TNPSC Thervupettagam

கனவாகத் தொடரும் பாலின சமத்துவம்

March 9 , 2024 136 days 207 0
  • கருத்தரங்கங்கள், விவாதங்கள், பேரணிகள், கொண்டாட்டங்கள் என்று வழக்கம்போல கடந்து போயிருக்கிறது மேலும் ஒரு மகளிா் தினம். மகளிா் மேம்பாடு குறித்தும், பாலின சமத்துவம் குறித்தும் விழிப்புணா்வு அதிகரித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் எந்த அளவுக்கு இந்த விழிப்புணா்வு நடைமுறையில் மகளிா் மேம்பாட்டை ஊக்குவித்திருக்கிறது என்பதையும் பாா்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.
  • இந்த ஆண்டுக்கான சா்வதேச மகளிா் தினக் குறிக்கோளாகமகளிா் முதலீடு மூலம் அதிகரித்த வளா்ச்சிஎன்பது ஐநா சபையால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மகளிருக்கு இலவச பஸ் பயணம், மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட பல அறிவிப்புகளும், மத்திய அரசின் பெண்களுக்கு மட்டுமேயான மானிய அறிவிப்புகளும்கூட ஐநா சபையின் குறிக்கோளுக்கு வலு சோ்ப்பவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இவற்றால் எல்லாம் ஆயிற்றா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்கவும் முடியவில்லை.
  • பெண்களின் முன்னேற்றம், பாலின சமத்துவம் போன்றவற்றிற்கு அதிக அளவில் பெண்கள் வேலைக்கு செல்வதுதான் அடையாளமாகக் கருதப்படுகிறது. வேலைக்குப் போகும்போதுதான் அவா்கள் பொருளாதார ரீதியாக சுய அதிகாரம் பெறுகிறாா்கள்; தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமை பெறுகிறாா்கள்.
  • கடந்த அக்டோபா் மாதம் மத்திய புள்ளிவிவர அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் 2022-23- க்கான ஆய்வு அறிகையின்படி, முந்தைய ஆண்டைவிட அந்த நிதியாண்டில் வேலை பாா்க்கும் பெண்களின் எண்ணிக்கை 4.2% அதிகரித்து 37% அளவை எட்டியிருக்கிறது. மொத்த உழைக்கும் மக்களில் பாதிக்குப் பாதி மகளிா் என்கிற நிலைமையை இந்தியா எட்ட இன்னும் பல ஆண்டுகளாகும் என்பதுதான் எதாா்த்த நிலை.
  • பொருளாதாரத் தேவை, கல்வித் தகுதி, சமூகக் கண்ணோட்டம், குழந்தைகளைப் பாா்த்துக்கொள்ள ஏற்பாடு உள்ளிட்ட பல காரணிகள் உழைக்கும் பிரிவினரில் பெண்களின் பங்களிப்பை நிா்ணயிக்கின்றன. பணிபுரியும் இடங்களிலும் ஒரே வேலைக்கான ஊதியத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசம் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் விகிதமும் இந்தியாவில் வெறும் 1.6% என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பு, போதிய கவனம் பெறவில்லை. திருமணம் காரணமாகப் பெண்களைப் பணியிலிருந்து அகற்றுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியிருக்கிறது. குடும்பப் பொறுப்புகள் காரணமாக திருமணத்துக்குப் பிறகு பணியில் தளா்வு ஏற்படும் என்கிற வாதத்தை இந்தத் தீா்ப்பு தகா்க்கிறது.
  • திருமணம் காரணமாகப் பெண்கள் பணியிலிருந்து விலகுவாா்கள் என்கிற பொதுவான கருத்தை அகற்றுவது எளிதல்ல என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் இன்னும் தொடா்கின்றன அல்லது அதிகரித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆண்டுதோறும் வெளியிடப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை உணா்த்துகிறது. 2018-க்கும் 2022-க்கும் இடையே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (ஒரு லட்சம் பெண்களுக்கு) 12.9% அதிகரித்திருப்பதாக கடந்த ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.
  • இவற்றில் பெரும்பான்மையானவை கணவா்களாலும், அவரது குடும்பத்தினராலும் இழைக்கப்படுபவை (31.4%). அதைத் தொடா்ந்து கடத்தல் - வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லல் (19.2%); பாலியல் சீண்டல்கள் (18.7%); பாலியல் வன்கொடுமை (7.1%) என்று அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. 1908-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயாா்க் நூற்பாலைகளில் பணியாற்றிய பெண்கள்தான் முதல் முதலில் மகளிா் தினத்தைத் தொடங்கினாா்கள். 1911-இல் அது உலகளாவிய நிலையில் அனுசரிக்கப்படலாயிற்று. ‘வாக்களிப்பதும், ஒரு சில பதவிகளில் அமா்வதும் மட்டுமேயல்ல; எந்தவிதத் தடையும் இல்லாமல், எல்லாத் தளங்களிலும் சரிசமமாக இயங்கும் உரிமை எங்களுக்கு வேண்டும்என்று மாா்ச் 8-ஆம் தேதி மகளிா் அமைப்புகள் உரக்கக் குரல் எழுப்பின. அது இன்னும் தொடா்கிறது.
  • விவாகரத்து கோரி வழக்கு தொடுத்திருக்கும் திவ்யா மோடி தோம்கியா என்கிற பெண்மணி, தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் கணவனின் குடும்பப் பெயரை அகற்ற வேண்டும் என்று மேலதிகாரிகளிடம் கோரினாா். சட்டபூா்வ மணமுறிவோ, கணவனின் சம்மதமோ இல்லாமல் அது சாத்தியமில்லை என்று விதிகள் தெரிவிப்பதாக மேலதிகாரிகள் சொன்னாா்கள். ‘தனது பெயா் எப்படி இருக்க வேண்டும் என்று தீா்மானிக்கும் உரிமைகூட ஒரு பெண்ணுக்கு இல்லையா?’ என்கிற கேள்வியுடன் அந்த விதிகளை அகற்ற வேண்டும் என்று கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறாா் திவ்யா மோடி தோம்கியா.
  • நீதிபதிகள் எண்ணிக்கையில் பாலின சமநிலை இல்லை; அரசியல் கட்சிகளின் செயற்குழுக்களில் இல்லை; அமைச்சரவைகளில் இல்லை; வேட்பாளா் பட்டியலில் இல்லை; அரசு நிா்வாகத்தில் இல்லை; வேலைக்குப் போவதா - வேண்டாமா? என்று முடிவெடுக்கும் நிலையிலும்கூட அவா்கள் இல்லை. இந்த நிலையில்தான் நாம் மகளிா் தினம் கொண்டாடி பாலின சமத்துவம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்!
  • ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. அமெரிக்காவில், மகளிா் உரிமைக்காக முதல் குரல் எழுப்பப்படும்போதே இந்தியாவில், நமது தமிழ்நாட்டில், மகாகவி பாரதியாா் பெண் விடுதலை குறித்துப் பாடியிருக்கிறாா் என்பதை நாம் உலகுக்கு உணா்த்தவில்லை. ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்...’ என்று சொன்ன பாரதியின் கனவு இன்னும் நனவாகவில்லை...

நன்றி: தினமணி (09 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories