- இந்தியக் கடற்படை அதிகாரிகளாகப் பணிபுரிந்த எட்டு பேருக்குக் கத்தார் நாட்டில் விதிக்கப் பட்ட மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருப்பது நிம்மதி அளிக்கிறது. அதே நேரம் இந்தத் தண்டனையிலிருந்து அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு தொடர்ந்து கவனத்துடன் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
- கத்தாரில் பாதுகாப்பு சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேர், 2022 ஆகஸ்ட் 30 அன்று கைது செய்யப்பட்டனர். கைதுக்கான காரணம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத நிலையில், கத்தார் அரசின் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடர்பான ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்ற குற்றச்சாட்டின் பெயரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல் கசிந்தது.
- கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள நீதிமன்றம், 2023 அக்டோபர் 26 அன்று அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரும் நவம்பர் 9 அன்று மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு விசாரணையின்போது கத்தாருக்கான இந்தியாவின் தூதர் விபுல், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் உடனிருந்தனர். மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டதை இந்திய வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
- எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து இந்திய அரசு அவர்களுக்கான தூதரக, சட்ட ஆதரவை வழங்கிவருகிறது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, துபாயில் நடைபெற்ற காப்28 கூட்டத்தின் இடையில் டிசம்பர் 1 அன்று கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத்தைச் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அரசு தொடக்கம் முதல் இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்துடன் கையாண்டது. இந்தத் தண்டனைக்கு எதிராகப் பொதுவெளியில் கண்டனம், எதிர்ப்பு எதையும் பதிவுசெய்யவில்லை. இரு நாட்டு உறவுகளுக்கும் பாதிப்புநேராமல் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக நின்று எட்டு இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றியிருப்பது பாராட்டுக்குரியது. இது சிறந்த ராஜதந்திர அணுகுமுறை என்றே சொல்ல வேண்டும்.
- இனி இவர்களைச் சிறைத் தண்டனையிலிருந்து மீட்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்தப்பட வேண்டும். கத்தார் உச்ச நீதிமன்றத்தில் தண்டனைக்கு எதிரான சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக அவர்கள் எட்டு பேரும் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் திரட்டப்பட வேண்டும்.
- உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதிசெய்துவிட்டால் கத்தார் அரசரிடம் இந்திய அரசு இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரிக்கை விடுக்க முடியும் அல்லது தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அரசரின் மன்னிப்பை நாடி விடுதலைக்கான கோரிக்கையை முன்வைக்க முடியும்.
- இவை எதுவும் பலனளிக்காவிட்டால் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே 2015இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி எட்டு இந்தியர்களும் இந்தியச் சிறைகளில் தமது தண்டனைக் காலத்தைக் கழிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கத்தாரில் சிறைத் தண்டனை பெற்றுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும். அதேபோல வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் எதுவும் எப்போதும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வதும் இந்திய அரசின் கடமை.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2024)