TNPSC Thervupettagam

கனடா பொருளாதாரத்தில் இந்திய மாணவர்கள் பங்கு

October 2 , 2023 290 days 333 0
  • கனடா, இந்தியா இடையிலான உறவு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. இந்த உறவு ஜனநாயகம், கலாச்சாரம், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டவை. கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக சுமார் 19 லட்சம் இந்தியர்கள் கனடாவில் வசிப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. இது அந்நாட்டு மக்கள் தொகையில் 5.2%. அதிலும் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். வெளிநாட்டில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கனடாவை அதிக அளவில் தேர்வு செய்கின்றனர்.
  • உலகத் தரமான கல்வி நிறுவனங்கள், அமைதியான வாழ்வியல் சூழல், எளிமையான விசா நடைமுறை, நியாயமான கல்வி கட்டணம், படிக்கும்போதே பகுதிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் காரணமாக இந்திய மாணவர்கள் கனடாவை தேர்வு செய்கின்றனர். மேலும் படிப்பை முடித்த பிறகு 3 ஆண்டுகள் வரை அங்கேயே பணிபுரிவதற்கான வாய்ப்பும் நிரந்தர குடியுரிமையும் வழங்கப்படுவது முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

ரூ.84 ஆயிரம் கோடி வருவாய்

  • கனடா பொருளாதாரத்தில் வெளிநாட்டு மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1.85 லட்சம் கோடிக்கு மேல் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் வருவாய் கிடைப்பதாக சர்வதேச கல்வி அமைப்பின் புள்ளி விவரம் கூறுகிறது. குறிப்பாக கல்வித் துறையில் இந்தியா, கனடா இடையே பலமான கூட்டுறவு உள்ளது. இருதரப்பு கல்வி நிறுவனங்கள் இடையே 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் இப்போது சுமார் 3.2 லட்சம் இந்திய மாணவர்கள் கனடாவில் தங்கி உயர்கல்வி பயில்கின்றனர்.
  • இதில் பஞ்சாப் மாநிலத்தவர்கள்தான் அதிகம். இதன்மூலம் அந்நாட்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதத்துடன் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதனால் கனடாவின் பொருளாதாரத்தில் இந்திய மாணவர்களின் பங்கு ரூ.84 ஆயிரம் கோடியாக உள்ளது. கனடாவில் கல்வி பயில செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப அங்கு குடியிருப்புகள் புதிதாக கட்டப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் வீடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வீடு கிடைத்தாலும் அதிக வாடகை செலுத்த வேண்டி உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
  • இருதரப்பு வர்த்தகம் கடந்த 2022-ம் ஆண்டில் கனடா இந்தியாவின் 9-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்தது. இருதரப்பு வர்த்தகம் ரூ.68 ஆயிரம் கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் கனடாவுக்கான ஏற்றுமதி ரூ.34 ஆயிரம் கோடியாக இருந்தது. இதுபோல கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு ரூ.33,600 கோடியாக இருந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.
  • மருந்துகள், நகைகள், ஜவுளி, இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை கனடாவுக்கு ஏற்றுமதியாகின்றன. இதுபோல பருப்பு வகைகள், மரங்கள், நிலக்கரி, உரம், காகிதம் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளிட்டவை கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

ரூ.28 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு

  • இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாடுகள் பட்டியலில் கனடா 18-வது இடத்தில் உள்ளது. கடந்த 2000 முதல் கடந்த மார்ச் 2023 வரையில் பம்பார்டியர் மற்றும் எஸ்என்சி லவாலின் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட கனடா நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் ரூ.28 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளன. இது இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு முதலீட்டில் 0.5% ஆகும்.
  • இதுபோல டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களும் கனடாவில் முதலீடு செய்துள்ளன. கடந்த 2022-ம் ஆண்டில் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் சுமார் ரூ.7,200 கோடியை தாயகத்துக்கு அனுப்பி உள்ளதாக உலக வங்கியின் புள்ளிவிவரம் கூறுகிறது.
  • இந்த சூழ்நிலையில், இந்திய அரசால் தீவிரவாதி (காலிஸ்தான் ஆதரவு) என அறிவிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் (45) கனடாவில் கடந்த ஜூன் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.
  • இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என இந்தியா தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அரசு அறிவித்தது. முடிந்தவரை கனடா பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் இந்தியர்களுக்கு கனடா அரசு தொடர்ந்து விசா வழங்கி வருகிறது.

மாணவர்கள் குழப்பம்

  • இரு நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களும் பெற்றோரும் குழப்பமடைந்துள்ளனர். குறிப்பாக உயர்கல்விக்காக கனடா செல்வதை தவிர்ப்பது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர். கனடா பொருளாதாரத்தில் இந்திய மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இந்திய மாணவர்கள் கனடாவை தவிர்த்தால் அந்நாட்டின் வருவாய் பாதிக்கப்படும்.
  • கனடாவில் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில், இருதரப்பு மோதல் மேலும் முற்றினால், அங்குள்ள இந்தியர்களின் பணி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும். அங்குள்ள நிறுவனங்களும் திறமையான பணியாளர்கள் கிடைக்காமல் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும்.
  • இதனிடையே, இருதரப்பு வர்த்தக உறவை மேலும் பலப்படுத்த ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என இரு நாடுகளும் கூறிவந்தன. இந்நிலையில், காலிஸ்தான் விவகாரத்தில் இந்த பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. மோதல் போக்கு தீவிரமடைந்தால் இந்தியாவுக்கு உரம் ஏற்றுமதி செய்வது தடைபடும். இதனால் இங்கு உரத்தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
  • எனவே, இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு ஏற்படவில்லை என்றால், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் பாதிக்கும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இருதரப்பு வர்த்தக உறவில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் சிலர் கூறியுள்ளனர். எதுஎப்படி இருந்தாலும், இருதரப்பு உறவு சுமுகமாக இருந்தால்தான் இரு நாடுகளுக்கும் நல்லது. எனவே, இந்தியாவுடனான மோதல் போக்கை கைவிட்டு நட்புறவை பலப்படுத்த கனடா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories