TNPSC Thervupettagam

கனகலிங்கம் கண்ட பாரதி: சில புதிய செய்திகள்

September 12 , 2019 1947 days 977 0
  • பாரதியின் அன்புக்குரிய சீடர், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர், ‘என் குருநாதர் பாரதியார்’ எனும் நூலைப் படைத்தவர் என நன்கு அறியப்பட்டவர் புதுவையில் வாழ்ந்த ரா.கனகலிங்கம். பாரதியியலிலும் பொதுவாழ்விலும் கனகலிங்கத்துக்கு இன்னும் சில பரிமாணங்கள் இருந்திருக்கின்றன. இதன் தொடர்பாகச் சில புதிய செய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
  • 1912-ல் புதுவையில் செயல்பட்டுவந்த ‘ப்ரொக்ரெஸிவ் யூனியன் கிரிக்கெட் கிளப்’ எனும் சங்கத்தின் ஆண்டுவிழாவில் பாரதியைப் பேச வைக்க வேண்டும் என்று விரும்பிய கனகலிங்கம் தன் நண்பர்களுடன் பாரதியின் இல்லத்துக்குச் சென்று முதன்முறையாகச் சந்தித்தார். ‘சாதி வித்தியாசம்’ எனும் பொருளில் பாரதி அந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றினார். அந்த நிகழ்ச்சியைப் பற்றி கனகலிங்கம் பின்வருமாறு விவரித்திருக்கிறார்: “பாரதியாரைக் கண்ட ஜனங்கள் வந்தேமாதர கோஷம் செய்து கைதட்டி வரவேற்றார்கள். அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் காலஞ்சென்ற திரு. பு.சி.நாராயணசாமி உபாத்தியாயர்; ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர். பாரதியார் ஜாதி பேதத்தின் தோற்றம், வளர்ச்சி, ஜாதி வித்தியாசத்தின் விளைவான கேடுகள், கொடுமைகள் முதலியவற்றையெல்லாம் சாங்கோபாங்கமாக எளிய நடையில் எல்லோர் மனத்திலும் ஆழ்ந்து பதியும்படி பேசி முடித்தார்.”
பாரதி வீட்டில் விருந்து
  • பாரதியோடு கனகலிங்கம் பழகத் தொடங்கிய பின், கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இது அனைவரும் நன்கறிந்த செய்தி. புதுவை வாசத்தின்போது நிகழ்ந்த எத்தனையோ செய்திகளை கனகலிங்கம் தமது நூலில் எடுத்துரைத்திருக்கிறார். 1914-ல் முதல் உலகப் போருக்குக் கட்டாய சேவகமாய் புதுவையிலிருந்து அனுப்பப்பட்ட ஐந்து இளைஞர்கள் தொடர்பான செய்தியை கனகலிங்கம், “பாரதியாருக்கு ஜாதி வித்தியாசங்களை அடியோடு தொலைத்துவிட வேண்டும் என்ற புரட்சிகரமான லட்சியம் அந்நாளிலேயே உண்டு... இப்பெரியார் தம் வீட்டில் ஐந்து ஹரிஜன வாலிபர்களுக்கு விருந்து நடத்தினார் ஒரு சமயம்” எனவும், ஐவரும் உணவுண்ட பின் பாரதி, “யாரும் இலையைத் தொட வேண்டாம்” என்று சொல்லி, மனைவி செல்லம்மாவைக் கூப்பிட்டு இலைகளை எடுக்கச் செய்தார் எனவும் நினைவுகூர்ந்திருந்தார். கால ஓட்டத்தில் கனகலிங்கம் மெஸொபொடேமியா சென்றார். அங்கே ராணுவ சேவை செய்து முடித்த பின் புதுவை திரும்பிய கனகலிங்கம் சென்னைக்கு வந்து ‘சுதேசமித்திர’னில் பணியாற்றிய பாரதியைச் சந்திக்கச் சென்றதை கனகலிங்கம் உணர்ச்சி பொங்க வருணித்திருக்கிறார்.
  • “ஆலயப் பிரவேசம் செய்யும் குதூகலத்துடன் கதவைத் திறந்துகொண்டு நான் உள்ளே புகுந்தேன். ‘ப்ரூப்’ பார்த்த பின் ஷீட்டுகளை கம்பாஸிடர்களிடம் கொடுத்துவிட்டுத் தலைநிமிர்ந்தார் குருநாதர். நான் தலை வணங்கிப் பயபக்தியுடன் நமஸ்காரம் செய்தேன். பாரதியார் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார் ஒரு கணம். அடுத்த கணமே, ‘அடேய்!’ என்று சொல்லிக்கொண்டே காலால் நாற்காலியைப் பின்புறமாக உதைத்துத் தள்ளிவிட்டு, எழுந்துவந்து அப்படியே என் கழுத்தைக் கட்டிக்கொண்டார். எனக்குக் கண்ணீர் ததும்பியது.”
  • கனகலிங்கம் புதுவையிலிருந்து சென்னைக்கு வந்தபோது அவர் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான ராவ்ஸாஹெப் பி.வி.எஸ்.சுந்தரமூர்த்தி பிள்ளை இல்லத்தில் முதலில் தங்கினார். ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுக்கான பல நிகழ்வுகளில் பங்கேற்றார், பேசினார், எழுதினார். ரா.க.லிங்கம் என்ற பெயரில் எழுதினார். கனகலிங்கத்தின் இந்தப் பரிமாணம் அழுத்தமாகக் கவனம் பெறவில்லை. இந்த வரலாற்றின் பல செய்திகளுள் பாரதியியலோடு தொடர்புடைய ஓர் அரிய செய்தியை இனிக் காண்போம்.
ஆதி திராவிடர்களுக்கோர் வேண்டுகோள்
  • “எங்கு பார்த்தாலும் சங்கங்கள் ஏற்பட்டு ஒற்றுமை வளர்ந்துவரும் இந்நாளில் ஒற்றுமையில்லாதிருக்கும் நமக்குள் கட்சிபேதம் உதவாது. இச்சென்னையில் சுமார் 15 வருஷத்துக்கு முன் பறையரென்றும், பெங்களூரில் திருகுலத்தார் என்றும் கட்சிபேதங்கள் உண்டாயிருந்தன. இப்போதோ திராவிடர், ஆதி திராவிடர் என்ற இருகக்ஷி தலைகாட்டி நிற்கின்றன. இவ்விரண்டில் எது நியாயமானதென்று யோசிக்குங்கால், திராவிடர் என்ற பெயர்தான். ஆதி திராவிடர் என்ற பெயர் எவ்வித மிருக்கின்றதென்றால் ஓர் வீட்டில் கிருஷ்ணசாமி யென்ற பையனிருந்தால் அவன் சொந்த பெயரிருக்க அவனை ‘கிட்டு’ என்ற செல்லப் பெயரிட்டு அழைப்பது வழக்கம். அதைப் போல் பஞ்சமர், பறையரென்று அழைக்கும் நமக்கு திராவிடரென்ற பெயர் இருக்க எந்த சாஸ்திர புஸ்தகத்திலுமில்லாத ஆதி யென்ற சொல்லை முன் கூட்டி அழைப்பதால் ஜாதியின் காலத்தைக் காட்டும் பெருமையுள்ள பெயரோ என்னமோ அறிகிலேன்... நம்மவர்களில் சிலர் ஆதி திராவிடரென்ற பெயரால் தான் உயர்ந்த ஸ்தானங்களைப் பெறலானோ மென்ற தப்பெண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பார் எல்லோரும் மேல் அந்தஸ்துக்கு வர வேணுமென்ற எண்ணத்தைக் கொண்டு கவர்ன்மெண்டார் செய்தார்களே ஒழிய ஆதியென்ற பெயரைப் பார்த்தல்ல. மகாத்மா காந்தி கானாட்டுக் கோமகனுக்கு எழுதிய கடிதத்தில் நாம் வசிக்கும் இடத்தை திராவிட மாகாணமென்றும், ‘யங் இந்தியா’ பத்திரிகையில் சென்னை திராவிடர்களுக்கு ஹிந்துஸ்தானி கற்பது கஷ்டமாகத் தானிருக்குமென்றும் எல்லா வகுப்பாரையும் சுட்டிச் சொல்லியிருக்கிறார்... ஸ்ரீமான் ஸி.சுப்ரமணிய பாரதியார் முதலிய மற்றுமுள்ள கல்விமான்கள் எல்லாம் திராவிடரென்றே சொல்லுகிறார்கள். ஆனதால் சகோதரர்களே! இனி நமக்கு ஆதி திராவிடன், மத்திம திராவிடன், ஸஞ்சம திராவிடன் எதுவும் வேண்டாம். திராவிடர் என்ற கங்கணத்தை எல்லோரும் கட்டி வெளிக்கிளம்புவோமாக... திராவிடர் என்ற பெயரால் நமது ஜாதி வேற்றுமை தொலைந்துபோகும் என்பதில் யாதோர் தடையுமில்லை யென்று மிஸ்டர் ரா.க.லிங்கம் பிள்ளை எழுதுகிறார்.” (சுதேசமித்திரன், 28-02-1921) ‘சுதேசமித்திர’னுக்கு எழுதிய இக்கடிதத்தில் ‘ஸ்ரீமான் ஸி.சுப்ரமணிய பாரதியார் முதலிய மற்றுமுள்ள கல்விமான்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது கவனத்துக்குரியது.
பாரதியின் பேராளுமை
  • பாரதியாரின் மறைவுக்குப் பின் கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர்’ நூலைத் தமிழுலகம் நன்கறியும். பாரதி மறைந்து சில மாதங்களில் ‘சுதேசமித்திர’னுக்கு எழுதிய கடிதத்தில், பாரதியார் எழுதிய நூல்களை வெளியிட ஏற்பாடு செய்தல் தொடர்பாகவும், பாரதியாரின் மனைவிக்குப் பொருளுதவி செய்தல் தொடர்பாகவும் குறிப்பிட்டிருப்பதைச் சிலர் அறிவர். ஆனால், பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே பாரதியாரை மேற்கோள் காட்டி கனகலிங்கம் ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுக் களத்தில் எழுதியுள்ளார் என்பதை இப்போதுதான் அறிகிறோம்.
  • இந்திய அளவில் காந்தி, தமிழக அளவில் பாரதி என அவர் மேற்கோள் காட்டுவது பாரதியை அவர் எந்த அளவு மதித்துவந்தார் என்பதைக் காட்டுகிறது. ரா.கனகலிங்கம் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாரதி அன்பர் எனும் பரிமாணத்தைத் தாண்டிய, சமகாலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பல வகைகளிலும் பாடுபட்ட ஆளுமை, பாரதி ஈடுபாடு, தமிழக அரசியல் செயல்பாடு ஆகிய எல்லைகள் தாண்டி இந்திய அளவிலான அரசியல் நிகழ்வுகளை உற்றுநோக்கும் பரந்த பார்வையும் அறிவும் கொண்ட ஆளுமை எனும் பரிமாணங்கள் கவனம் பெற வேண்டிய உண்மைகளாகும். இத்தகைய ஆளுமைகொண்ட கனகலிங்கம்தான் பாரதியின் சீடர் என்பது வரலாற்றில் பாரதியின் பேராளுமையை வலுவாகப் பறைசாற்றுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (12-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories