TNPSC Thervupettagam

கண்களைத் திறக்கும் அறிவியல்காட்சிகள்

April 7 , 2023 656 days 380 0
  • அது ஒரு கிராமம். பள்ளிக்கூடத்திலிருந்து ஓர் அறிவியல்காட்சியைத் திறந்துவைக்க அழைப்பு வருகிறது. நிகழ்ச்சிக்குத் தயாராக சிறிது நேரம் இருக்க குழந்தைகளிடம் உரையாடினேன்.
  • ஒரு மாணவன் கையில் ஒரு பூனைக்குட்டியை வைத்திருந்தான். “ஏன் இப்படி பூனைக்குட்டியை வைத்திருக்கிறாய்; கடிக்காதா?” என்றேன். “இல்லை சார், இது என்னை ஒன்னும் செய்யாது. வீட்டில் கொண்டுவிட்டுவிட்டு வந்தாலும் திரும்ப என்னைத் தேடி இங்கு வந்துவிடும். அதுவும் ரோட்டைக் கிராஸ் பண்ணி வரணும், ஏதாவது லாரி, கார் ஏறிடும் சார். நான் போகும்போதே கூட்டிக்கிட்டுப் போயிக்கிறேன்” என்றான். மற்றொரு மாணவி வீட்டில் நான்கைந்து மாடுகள் இருப்பதாகவும் அதில் ஒன்றிரண்டு மட்டுமே பால் கறப்பதாகவும் கூறினாள். மற்றொரு மாணவன் தங்கள் வீட்டிலிருந்த கோழிக் குஞ்சுகளில் பலவற்றை நாய்கள் கடித்துத் தின்று விட்டதாகக் கூறினான்.
  • இப்படியான உரையாடலின் இடையே நேரம் கடக்கவும். அறிவியல்காட்சி திறந்து உள்ளே நுழைந்தால் கண்கள் அகல விரிய விரிய வண்ணமயமான படைப்புகளும், இயங்கும் மாதிரிகளுமாக இருந்தன.
  • பாம்பன் பாலத்தை, விண்ணில் பறக்கும் ராக்கெட்டை, மின் தூக்கி, எனப் பல்வேறு வடிவங்களையும் இயங்கும் மாதிரிகளாக வடிவமைத்திருந்தனர். அது ஆங்கில வழியில் இயங்கும் பள்ளியாதலால் மாணவர்கள் அனைவருமே ஆங்கில மொழியிலேயே தங்கள் விளக்கங்களை அளித்தனர். ஒரு சின்ன தடுமாற்றம்கூட இல்லை. இவர்கள் மனப்பாடம் செய்துதான் சொன்னார்கள் எனவும் எனக்குத் தெரியும்.

பள்ளி மாணவர்களின் படைப்புகள்

  • இன்னொரு தொடக்கப் பள்ளியிலும் இருந்து இப்படிப்பட்ட அழைப்பு வந்தது.  நான் நுழையும்போதே ஊரே திரண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த வட்டாரத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரும் குறித்த நேரத்தில் வருகை தந்திருந்தனர். உள்ளே நுழைகிறோம்.
  • ஒரு மாணவன் “சார் இங்க பாருங்க, இது கிளாஸ் இதில மஞ்சள் பொடியைப் போடறேன் மஞ்சாளாவுதா? அடுத்து பாருங்க சுண்ணாம்பைப் போடறேன் சிவப்பாவதா? அடுத்து பாருங்க எலுமிச்சம் பழத்தைப் பிழியறேன் மறுபடியும் மஞ்சாளாவுதா?” எனத் தங்குதடையின்றி விளக்கம் சொல்லிக்கொண்டே செல்கிறான். நான் ஒன்றும் தெரியாததுபோல் கவனிக்க அவனது கண்களில் கண்டுபிடிப்பின் உற்சாகம் பெருகுகிறது.
  • இன்னொரு மாணவி ஏடிஎம் போன்ற அட்டையைக் கொடுத்து ஒரு பெட்டி போன்ற அமைப்பில் செருகச் சொல்கிறாள். நாமும் செருக சாக்லேட் வந்து விழுகிறது. இதற்கு அவள் ‘ஆட்டோமேட்டிக் சாக்லேட் வெண்டிங் மெஷின்’ (Automatic Chocolate Vending Machine - ACM) என்று பெயர் வைத்திருந்ததாக நினைவு.
  • இன்னொரு சிறுமி இயந்திர மனிதனை வடிவமைத்து அசத்தியிருந்தாள். இப்படி நமது கண்கள் விரிய விரிய அவர்களது கண்டுபிடிப்புகள் தென்பட்டன. எவ்விதத் தயக்கமும் இன்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்த விதம் அப்பள்ளியில் குழந்தை நேயத்தை விளக்கியது.
  • முதலில் பார்த்த பள்ளி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், கீழ்க்கரணை தொடக்கப் பள்ளி அடுத்து பார்த்தது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், கல்லாங்குத்து தொடக்கப் பள்ளி. இரண்டு கிராமங்களிலுள்ள மாணவர்களின் பெரும்பாலான பெற்றோரும் ஒத்துழைத்து வடிவமைத்திருந்தனர். மாணவர்கள் விவரிக்க விவரிக்க பெற்றோர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேது?
  • நாங்கள், 2000களில் பணியாற்றிய வெங்கடேசபுரம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல்காட்சி நடத்த முயற்சித்தபோதும் அக்கிராம மக்கள் அளித்த பங்களிப்பு அலாதியானது. அப்போதெல்லாம் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்தான் அறிவியல்காட்சிகள் நடக்கும். நடுநிலைப் பள்ளியில் நடப்பதைக் கேள்விபட்ட அப்போதைய களியாம்பூண்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவன முதல்வர் சசிகலா தங்கள் பயிற்சி மாணவர்களுடன் வந்திருந்து பார்வையிட்டு சிறப்பித்தார். 23 ஆண்டுகளில் மெல்ல தொடக்கப் பள்ளிகளில் ஆங்காங்கே நடைபெறுவது பெருமகிழ்வு அளிக்கிறது. இதற்கு முன்பும் சில தொடக்கப் பள்ளிகளில் நடந்திருக்கலாம். அவர்களுக்கும் பாராட்டுகள்.

மாணவர்களின் கலைத் திறன்

  • இந்த இணைய யுகத்தில் மாணவர்களின் அறிவு, கல்வி வளர்ச்சி அடுத்த பரிமாணத்தை எட்டியுள்ளதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளுக்கும் இந்த மாணவர்களின் பாடநூல்களுக்கும் பெரிதும் தொடர்பிருக்க வாய்ப்பு இல்லை. இவை அனைத்தையும் இவர்கள் யூடியூப் போன்ற தளங்களில் கற்றிருக்கவும் வாய்ப்புள்ளது. ஊரில், வீட்டில் இருக்கும் அக்கா, அண்ணன்கள் உதவி இருக்கலாம். இந்த நிலையில் அறிவைப் பெறும் இடமாக பள்ளிகள் மட்டுமிருந்த இடம் மாறி அனைத்து இடங்களிலும் அறிவைப் பெறும் சூழல் அதிகரித்துள்ளது.
  • இந்த வாய்ப்பை எந்த வகையான கல்விக்கு மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் முன்னேற்றமும் பின்னடைவும் காணப்படப்போகிறது. அந்த வகையில் மாணவர்களின் சுய கற்றலுக்கும் பகிர்வுக்கு வாய்ப்பு தரும் இடங்களாக பள்ளிகள் மேலும் பரிணமிக்க வேண்டும். அண்மையில் தமிழ்நாடு அரசின் கலைத் திருவிழாவில் எண்ணற்ற மாணவர்களின் கலைத் திறன் வெளிப்பட்டது. மாணவர்கள் தயாராக உள்ளனர். அவர்களின் கற்றல் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் பள்ளியின் முறையும் ஆசிரியர்களின் திறன் வளர்ப்பும் தேவையாக உள்ளது.
  • சில மாதங்களுக்கு முன்னர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில் கலந்துரையாடினேன். “யார் யாருக்கெல்லம் சமைக்கத் தெரியும்?” என்ற கேள்வியை எழுப்பினேன். பலரும் கையை உயர்த்தினர். பின்னர் “யார் யாருக்கெல்லாம் பாடம் நடத்தத் தெரியும்?” என்று கேட்டேன். அனைவருமே கைகளை உயர்த்தினர். “நல்லது! எப்படி அரசு கொடுக்கிற புத்தகத்தைப் பார்த்துப் பாடம் நடத்துகிறோமே, அதுபோலத்தானே சமைப்பவர்கள் சமையல் குறிப்பைப் பார்த்து சமைக்கிறீர்கள்?” என்றேன். சலசலப்பு ஏற்பட்டது.
  • அமைதியானதும் கேட்டேன்.
  • “எங்கும் முறையாக பயிற்சி பெறாத சமையலுக்கே சமையல் குறிப்பு தேவைப்படாதபோது ஆசிரியர்களுக்கான பயிற்சியும் பெற்று பல்லாண்டு பணி அனுபவமுள்ள நமக்கு பாட நூல்கள் தேவை என்பது சரியா? வெறும் கூட்டல் கழித்தல் கணக்குகள் அடங்கிய, மாணவர்கள் அடைய வேண்டிய திறன்கள் அடங்கியவற்றின் தொகுப்புதானே பாட நூல்கள். அவற்றை யாரோ ஒருவர் தயாரித்து அனுப்ப தினம் தினம் நடத்துகிறோமே!
  • இதிலிருந்து மீண்டு எங்களுக்கு கலைத் திட்டத்தினை மட்டும் அளியுங்கள்; மாணவர்களின் அடைய வேண்டிய திறன்களுக்கான செயல்பாடுகளை நாங்களே வடிவமைத்துக்கொள்கிறோம். இப்படிச் சொல்லும் அளவிற்கான அறிவுசார் செருக்கு எப்போது நமக்கு வரப்போகிறது?”
  • பாடப் புத்தகங்கள் மாணவர்களின் கற்றலுக்கான துணைக் கருவிகளில் ஒன்று அப்படித்தானே என்று விளக்கிப் பேசிவிட்டு வந்தேன். இதனிடையே நீட் நுழைவுத் தேர்வு என்ற பேச்சும் வந்தது. அவற்றில் தேர்ச்சி பெற வேண்டுமானால் துவக்க நிலையிலிருந்தே தயாரிப்புகள் வேண்டும் என்ற வாதங்களும் வந்தன.

சுதந்திரமும் சுயசார்பும்

  • இப்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சில குழந்தைகள் சந்திக்கப்போகும் தேர்வுகளுக்காக ஆரம்ப நிலையிலிருந்தே குழந்தைகளை வாட்டுவதா? அல்லது அனைத்து குழந்தைகளும் அதுபோன்ற தேர்வுகளை சந்தித்தே தீர வேண்டும் என்று அனைத்துக் குழந்தைகளின் இயல்பையும் ஒரே மாதிரியாக்குவதா? இதுவே இன்றைக்கு இருக்கும் கல்விமுறையின் முக்கிய சவால்களில் ஒன்று.
  • யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. அவரவர்களின் பார்வையில் அவரவர்களுக்கு சரியானதை அவரவர் தேர்வுசெய்யட்டும். ஆனால், குழந்தைகள் பயமின்றி, கண்டுபிடிப்பூக்கத்துடன் செய்து மகிழ்ச்சி பெறும் நிறுவனங்களாக பள்ளிகள் அமைய வேண்டும். அதற்கு உதவும் வகையில் பெற்றோர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். குழந்தைகள் சுயசார்பும் சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டுமானால் அதற்கான முதல் படி ஆசிரியர்களின் சுதந்திரமும் சுயசார்பும் அதிகரிக்கப்பட வேண்டும். பாடநூல் தேர்விலிருந்து, கற்பித்தல் முறையிலிருந்து அனைத்திலும் சுதந்திரம் வேண்டும்.
  • அரசிடமிருந்து வழிகாட்டும் குறிப்புகளை மட்டும் பெற்று குழந்தைகள் அவரவர்களின் வேகத்தில் பரிணமிக்க வாய்ப்புகள் தரப்பட வேண்டும். ஆனால், பெற்றோரிய சவால்களான மருத்துவம், ஐஏஎஸ் கனவுகளுக்கு இவை துணைசெய்யுமா என்றால் உறுதியாக சொல்ல இயலாது. எனவே, அரசுக்கும் பெற்றோரிய சவால்களை ஈடுசெய்யும் வகையிலான செயல்பாட்டில் ஈடுபடும் நிபந்தனை இருக்கவே செய்கிறது. இதுபற்றிய விவாதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை இவற்றை உள்வாங்க இது உதவும்.
  • பெற்றோர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்துகொண்டே பூனைக்குட்டியின் மீதும் அன்பு செலுத்துவதே குழந்தைகளின் இயல்பு. அந்தக் குழந்தைமை இயல்பு சிதையாமல் நாம் பார்த்துக்கொள்வது  அவசியம்!

நன்றி: அருஞ்சொல் (07 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories