TNPSC Thervupettagam

கண்ணுக்குப் புலப்படாத சுமைகள்

July 7 , 2024 6 hrs 0 min 13 0
  • பால் கணக்கு, வீட்டு வாடகை, மளிகை - காய்கறிச் செலவு, மின் கட்டணம், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவு, உறவினர் வருகை, பண்டிகைச் செலவு.. இப்படி முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும் வீடுசார்ந்த எல்லாவற்றையும் பெண்கள்தான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
  • ஒரு குடும்பத்தலைவி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய வேலைகளின் பட்டியல் முடிவின்றி நீண்டுகொண்டே போகிறது. வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் என்னென்ன தேவை என்பதை ஆய்ந்துணர்வது. அவற்றைத் தேடி வாங்குவது, ஒழுங்கு செய்வது, சரிவர எல்லாம் நடக்கிறதா எனக் கண்காணிப்பது, தவறு நடந்தால் பொறுப்பேற்றுச் சரிசெய்வது எனக் கண்ணுக்குப் புலப்படாத இச்சுமைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை.

நினைவுச் சுமை

  • ஒரு குழந்தை பிறந்தது முதல் அனைத்துப் பொறுப்பும் பெண்களு டையதே. குழந்தைக்கான தடுப்பூசிகள், மருந்துகள், மருத்துவரைச் சந்திக்க வேண்டிய நாள், குழந்தையின் உணவு, உடை, பள்ளியில் சேர்க்க வேண்டிய வயதில் சரியான பள்ளி குறித்த விசாரிப்பு என மனம் சதா அலைந்துகொண்டேயிருக்கும். குழந்தைகள் படிப்பு தொடர்புடைய அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதும் அம்மாவின் கடமை. பிள்ளைகளின் கல்விக்கட்டணத்திற்கான கடைசிநாள், அவர்களின் வீட்டுப்பாடங்கள், எழுது பொருள்கள், அவர்களின் தேர்வு நாள்கள் என ஒரு நீண்ட பட்டியல். விளை யாட்டில் ஈடுபடுபவர்களாக இருந்தால் அப்பயிற்சிக்கான உடைகளை மறக்காமல் சலவை செய்து வைப்பது, பெண் பிள்ளை கள் இருந்தால் அவர்களின் மாதவிடாய் நாள்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவளுக்குத் தேவையான மாற்று உள்ளாடை, சானிட்டரி நாப்கினை மறக்காமல் எடுத்துவைக்க வேண்டும்.
  • வீட்டில் உள்ளவர்களின் உடல் நலனுக்கும் பெண்கள்தானே பொறுப்பு. மருத்துவரைச் சந்திப்பதற்கான முன் அனுமதி பெறுவது, மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வது, மருந்துகள் தீர்ந்து போகும் முன் ஞாபகமாக வாங்கி வைப்பது, நேர நேரத்திற்குத் தவறாமல் அவற்றைத் தருவது போன்றவையும் பெண்களைச் சார்ந்ததே.
  • தங்களின் திருமணநாளைக்கூட கணவர்கள் மறக்கலாம். பாவம் பணிச் சுமை. ஆனால், பெண்கள் வீட்டில் உள்ள அனைவரின் பிறந்தநாளையும் திருமண நாளையும் நினைவில் வைத்துக்கொண்டு நேரம் பார்த்து மறவாமல் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். போதாக்குறைக்குக் கணவருக்கும் அவற்றை நினைவூட்ட வேண்டும். பரிசுப் பொருள்கள் வழங்க வேண்டியிருப்பின் சென்ற ஆண்டுகளில் வாங்கிய பரிசுப் பொருள்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி அவர்கள் நமக்கு வாங்கித் தந்த பொருள்களின் மதிப்பையும் நினைவில் வைத்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் வாங்க வேண்டும். திருவிழாக்கள், அவசரச் சடங்குகள், திருமணம் மற்றும் துக்கக் காரியங்களுக்கான செய்முறைகள் என எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்ணுக்குப் புலப்படாத உழைப்பு

  • பல்வேறு காரியங்களை நினைவில் வைத்துக்கொள்வதோடு அவற்றை உடனடியாகச் செய்ய வேண்டியவை, முக்கியமானவை, மறந்தால் பிரச்சினை ஏற்படுத்தக்கூடியவை என வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். கணவன் செய்ய வேண்டியவை, பிள்ளைகள் செய்ய வேண்டியவை, மாமனார், மாமியார் செய்யவேண்டியவற்றையும் பெண்தான் நினைவில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். இது கண்ணுக்குப் புலப்படாத அறிவுசார்- உணர்வுசார் உழைப்பு. இது மிக அதிகமான ஆற்றலைக்கோருவது. வீட்டில் உடல் உழைப்பை வீட்டு வேலை உதவியாளர் அல்லது வீட்டில் உள்ளவர்கள், சில வீடுகளில் கணவர் பகிர்ந்துகொண்டாலும் இதுபோன்ற திட்டமிடல்களை யாரும் பகிர்ந்துகொள்வதில்லை.

மன அழுத்தம் தரும் பெருஞ்சுமை

  • தொடர்ந்து பல்வேறு வேலைகள் குறித்த சிந்தனைகளும் செயல்பாடுகளும் பெண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. தவறு நேர்ந்தால், பிள்ளைகள் கல்வியில் பின்தங்கினால், வீட்டில் உள்ளோரின் உடல் நலன் பாதிக்கப் பட்டால் பெண்கள் குற்றவுணர்வுக்கு ஆளாகிறார்கள். அதற்காகப் பல நேரம் பிறரால் குற்றம்சாட்டப்படுகின்றனர். இதனால் உடல் சோர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மை எனப் பல்வேறு பாதிப்பு களுக்கும் பெண்கள் ஆளாக நேரிடுகிறது என இது குறித்த ஆய்வுகள் கூறுகின்றன. வேலைக்குப் போகும் பெண்கள் வீடுசார் பொறுப்பு, பணிசார் பொறுப்பு என இரட்டைச் சுமையைச் சுமக்கிறார்கள். இதனால், வேலையில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்வதை இவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். தங்களுக்கென ஓய்வு, விருப்பமானவற்றில் ஈடுபடுவது போன்றவை இவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும் அதற்கு ஏதுவான சூழல் நமது குடும்பங்களில் இல்லை.
  • ஆண்களைப்போல் அல்லாமல் பெண்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்ய விரும்புவதால் பெண்களே வலிய தேடிக்கொள்ளும் சுமை இது என்கிற குற்றச்சாட்டே பெரும்பான்மையான ஆண்களால் வைக்கப்படுகிறது. இது ஓரளவு உண்மை என்றாலும்கூட குடும்ப அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவரும் இந்நாள்களில் இது குறித்தும் உரையாடல் வேண்டும். வீட்டில் வேலைகளை ஆண் - பெண் என்கிற பாகுபாடு இன்றிப் பகிர்ந்துகொள்வதுபோல் அறிவுசார் - உணர்வுசார் சுமைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். குடும்பங் களின் இலக்கு மகிழ்ச்சிதானே!

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories