத் தமது அறிவையும் ஆற்றலையும்செலவிட்ட ஆளுமைகளான வா.செ.குழந்தைசாமி, நா.கோவிந்தசாமி, மு.ஆனந்தகிருஷ்ணன், மா.ஆண்டோபீட்டர் ஆகிய நால்வரின் பெயர்களில் இம்மாநாட்டில் நிகழ்வரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
- அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பேராசிரியர் வாசு அரங்கநாதன், ‘தமிழ் பேசும் இயந்திரத்தை உருவாக்குவோம்’ என்னும் தலைப்பில் ஒரு பயிலரங்கை நடத்தவிருக்கிறார். இந்தப் பட்டறையில், தமிழ் பேசும் இயந்திரம் எப்படிச் செயல்படும் என்னும் முழு விளக்கத்தையும் அவர் அளிக்க உள்ளார்.
- அதேபோல், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சாட்ஜிபிடியில் தமிழைச் செழுமையான வகையில் பயன்படுத்துவது எப்படி என்ற விளக்க உரையை அளிக்கவிருக்கிறார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நீண்ட காலத் தொடர்பைக் கொண்டுள்ளவரும், சென்னையில் செயல்பட்டுவரும் ‘லிட்டில் ஃபீட் சர்வீசஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலருமான தி.ந.ச.வெங்கட்ரங்கன்.
புத்தொழில் வாய்ப்புகள்
- கணித்தமிழின் 25 ஆண்டு காலப் பயணத்தையும், வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகளையும் விவாதிக்கும் பொருட்டு ஐலேசா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான ஆழி செந்தில்நாதன் தலைமையில் ஒரு குழு விவாதம் நடைபெறவிருக்கிறது.
- இதில் கணித்தமிழ்த் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட கல்யாணசுந்தரம், மணி மணிவண்ணன், வெங்கட்ரங்கன், முத்து நெடுமாறன் ஆகியோர் பங்குகொள்கிறார்கள். திருக்குறளும் தொழில்நுட்பமும் என்கிற பொருளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரை ஒன்றை ‘கிஸ்ஃப்ளோ’ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் வழங்குகிறார்.
- தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்கத்தின் தலைமைச் செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் மொழித் தொழில்நுட்பங்களில் புதிய தொழில்வாய்ப்புகள் குறித்த உரை ஒன்றை நிகழ்த்துகிறார். மொழியைத் தொழில்நுட்பத் தளத்தில் உலகத் தரத்துக்குக் கொண்டுசெல்வதனால் ஏற்படக்கூடிய நல்விளைவுகளையும் அவற்றின் வழியே கிடைக்கவுள்ள நற்பயன்களையும் அனைவருக்கும் விரிவாகவும் விளக்கமாகவும் வழங்கக்கூடிய வகையிலேயே மாநாட்டின் நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- மொழி நுட்பங்கள் பற்றிய அறிவை வெளிப்படுத்திய நிரலாக்கப் போட்டிகள் இம்மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்டன. இவற்றில் கலந்துகொண்ட இளந்தலைமுறைத் திறமைசாலிகள் பலர் அடையாளமும் காணப்பட்டுள்ளனர். அவர்களது நிரலாக்கங்களில் சில செய்முறை விளக்கமாகச் செய்துகாட்டப்பட உள்ளன. சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காற்றில் தமிழில் எழுதும் புதுமையான வழிமுறையைக் கண்டறிந்துள்ளார். அவரது நிரலாக்கம் வல்லுநர் குழுவினரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
காற்றில் எழுதலாம் தமிழ்
- இதுவரை தமிழைத் தட்டச்சு செய்து எழுதுகிறோம்; பேசி எழுதுகிறோம், எழுத்துணரி வழியே திறன்பேசித் திரையில் கையால் எழுதி தமிழைக் கொண்டுவருகிறோம். அந்த வரிசையில் தற்போது அந்த இளைஞர் கண்டறிந்துள்ள தொழில்நுட்பமானது, காற்றில் என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே கணினியில் உள்ளீடு செய்துகொள்ள உதவுகிறது.
- பார்வையற்றோருக்கான தமிழ் எழுத்தை உருவாக்கித் தரும் நிரலாக்கத்தை மற்றொரு இளைஞர் உருவாக்கியுள்ளார். எந்தத் தமிழ் எழுத்தை அளித்தாலும் அவர் உருவாக்கியுள்ள நிரலாக்கத்தின் வழியே அந்த எழுத்தை அப்படியே பார்வையற்றோர் வாசிக்கும் வகையிலான பிரெய்ல் எழுத்தாக மாற்றிக்கொள்ள இயலும். இது பெரிய அளவிலான பயன்பாட்டுக்கு வரும்போது, தமிழ்ப் படைப்புகளை யாருடைய துணையுமின்றி, பார்வையற்றோர் வாசித்து அறிந்துகொள்ள இயலும்.
- ஓலைச்சுவடிகளைத் தமிழ் எழுத்தாக மாற்றியமைக்க உதவும் கருவி ஒன்றின் நிரலாக்கத்தையும் இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். வெறும் ஓலைச்சுவடியாக முடங்கிக் கிடக்கும் வரலாற்றுத் தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ளும் எழுத்தாக மாற்றிக்கொள்ள இது உதவும். இந்த நிரலாக்கங்கள் புதிய தயாரிப்புகளாக உருவாகும்போது, அவற்றால் தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் பயன் கிடைக்கும்.
- இந்த மாநாடானது நிரலாக்கத்தை உருவாக்கும் அறிவைப் புத்தொழில் நிறுவனங்கள் வாயிலாகப் புதிய கருவிகளாகத் தயாரிப்புப் பொருள்களாக வளர்த்தெடுக்கக் கைகொடுக்கும். மொழி அறிவைத் தொழில்நுட்பக் கருவிகளாக மாற்றுவதன் மூலம் பொருளாதாரமும் வளரும், சமூகமும் பயன்பெறும். செயற்கை நுண்ணறிவுக் காலத்தின் ஒரு பெரும் பாய்ச்சலுக்குத் தமிழ் மொழியைத் தயார்ப்படுத்தும் பணியைத் தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இந்தப் பணி நிச்சயம் வெற்றியை ஈட்டித் தரும்!
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 02 – 2024)