TNPSC Thervupettagam

கண்களைப் புதைக்காமல் விதைப்போம்

September 9 , 2023 359 days 233 0
  • விஜய், சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும்திரைப்படத்தை நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் தொலைக்காட்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. 90களில் வெளிவந்த இப்படம் அதன் திரைக்கதைக்காகவே மக்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டதாக நினைவு.
  • படத்தில் பரவலாக இருந்த மருத்துவ முரண்களை அந்தக் காலகட்டத்தில் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போதும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அவ்வப் போது ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தைக் காணும்போது கண் தானம் குறித்த தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுமோ என்கிற எண்ணம் எழுகிறது.
  • கதைப்படி ஆய்வகத்தில் வேதிப்பொருள் பாட்டில் உடைந்து அதிலிருந்து வெளிப்பட்ட வாயு சிம்ரனின் கண்ணில் பட்டு, அவரது பார்வை பறிபோய்விடுகிறது. சிம்ரனின் கண்ணைப் பரிசோதித்த மருத்துவர், கண்ணின் பாப்பாஅதாவது Pupil பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறுவைசிகிச்சை செய்தாலும் பார்வை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் சொல்வார். அவர் சொல்ல வந்தது கருவிழியை (Cornea). ஆனால், கண்ணின் பாப்பாஎன்று தவறுதலாகப் படத்தில் குறிப்பிடுவார்.
  • அடுத்து கண் வங்கி மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சிம்ரனின் கண்ணைப் பரிசோதித்துவிட்டு அறுவைசிகிச்சைக்கு எல்லாம் சரியாக இருப்பதாகவும் அறுவைசிகிச்சை செய்தால் பார்வை கிடைத்துவிடும் என்றும் சொல்வார். இங்கே கண் வங்கி என்றாலே, அது கருவிழி மாற்று அறுவைசிகிச்சை (Corneal Transplantation) தொடர்புடையதுதான்.

கதையின் முரண்கள்

முரண் 1

  • திரைப்படத்தில் ஆய்வகத்தில் வேதிப்பொருள் பாட்டில் உடைந்து, அதிலிருந்து வாயு வெளிப்பட்டு, சிம்ரன் கண்ணின் பாப்பா (Pupil) பாதிக்கப்பட்டதாக மருத்துவர் கூறுவதாக உள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டது கண்ணின் கருவிழி (Cornea).

முரண் 2

  • திரைப்படத்தில் சிம்ரனுக்குப் பார்வை போன பிறகு, அவரது கண்ணின் கருவிழி நல்ல நிலையில் இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது.

முரண் 3

  • கருவிழி மாற்று அறுவைசிகிச்சை, காத்திருப்போர் பட்டியலின்படி முன்னுரிமை அடிப்படையில் தான் செய்யப்படும். படத்தில் காட்டப்படுவதுபோல் உடனே செய்யப் படுவதில்லை.

முரண் 4

  • கதைப்படி விஜய்யின் தாய், தன் கண்களை இறப்புக்குப் பின் பார்வை இல்லாத சிம்ரனுக்குக் கொடுத்துப் பார்வை கிடைக்க வழிசெய்யும்படி சொல்லிவிட்டு இறந்துபோகிறார். அதன்படி அவரது கண்கள் சிம்ரனுக்குப் பொருத்தப்படுகின்றன.
  • ஒருவருடைய இறப்புக்குப் பின் அவருடைய கண்களைக் குறிப்பிட்ட நபருக்குத்தான் பொருத்த வேண்டும் என்று சொல்ல முடியாது. மேலும், கண் தானம் மூலம் பெறப்பட்ட கண்கள் யாருக்குப் பொருத்தப்படுகின்றன என்பது பொதுவெளியில் சொல்லப்படுவதும் இல்லை. அது கண் வங்கியின் விதிமுறையாகும்.

முரண் 5

  • கருவிழி மாற்று அறுவைசிகிச்சை இலவசமாகச் செய்யப்படும் ஓர் அறுவைசிகிச்சை. பொதுவாகப் பணம் பெறப்படுவதில்லை. ஆனால், படத்தில் 42,000 ரூபாய் கட்டணம் சொல்லப் படுகிறது.
  • சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அவ்வாறு இருக்கும்போது மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுச் செய்திகளைச்சொல்லும்போது கூடுதல் கவனம் தேவை. திரைப்படத்தில் சொல்லும் செய்திகளில் சரியான தகவல்களைச் சொல்லலாமே. அப்போதுதானே பொது மக்களிடையே சரியானபுரிதல் ஏற்படும்.

ரத்த தானம் போன்றதல்ல கண் தானம்

  • நடிகர்கள் ரஜினி உள்படப் பல நடிகர்கள் கண் தானம் செய்கிறார்கள் என்கிற செய்தியை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதைவிட வேடிக்கை ஒருவரே வெவ்வேறு நிகழ்வுகளில் மீண்டும் மீண்டும் கண் தானம் செய்துள்ளேன் என்று கூறுவதுதான். அதைப் பார்த்து உடனே பலரும் நானும் கண் தானம் செய்கிறேன் என்று செய்வார்கள். ரத்த தானம் போன்றது அல்ல கண் தானம் என்பதைத் திரும்ப திரும்ப நினைவூட்ட வேண்டியிருக்கிறது. கண் தானம் என்பது ஒருவர் இறந்த பிறகு செய்யும் தானமாகும்.

கண் தானம் செய்ய விருப்பமா?  

  • கண் தானம் செய்ய விருப்பம் உள்ளோர் தங்கள் வீட்டின் முன் அறையில்/வரவேற்பு அறையில் எங்கள் குடும்பம் கண் தானம் செய்ய விருப்பமுள்ள குடும்பம்என்கிற செய்தியை ஒரு தாளில் கண் வங்கி தொலைபேசி எண்ணுடன் எழுதி ஒட்டிவிட வேண்டும். இந்தத் தாள் வீட்டுக்கு வருவோர் போவோர் என அனைவரது பார்வையிலும் படும்படி இருக்க வேண்டும். மற்றவர்களிடமும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வீட்டில் யாரேனும் இறக்க நேர்ந்தால் அந்த நேரத்தில் கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தது நினைவுகூரப்பட்டு தானமாகக் கிடைக்கப் பயனுள்ளதாக இருக்கும். வெறுமனே படிவத்தை மட்டும் பூர்த்திசெய்து நானும் கண் தானம் செய்திருக்கிறேன்என்று சொல்வதால் எந்தப் பயனுமில்லை.
  • மேலும், பிறவியில் பார்வை இருந்து திடீரென பாதியில் பார்வை இழந்துபோவது மிகவும் கொடுமையானது. கருவிழிப் பார்வையிழப்புக்கு (Corneal Blindness) கண்தானம் மூலம் பார்வை கொடுக்க முடியும் என்பது மகிழ்ச்சியான விஷயம்.
  • கண் தானம் குடும்ப நிகழ்வாக மாற வேண்டும். ஒருவர் இறந்த பிறகு கண் தான வங்கிக்குச் சொல்லியாச்சா என்று கேட்கும் நிலை வருங்காலத்தில் ஏற்பட வேண்டும்.

கண் வங்கி மேம்பட வேண்டும்

  • கண் தானம் செய்ய ஆர்வம் இருப்பவர் களுக்கு அதற்கான வழிமுறைகள் எளிமையாகக் கிடைப்பதில்லை. கண் வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டியதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். 108 ஆம்புலன்ஸ் சேவை போன்று ஒரு பொதுவான தொலைபேசி எண் கண் தானத்துக்கு என்று இருந்தால், கண் தான அழைப்புகளை ஒருங்கிணைத்துத் தானங்களை விரைவாக முழுமையாகப் பெறமுடியும். கண் தான இரு வார தேசிய விழாவில் அரசு இதை நிறைவேற்றுமா?

அடிக்கடி எழும் கேள்விகள்

  • சர்க்கரை நோய், கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள், கண்களைத் தானம் செய்யலாமா? - கண் தானம் செய்யலாம். ஆனால், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட கண்கள் மற்றவர்களுக்குப் பொருத்தப்படுவதில்லை. ஆராய்ச்சிக்குப் பயன்படும்.

எனக்குக் கண் தானம் செய்ய மனப்பூர்வமான சம்மதம். ஆனால், உயிருடன் இருக்கும்போது தானம் செய்ய முடியுமா?

  • ஒருவர் இறந்த பிறகுதான் கண் தானம் செய்ய முடியும்.

கண் தானம் செய்ய எங்களுக்கு விருப்பம். கண் தான படிவம் நிரப்பிக் கொடுக்க வேண்டுமானால் யாரை அணுக வேண்டும்?

  • உங்கள் ஊர் அரசு தலைமை மருத்துவமனை கண் பிரிவுத் துறைத் தலைவர் அல்லது கண் வங்கியை அணுகலாம்.

கண் தானம் குறித்துக் கட்டாயம் முன்னரே உயில் எழுதி வைக்க வேண்டுமா?

  • தேவையில்லை. ஒருவர் இறந்த பிறகு அவருடைய நெருங்கிய உறவினர்கள் சம்மதித்தாலே கண்களைத் தானமாகப் பெற முடியும்.

கண் தானத்துக்கு கண் முழுமையாக அகற்றப்படுமா?  

  • இல்லை. பாதிக்கப்பட்ட கருவிழியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு இறந்தவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கண்ணின் கருவிழியைப் பொருத்துவார்கள். இறந்தவர் உடலிருந்து கண்கள் முழுமையாக நீக்கப்படாது.

பொது இடங்களில், சாலைகளில் பார்வை இல்லாதவர்கள் பலரைப் பார்க்கிறோம். அவர்கள் எல்லாருக்கும் கண் தானம் மூலம் பார்வை கொடுக்க முடியுமா?

  • இல்லை. பார்வை இழப்புக்கு காடராக்ட், கிளாகோமா, விழித்திரை பிரச்சினை, பார்வை நரம்புப் பிரச்சினை, கருவிழி தொடர்பான பார்வையிழப்பு எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இதில் கருவிழி பார்வையிழப்புக்கு (Corneal Blindness) மட்டுமே கண் தானம் மூலம் பார்வை கொடுக்க இயலும்.

சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?

  • கருவிழி மாற்று அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப் படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories