TNPSC Thervupettagam

கருக்கலைப்பு திருத்தச்சட்டம்

November 1 , 2023 439 days 661 0
  • மருத்துவக் கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021, ஒவ்வொரு பெண்ணின் இனப்பெருக்க உரிமையை உறுதி செய்யும் விதமாகவும் அவர்களது கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மணமாகாதவர்கள், தனிப் பெண்கள் ஆகியோரையும் உள்ளடக்கும் விதமாக, மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டத்தில் (1971) திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தச் சட்டம், கருக்கலைப்பில் ஈடுபடுகிற மருத்துவருக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிப்பதுடன் மருத்துவரீதியிலான கருக்கலைப்பைக் குற்றமற்றதாகவும் ஆக்குகிறது. பாதுகாப்பான, சட்டபூர்வமான கருக்கலைப்புக்கும் இது வழிவகுக்கிறது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு கருக்கலைப்பில் ஈடுபடுவதையும் இது தடை செய்கிறது.

யாரெல்லாம் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்?

  • குழந்தை வேண்டாம் என்றோ அல்லது குடும்பக்கட்டுப்பாட்டின் நிமித்தமோ ஒரு பெண் அல்லது அவரது இணையர் இருவரில் யாராவதுஒருவர் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தி,அது செயல்படாமல் போனால் அதன் மூலம்உருவான கருவைச் சட்டப்படி கலைக்கலாம். குழந்தை வேண்டாம் என்று முடிவுசெய்த பிறகு உருவாகிற கருவால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவரது மன நலத்தைப் பாதிக்கும் என்பதால் அந்தக் கருக்கலைப்பைச் சட்டம் அனுமதிக்கிறது.
  • பாலியல் வல்லுறவு, முறையற்ற உறவு ஆகியவற்றால் உண்டான கருவைச் சட்டப்படி கலைக்கலாம். அதேபோல் எளிதாகப் பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகள், 18 வயதுக்கு உட்பட்டோர் ஆகியோரும் இந்தச் சட்டத்தின்படி மருத்துவரீதியிலான கருக்கலைப்பைச் செய்துகொள்ளலாம். கருவுற்ற பிறகு கணவனை இழந்த பெண்களும் விவாகரத்து செய்துகொண்ட பெண்களும் இந்தச் சட்டத்தின்கீழ் 24 வாரங்களுக்கு உள்பட்ட கருவைக் கலைக்க வழியுண்டு.

கருக்கலைப்புக்கான கால அளவு

  • 20 வாரம் வரையிலான கருவைக் கலைப்பதற்கு, பதிவுபெற்றமருத்துவர் ஒருவரது ஒப்புதல் தேவை. 20 முதல் 24 வாரம் வரையிலான கருவைக் கலைக்க இரண்டு மருத்துவர்களின் ஒப்புதல் தேவை. 24 வாரங்களுக்கும் மேல் கரு வளர்ந்தால், அது தாய்அல்லது சேயின் உடல்/மன நலனைப் பாதிக்கும்பட்சத்தில் மாநில அளவிலான மருத்துவக் குழுவின் ஒப்புதலோடு கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். இந்த மருத்துவக் குழுவானது குறைந்தது ஒரு மகப்பேறு மருத்துவர், ஒரு குழந்தை நல மருத்துவர், ஒரு கதிரியக்க நிபுணர் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
  • தீவிர உடல்/மன நலக் குறைபாடுகளோடு குழந்தை பிறக்கும் ஆபத்து இருந்தாலும் 24 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க இந்தச் சட்டத்தில் வழியுண்டு. வயிற்றில் இருக்கும் கரு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவக் குழு பரிந்துரைத்தால், கருவின் வயதுக்குக் கால வரம்பு இல்லை. எத்தனை வாரக் கருவையும் மருத்துவ முறைப்படி கலைக்கலாம்.

ரகசியக் காப்பு

  • கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்ணின் பெயர், ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ரகசியமாகக் காக்கப்பட வேண்டும். சட்டபூர்வ அனுமதி பெற்றவருக்கு மட்டுமே அவை தெரிவிக்கப்பட வேண்டும். இதை மீறுகிறவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்கப்படும் அல்லது தண்டனை, அபராதம் இரண்டுமே விதிக்கப்படக்கூடும்.
  • காலத்துக்கேற்ற திருத்தங்கள்: மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 1971, மருத்துவக் கருக் கலைப்புச்சட்டம் 2021இன் முதன்மைச் சட்டமாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு உடல், மன, சமூக, மருத்துவரீதியிலான பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் முதன்மைச் சட்டத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘கணவன்’ என்று முன்பு குறிப்பிடப்பட்டது தற்போது ‘இணையர்’ என்று மாற்றப்பட்டுள்ளதால், மணமாகாத பெண்களும் தனித்து வாழும் பெண்களும் இந்தச் சட்டத்தின் மூலம் பயனடைய முடியும்.
  • 12 வாரங்களுக்கு உள்பட்ட கருவைக் கலைக்க, சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒப்புதல் மட்டும் போதுமானது. கணவரின் அனுமதி தேவையில்லை. 12 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க, சம்பந்தப்பட்ட பெண் அல்லது அவருடைய பாது காவலரின் அனுமதி போதும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளதால், அதற்கும் கணவரின் அனுமதி தேவையில்லை.

தெளிவான வழிகாட்டல் தேவை

  • ஒரு பெண்ணின் இனப்பெருக்க உரிமை, கண்ணியம், அந்தரங்கம் ஆகிய அனைத்தும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அரசமைப்புக் கூறு 21 சொல்கிறபாகுபாடற்ற கண்ணியத்துடன் வாழும் உரிமைக்குள் அடக்கம் என்று கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மணமாகாத பெண்களுக்கும் மணமான பெண்ணைப் போலவே குழந்தை பெற்றுக்கொள்வது அல்லது கருவைக் கலைப்பது சார்ந்து முடிவெடுக்க உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளது.
  • தனக்கு விருப்பம் இல்லாத கருவை ஒரு பெண் சுமப்பதில் இருந்து மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 2021 பாதுகாக்கிறது என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும், ‘விருப்பமின்மை’ மட்டுமே கருக்கலைப்புக்கான காரணமாக ஏற்றுக்கொள்ளப்படாத சூழலும் நிலவுகிறது. இதுபோன்ற சூழலில் மருத்துவரின் ஒப்புதலே அனைத்தையும் தீர்மானிக்கிறது.
  • தனது 26 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய பெண்ணின் வழக்கு வேறொரு விஷயத்தை முன்வைக்கிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பு சீராக இருப்பதால், ஒன்று அதன் துடிப்பை நிறுத்த வேண்டும் அல்லது குறைப்பிரசவமாக முன்கூட்டியே குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று மருத்துவக் குழு சொல்லியதைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் பெண்ணின் தேர்வா, குழந்தையின் உயிரா என்பது சட்டத்தில் விரிவான விளக்கத்தைக் கோருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories