TNPSC Thervupettagam

கண்டங்கள் உருவானது எப்படி

February 21 , 2024 187 days 267 0
  • நாம் வாழும் பூமியின் நிலப்பரப்பு பல்வேறு பகுதிகளாகப் பிரிந்துள்ளது. இங்கே பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்தப் பன்முகத்தன்மைக்கு அவர்கள் வசிக்கும் நிலப்பரப்பு முக்கியப் பங்காற்றுகிறது. தமிழின் சங்க இலக்கியங்கள்கூட நாம் வாழும் நிலத்தை ஐந்திணைகளாகப் பிரித்து, அதைப் பொறுத்து அங்கே வாழும் மக்களின் வேறுபட்ட வாழ்க்கைமுறையைப் பதிவு செய்துள்ளன.
  • பூமி ஏன் பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்? ஏன் சில இடங்களில் மலைகள், சில இடங்களில் தீவுகள் உருவாக வேண்டும்? முதலில் பூமி ஏன் ஒற்றை நிலப்பரப்பாக இல்லாமல், ஏழு கண்டங்களாகப் பிரிந்திருக்க வேண்டும்?
  • உண்மையில், டைனசோர்கள் தோன்றிய காலகட்டத்தில் (சுமார் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்) இந்த உலகம் முழுவதும் மிகப்பெரிய ஒற்றைக் கண்டமாக இருந்திருக்கிறது. அந்தக் கண்டத்தின் பெயர் பாஞ்சியா. அதாவது முழு உலகம் எனப் பொருள். பாஞ்சியா என்பது இன்றைய நிலப்பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய பிரம்மாண்டமான தீவு. இந்தத் தீவைச் சுற்றி மாபெரும் கடல் இருந்தது.
  • அந்தக் கடலுக்குப் ‘பந்தலாசா’ (முழுக் கடல்) என்று பெயர். காலப்போக்கில் இந்தப் பாஞ்சியா நிலப்பகுதி விரிசல் கண்டு பல துண்டுகளானது. இவை மெல்ல மெல்ல நகர்ந்தன. இப்படித்தான் இன்றைய ஏழு கண்டங்கள் உருவாகின. இந்த நிகழ்வைத்தான் ‘கண்டப்பெயர்ச்சி’ என்கிறோம் .
  • கண்டப்பெயர்ச்சி எனும் கோட்பாடு 1912ஆம் ஆண்டு ஆல்ஃப்ரெட் வேகனர் எனும் விஞ்ஞானியால் முன்வைக்கப்பட்டது. வேகனர் தனது ஆய்வில் வெகு தொலைவில் இருந்த இரண்டு கண்டங்களுக்கு இடையேயான ஒற்றுமைகளைக் கண்டுபிடித்தார். அவர், தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டங்களில் நடத்திய ஆய்வுகளில் அங்கே ‘மெசோசோரஸ்’ என்கிற விலங்கின் புதைபடிவங்களைக் கண்டார். நிலத்திலும் நீரிலும் வாழும் பல்லி போன்ற அந்த விலங்கின் புதைபடிவங்கள் ஆப்ரிக்காவிலும் தென் ஆப்ரிக்காவிலும் காணப்பட்டன.
  • ஆப்ரிக்காவில் மட்டும் வாழத் தகுந்த பண்புகளைக் கொண்ட அந்த விலங்கு எப்படித் தென் அமெரிக்காவிற்கு வந்தது என்று அவருக்குச் சந்தேகம் எழுந்தது. அந்த விலங்கினால் நிச்சயம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து, தென் அமெரிக்காவிற்கு வந்திருக்க முடியாது. பிறகு எப்படி அது சாத்தியம் என அவர் ஆராய்ந்தபோதுதான், ஒரு காலத்தில் இந்த இரண்டு நிலங்களும் ஒன்றாக இருந்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.
  • அந்த விலங்கு குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்துவந்திருக்க வேண்டும். அந்த நிலம் இரண்டாகத் துண்டிக்கப்பட்டுப் பிரிந்திருக்க வேண்டும். அதனால்தான் அதன் புதைபடிவங்கள் இரண்டு இடங்களிலும் காணப்படுகின்றன என்று வேகனர் கணித்தார். அத்துடன் பிரேசிலின் கடற்கரையில் கண்டறியப்பட்ட பழமையான பாறைகளும், மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் பாறைகளுடன் ஒத்திருந்தன. இதேபோல் ஒரு கண்டத்தில் காணப்படும் சில தாவரங்கள் வேறு கண்டத்தில் இருப்பதையும் அவர் கண்டார். இந்த ஆதாரங்களை எல்லாம் திரட்டித்தான் அவர் ‘கண்டப்பெயர்ச்சி’ எனும் கோட்பாட்டுக்கு வந்துசேர்ந்தார்.
  • ஆனால், அவரது கோட்பாட்டை அன்றைய அறிவியல் உலகம் நிராகரித்தது. கண்டங்கள் எப்படிப் பிரிந்தன என்பதற்கான ஆதாரங்கள் வேகனரிடம் இல்லை என்பதுதான் அதற்குக் காரணம். ஆனால், இந்த ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் பெறப்பட்டு, கண்டங்கள் இடம்பெயர்ந்ததற்கான காரணம் புவித் தட்டுகளின் (Tectonic Plates) நகர்வே என்று 1960களில் உறுதியானது.
  • புவித்தட்டுகள் என்றால் என்ன? பூமியின் மையமான உள் பகுதி (Core). சூரியனுக்கு நிகரான வெப்பம்கொண்ட இந்தப் பகுதியை மூடகம் (Mantles) மூடியிருக்கிறது. இதற்கு மேலே புவிமேலோடு (Crust) உள்ளது. இங்குதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
  • இந்தப் புவிமேலோட்டையும், மூடகத்தையும் உள்ளடக்கிய பகுதி ‘நிலக்கோளம்’ என அழைக்கப்படுகிறது. இந்த நிலக்கோளம் பெரிதும் சிறிதுமாகப் பல பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றைத்தான் புவித்தட்டுகள் என்கிறோம். இந்தப் புவித்தட்டுகள் மூடகம் மீது மிதந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தட்டுகளின் நகர்வைத்தான் நாம் ‘புவித்தட்டு நகர்வு’ என்கிறோம்.
  • இந்தப் புவித்தட்டுகள் நிலையானவை அல்ல. அவை தொடர்ந்து நகரக்கூடியவை. இந்த நகர்வு நிலக்கோளத்திற்கு அடியில் உள்ள வெப்பம், அழுத்தத்தினால் ஏற்படுகிறது. இந்தப் புவித்தட்டின் நகர்வினால்தான் ஒரே இடமாக இருந்த நிலம் கண்டங்களாகப் பிரிந்து சிதறின. கண்டங்கள் உருவானதற்கு மட்டுமல்ல, பூமியில் காணப்படும் மலைகள், தீவுகள், எரிமலைகள் உருவாக்கத்திற்கும் இந்தப் புவித்தட்டுகளின் நகர்வுதான் காரணமாக இருக்கிறது.
  • புவித்தட்டுகள் ஏனோதானோ என்று நகர்வதில்லை. அவை ஒன்றோடு இன்னொன்று மோதிக்கொள்ளும் வகையில் நகர்வதை ‘இணையும் எல்லை’ என்கிறோம். இவ்வாறு மோதும்போது நிலம் மேல்நோக்கித் தள்ளப்பட்டு மலைகள் உருவாகின்றன. நாம் வியக்கும் இமயமலை இப்படி உருவானதுதான். ஒன்றாக உள்ள தட்டுகள் ஒன்றிலிருந்து இன்னொன்று நேரெதிர் திசையில் விலகிச் செல்வதை ‘விலகும் எல்லை’ என்கிறோம்.
  • இப்படி உருவானதுதான் தென் அமெரிக்கா, ஆப்ரிக்காவுக்கு இடையே காணப்படும் நடு அட்லாண்டிக் முகடு. தட்டுகள் ஒன்றுக்கு இன்னொன்று பக்கவாட்டில் நேரெதிர் திசையில் விலகிச் செல்வதை, ‘பக்க நகர்வு எல்லை’ என்கிறோம். இவ்வாறு நேரெதிர் திசை நகர்வின்போது அழுத்தம் ஏற்படுவதுதான் நிலநடுக்கத்திற்குக் காரணமாக அமைகிறது.
  • இந்தப் புவித்தட்டுகள் தொடர்ந்து நகரக்கூடியவை என்றால், அவற்றை நம்மால் ஏன் உணர முடியவில்லை? காரணம், அதன் நகர்வு ஆண்டுக்கு 10 செ.மீ. அளவில்தான் நடைபெறுகிறது. ஆனால், இந்த நகர்வு தொடர்ந்து நடைபெறுவதால் எதிர்காலத்தில் இப்போது இருக்கும் ஏழு கண்டங்கள் உருமாறி வேறு சில புதிய கண்டங்கள் தோன்றலாம். அல்லது அவை மீண்டும் ஒன்றுபட்டு ஒற்றைக் கண்டமாகலாம். எது எப்படி இருந்தாலும் அதில் வாழும் மனிதர்கள் பிளவுபடாமல் இருப்பதே எல்லாருக்கும் நன்மை பயக்கும்.

நன்றி: தி இந்து (21 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories