TNPSC Thervupettagam

கண்காணிப்பு அவசியம்

December 22 , 2023 402 days 336 0
  • அண்டை நாடான மியான்மரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பல்வேறு இனக் குழுக்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளன. மியான்மரின் வடக்கு எல்லையில் உள்ள ஷான் மாகாணத்தில், அராக்கன் ராணுவம் (ஏஏ), மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணி ராணுவம் (எம்என்டிஏஏ), டாங் தேசிய விடுதலை ராணுவம் (டிஎன்எல்ஏ) ஆகியவை கைகோத்து கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி முதல் நடத்திய தாக்குதல்களில் நாம்சன், மூஸே உள்ளிட்ட 7 நகரங்களையும் 422 ராணுவ நிலைகளையும் கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளன.
  • மியான்மா் ராணுவமும், இந்த மூன்று அமைப்புகள் கொண்டமூன்று சகோதரத்துவ கூட்டணியும் தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக சீனா கடந்த வியாழக்கிழமை அறிவித்த நிலையில், நாம்சன் நகரத்தை இந்தக் கூட்டணி வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளது. ஷான் மாகாணம் சீன எல்லையில் உள்ளதால், அந்த நாட்டுடனான வா்த்தகப் போக்குவரத்துக்கு மிக முக்கியமானதாகும்.
  • 1948-இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து 75 ஆண்டுகளில் சுமாா் 20 ஆண்டுகள் மட்டுமே அங்கு மக்களாட்சி நடைபெற்றுள்ளது. கடந்த 2020 நவம்பா் 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் தேசிய ஜனநாயக லீக் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், அந்த மகிழ்ச்சி மூன்று மாதம்கூட நீடிக்கவில்லை. 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
  • மியான்மரில் மக்கள் செல்வாக்கு பெற்றவரும், ஜனநாயகவாதியுமான ஆங் சான் சூ கி கைது செய்யப்பட்டார். அவா் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலையை ராணுவம் உண்டாக்கி உள்ளது. ஆனால், கடந்த காலங்களைப்போல இல்லாமல், இந்த முறை பல்வேறு இனக் குழுக்களின் தாக்குதலை ராணுவ ஆட்சியாளா்கள் எதிா்கொண்டு வருகின்றனா்.
  • கரேன் தேசிய யூனியன், கச்சின் விடுதலை அமைப்பு, சின் தேசிய முன்னணி, கரேன்னி தேசிய முற்போக்கு கட்சி, டாங் தேசிய விடுதலை ராணுவம், மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணி ராணுவம், அராக்கன் ராணுவம் போன்ற இனக் குழுக்களும், ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்ட பின்னா் அமைக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு அமைப்பும் கொரில்லா போர் முறையில் திடீா் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
  • பொருளாதார ரீதியாக உதவுவதுபோல நுழைந்து, தனது அண்டை நாடுகளை எல்லாம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் உத்தியை மியான்மரிலும் சீனா கடைப்பிடித்து வருகிறது. அந்த நாட்டின் பல திட்டங்களில் பெரும் அளவில் முதலீடுகளைச் செய்துள்ளதுடன் ஆயுத உதவியையும் சீனா அளித்துவருகிறது.
  • மியான்மரில் ராணுவத்துக்கும், அந்த நாட்டு ஆயுதக் குழுக்களுக்கும் நடைபெறும் மோதலை நமது நாடு சாதாரணமாகக் கடந்து விட முடியாது. அந்த நாட்டில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நமது நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூா், மிஸோரம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் 1,643 கி.மீ. எல்லையை மியான்மா் பகிர்ந்து கொள்கிறது. பாகிஸ்தான், வங்கதேச எல்லைகள் போன்று இங்கு வேலி அமைக்கப்படவில்லை.
  • இந்தப் பகுதிகளில் உள்ள இருநாட்டு மக்களின் கலாசாரம், குடும்ப உறவுகள் காரணமாக 16 கி.மீ. வரை நுழைவு இசைவு (விசா) இல்லாமல் வந்து செல்லும் வகையில் 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருகில் இருப்பதால், அந்த நாட்டு மக்கள் வா்த்தகம், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்காக இந்திய நகரங்களுக்கு வந்து செல்வது இயல்பாக உள்ளது.
  • மேலும், இந்தப் பகுதியின் புவி அமைப்பும் வேலி அமைப்பதற்கு ஏற்றதாக இல்லை. இந்தச் சூழலை சமூக விரோத சக்திகளும், ஆயுதம் ஏந்திய பிரிவினைக் குழுக்களும் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன.
  • இந்தியாவில் கண்காணிப்பு அதிகம் இருப்பதால், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யுஎன்எல்எஃப்), மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ), அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (யுஎல்எஃப்ஏ - உல்ஃபா), நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்), மணிப்பூரின் குகி, ஜோமிஸ் போன்ற பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் பயிற்சி அளிப்பதற்காக மியான்மரின் சின் மற்றும் கச்சின் மாகாணங்களில் தளங்களை அமைத்துள்ளன.
  • அத்துடன் தங்களது தீவிரவாதச் செயல்களுக்கு நிதி திரட்ட கஞ்சா கடத்துவதையும் இந்த அமைப்புகள் தொடா்ந்து செய்து வருகின்றன. இது தவிர, மியான்மரில் நடைபெறும் உள்நாட்டுச் சண்டையால் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக நமது நாட்டுக்கு வருகின்றனா். ஏற்கெனவே மிஸோரமில் எட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 160 நிவாரண முகாம்களில் 30,500-க்கும் மேற்பட்ட மியான்மா் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனா்.
  • சொந்த நாட்டு சிறுபான்மை மக்களான ரோஹிங்கயா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் கடந்த 2017-ஆம் ஆண்டு மூா்க்கதனமாகத் தாக்கியபோது, அவா்களில் ஆயிரக்கணக்கானோர் ஏற்கெனவே வங்கதேசத்திலும், இந்தியாவிலும் தஞ்சம் புகுந்தனா். அண்டை நாடுகளில் இருந்து வரும் அகதிகளால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை விகிதாசார மாற்றம் காரணமாகப் பெரும் பிரச்னைகளை அஸ்ஸாம், மற்ற வடகிழக்கு மாநிலங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தித்து வருகின்றன.
  • இந்தப் பின்னணியில் அகதிகள் வருகை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலால் நமது நாட்டுக்குப் பெரும் பிரச்னையாக மியான்மா் உள்நாட்டு மோதல் மாறிவிடாமல் கண்காணிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

நன்றி: தினமணி (22 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories