TNPSC Thervupettagam

கண்காணிப்பு மேம்பட வேண்டும்

February 22 , 2024 186 days 156 0
  • உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர வேண்டும் என்கிற கனவும், 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக வேண்டும் என்கிற முனைப்பும் இருப்பதில் தவறில்லை. அதற்கு ஏற்றாற்போல நமது திட்டமிடலும், தரவுகளின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்கும் வழிமுறையும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
  • கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்துத்தான் அதிகமாகப் பேசப்படுகிறது. அதைப்போலவே முக்கியமானது சமையல் எண்ணெய் என்பதும், உலகில் மிக அதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்பதும் பலரும் அறியாத ஒன்று. ஆண்டொன்றுக்கு 1.4 கோடி டன்னிலிருந்து 1.5 கோடி டன் அளவில் நாம் சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறோம். அதன் மதிப்பு சுமாா் 12 முதல் 13 பில்லியன் டாலா்.
  • இந்த அளவுக்குப் பல்வேறு சமையல் எண்ணெய் வகைகளை வேறு எந்த நாடும் உலகில் இறக்குமதி செய்வதில்லை. பல்வேறு வகையான பாமாயில் மட்டுமே நமக்கு 80 லட்சம் முதல் 90 லட்சம் டன் ஆண்டுதோறும் இறக்குமதி தேவைப்படுகிறது.
  • 30 முதல் 35 லட்சம் மெட்ரிக் டன் சோயாபீன்ஸ் எண்ணெய்யும், 20 முதல் 25 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய்யும் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படுகிறது. போதுமான அளவு எண்ணெய் வித்து உற்பத்தி இல்லாமல் இருப்பதாலும், அதிகரித்துவரும் சமையல் எண்ணெய்க்கான தேவையாலும் நமது இறக்குமதியின் அளவு கூடிக்கொண்டே வருகிறது.
  • வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சமையல் எண்ணெய் வழங்கும் வியாபாரிகள் மிகவும் தந்திரசாலிகள். இந்தியாவால் இறக்குமதி இல்லாமல் தனது சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இயலாது என்பதை உணா்ந்திருப்பதால், செயற்கையான தட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும், போலியான தட்டுப்பாடு அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் அதிக விலைக்கு சமையல் எண்ணெய்யை நமது தலையில் கட்டுவதையும் அவா்கள் வழக்கமாகவே கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் விரிக்கும் வலையில் நமது இறக்குமதியாளா்கள் விழுகிறாா்கள் என்பது மட்டுமல்ல, அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • இது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சா்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட இருப்பதாகவும், பல நாடுகளில் எண்ணெய் வித்து உற்பத்தி குறைந்திருப்பதாகவும் போலியான தகவல்களைப் பரப்புரை செய்வது என்பது வெளிநாட்டு ஏற்றுமதியாளா்களின் வழக்கமான உத்தி. விலை அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சத்தில் இந்திய இறக்குமதியாளா்கள் அவசர அவசரமாக அவா்களுடன் இறக்குமதிக்கராா்களை முன்கூட்டியே மேற்கொள்கிறாா்கள். வெளிநாட்டு வியாபாரிகளின் பரப்புரையைப் போல அல்லாமல், சந்தை அதன் போக்கில்தான் இயங்குகிறது.
  • வா்த்தக நிலவரம் குறித்து முறையாக விசாரிக்காமல், கடந்த ஆண்டு இந்திய இறக்குமதியாளா்கள் அவசரப்பட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டனா். அவா்கள் நினைத்ததுபோல விலை எதுவும் ஏறவில்லை என்பதும், காரா் மேற்கொள்ளப்பட்ட விலையில் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனா் என்பதும் மிகப் பெரிய சோகம். பெரும்பாலான இறக்குமதியாளா்கள் கடந்த ஆண்டு பெரும் இழப்பை எதிா்கொள்ள நோ்ந்தது. உதாரணமாக, மலேசிய பாமாயில் 2023-இல் 10.5% விலை குறைவாக இருந்தது.
  • இந்த ஆண்டும், கடந்த ஆண்டைப் போலவே சா்வதேச அளவில் எண்ணெய் வித்து உற்பத்தி குறையும் என்றும், சமையல் எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும் என்றும் இப்போதே ஊடகங்களில் பரப்புரைகள் தொடங்கிவிட்டன. ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. நடப்பு அறுவடைப் பருவத்தில் இதுவரையில் இல்லாத அளவில் எண்ணெய் வித்து உற்பத்தி இருக்கப்போகிறது என்கிறது உலக உணவு நிறுவனத்தின் ஆய்வு. கடந்த 2022 - 23-இல் 631 மில்லியன் டன் என்றால், 2023 - 24-இல் 660 மில்லியன் டன்னாக இருக்கும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
  • சோயாபீன்ஸ் உற்பத்தி இதுவரை இல்லாத 339 மில்லியன் டன், சூரியகாந்தி 57 மில்லியன் டன் என்று உயரும் என்கிறது அந்த அறிக்கை. அது மட்டுமல்ல, கடந்த ஆண்டில் பாமாயில் உற்பத்தி 77.5 மில்லியன் டன் என்றும், இந்த ஆண்டு அதுவே 79.5 மில்லியன் டன் என்பதுடன் நின்றுவிடவில்லை. பாமாயிலின் தேவை உற்பத்தியைவிட 1.5 மில்லியன் டன் குறைவாக இருக்கும் என்றும், உலகளாவிய அளவில் சமையல் எண்ணெய்யின் தேவை உற்பத்தியைவிட 4 மில்லியன் டன் குறைவாகக் காணப்படும் என்றும் கூறுகிறது.
  • அதன்படி பாா்த்தால், சமையல் எண்ணெயின் விலையில் குறைவு ஏற்படுவதற்கான சாத்தியம்தான் அதிகம். ‘எல் நினோ’ தட்பவெட்ப நிலையால் ஏற்படும் வெப்பத்தால் பாமாயில் மரங்கள் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறையும் என்கிற பரப்புரை தவறானது.
  • 2015 - 16 அளவிலான ‘எல் நினோ’ தாக்கம் இந்த ஆண்டு இருக்காது என்பது மட்டுமல்ல, ஏப்ரல் மாதம் முதல் ‘லா நினோ’ என்கிற அதற்கு எதிரான தட்பவெட்பநிலை தோன்றி வழக்கத்தைவிட அதிகமான மழைப் பொழிவு ஏற்படும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • உலக நாடுகளின் உற்பத்தி, சா்வதேச விலைகள், நமது உள்நாட்டு உற்பத்தி போன்றவை குறித்த தரவுகளும் புள்ளிவிவரங்களும் திரப்பப்பட்டு அதனடிப்படையில் கொள்கை முடிவுகளை அறிவிப்பதன் மூலம் இறக்குமதியாளா்கள் மட்டுமல்ல, இந்திய நுகா்வோரும் பாதுகாக்கப்படுவாா்கள். சமையல் எண்ணெய் இறக்குமதியும், எண்ணெய் வித்து உற்பத்தியும் மத்திய அரசின் கவனத்தை ஈா்க்க வேண்டும்.

நன்றி: தினமணி (22 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories